Translate

Tuesday 18 October 2011

உச்சநீதிமன்ற விசாரணையில் மூவர் தூக்கு தண்டனை: தில்லியில் வைகோ

சென்னை, அக்.18: மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் பெற்றதை அடுத்து, அக்.19ம் தேதி நடக்கும் விசாரணையில் கலந்துகொள்வதற்காக வைகோ தில்லி செல்கிறார் என்று மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...



பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. ஆனால், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து நீக்கி, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, சிலரால் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.



அதன் மீது 19.10.2011 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று, நீதிபதி சிங்வி நீதிமன்றம் அறிவித்து இருந்தது. செப்டம்பர் 28 ஆம் தேதி வைகோ டெல்லி சென்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியைச் சந்தித்தார். இந்த வழக்கு குறித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.



நீதிபதி சிங்வி விடுமுறையில் செல்வதால், இவ்வழக்கு 19 ஆம் தேதி எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும், சில நாட்கள் கழித்து விசாரணைக்கு வரும் என்றும், 17.10.2011 அன்று டெல்லியில் இருந்து தகவல் சொல்லப்பட்டது.



இன்று 18.10.2011 கலிங்கப்பட்டியில் இருந்த வைகோவுக்கு மாலை 4.30 மணி அளவில், நாளை இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி டத்தோ, நீதிபதி சந்திரமௌலி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது என்று தகவல் கிடைத்தது.



உடனே, வைகோ தொலைபேசி மூலம் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடம் தொடர்புகொண்டு, நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள இந்த வழக்கில் அவசியம் நீங்கள் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை பங்கேற்கச் செய்வதற்காக,  இன்று தகவல் கிடைத்த உடனே, கலிங்கப்பட்டியில் இருந்து வைகோ புறப்பட்டு மதுரைக்கு வந்து, பம்பாய் வழியாக விமானம் மூலம் டெல்லிக்குப் பயணமாகின்றார்.



இதுவரை எந்தத் தேர்தலிலும் வைகோ வாக்கு அளிக்காமல் இருந்தது இல்லை. நாளை அவரது சொந்த கிராமத்தில் வாக்கு அளிக்க வேண்டிய ஜனநாயகக் கடமை இருந்தாலும், மூன்று தமிழர் உயிரைக் காக்கும் முயற்சி அதைவிட முக்கியமானது எனக் கருதி, வைகோ தில்லி செல்வதாக மதிமுகவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment