கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: ஒரு கண்ணோட்டம்: வெற்றிவாகை சூடப்போவது யார்?
இலங்கையின் வட மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபைகளுக்கு இவ்வருடம் செப்ரெம்பர் 8ஆம் திகதி தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களைப் பொறுத்தவரையிலும் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் கிழக்குத்தேர்தலே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது எனலாம். அதற்கொரு காரணம், புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக அகற்றப்பட்ட பின்னர் 2008ல் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முதன்முதலாக நடாத்தப்பட்ட போது, அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அதிகாரத்தைக ; கைப்பற்றி 4 வருடங்கள் மாகாணசபை நிர்வாகத்தை நடாத்தியதும், அத்தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடுவதும் ஆகும்.
அத்துடன் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதும் இன்னொரு காரணமாகும். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் என மூவின மக்களும் கலந்து வாழும் ஒரு மாகாணமாகும்.
பின்வரும் விபரங்கள் கிழக்கு மாகாணம் பற்றிப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
கிழக்கு மாகாணம் முதன்முதலாக உருவாக்கப்பட்டது 1833ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆகும்.
மாகாணத்தின் பரப்பளவு – 9996 சதுர கிலோமீட்டர்.
உள்ளடங்கும் மாவட்டங்கள் - மட்டக்களப்பு, திரிகோணமலை, அம்பாறை
மாகாணத்திலுள்ள பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை – 10
மாகாணத்தின சனத்தொகை – 15,47,306 (2012 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி)
மாகாண இன விகிதாசாரம்
தமிழர் – 5,90,132 (40.39 வீதம்)
முஸ்லீம்கள ; - 5,49,857 (37.64 வீதம்)
சிங்களவர் – 3,16,101 (21.64 வீதம்) (இது 2007ஆம் ஆண்டு சனத்தொகைக்
கணிப்பீட்டின அடிப்படையிலானது)
மாகாணசபை அமைக்கப்பட்டது – 1987ஆம் ஆண்டு.
மாகாணசபை உறுப்பினர்களின எண்ணிக்கை: 37
2008 முதலாவது மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின்படி கட்சிகள் பெற்ற உறுப்பினர் தொகை :
பொதுசன ஐக்கிய முனனணி – 20
ஐக்கிய தேசிய கட்சி – 15
ஜே.வி.பி. – 1
தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி – 1
இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்த போதிலும், வேட்பாளர் பங்கீட்டில் எழுந்த
முரண்பாட்டால் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. இது அரசாங்கக் கட்சியின் வெற்றி வாயப்பை முற்றாகப் பாதிக்க வாய்ப்பு இல்லையென்ற போதிலும், ஓரளவு பாதிப்பை உண்டுபண்ணத்தான் செய்யும். அதேநேரத்தில் தேர்தல் முடிந்த பின்னர் அரசாங்கக் கட்சியும் முஸ்லீம் காங்கிரசும் இணைந்து மாகாணசபை நிர்வாகத்தை நடாத்துவதற்கான சாத்தியங்களும் உண்டு.
மறுபக்கத்தில், கடந்த மாகாணசபைத் தேர்தலைப் போன்று இம்முறையும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் தற்போதைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை எவ்வளவு தூரம் கவர்ந்து இழுக்கும் என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. கடந்த 4 ஆண்டுகளில் அக்கட்சியின் நிர்வாகத்தில் மாகாணசபை ஓரளவு சிறப்பாகச் செயல்பட்டு பல அபிவிருத்தித் திட்டங்கள் முனனெடுக்கப் பட்டிருப்பினும், 2008 தேர்தலின்போது அக்கட்சி வெற்றி பெறுவதற்கு இருந்த சூழல் இப்பொழுதும் அப்படியே இருப்பதாகச் சொல்ல முடியாது.
2008ல் புலிகளை கிழக்கு மாகாணத்திலிருந்து முற்றாக விரட்டியடித்த பின் புதிய சூழல் ஒன்று உருவாகி இருந்தது. புலிகளின் கொடுங்கோல் பிடியிலிருந்து விடுபட்ட கிழக்கு மக்கள், ஜனநாயகச் சூழலையும், அபிவிருத்தியையும், நிம்மதியான வாழ்வையும் எதிர்பார்த்தனர். ஆனால் புலிகள் போனபின்பும், முன்னாள் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளும், கருணா – பிள்ளையான் அதிகார மோதலும் சிறிது காலம் மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கியது. அத்துடன் மாகாணசபை நிர்வாகத்தின் சமூகமான செயற்பாட்டுக்கு மாகாண ஆளுநர் ஊடாகச் சில வேளைகளில் மத்திய அரசாங்கம் போட்ட முட்டுக்கட்டைகளும் இடையிடையே ஏற்பட்ட வண்ணம் இருந்தன. இவையெல்லாம் அரசின் மீதும், அரசுடன் சேர்ந்தியங்கிய மாகாணசபை மீதும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தின.
அத்துடன் 1987ல் மாகாணசபை உருவாக்கப்பட்டபோது தமிழர்களின் அப்போதைய பிரதான தலைமையான தமிழர் விடுதலைக் கூட்டணி அதில் பங்கு வகிக்கவில்லை. அதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்த போதும், 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அது பங்குபற்றவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அப்போதைய சூழலில் புலிகள் கிழக்கிலிருந்து விரட்டப்பட்டாலும், வன்னியில் நிலை கொண்டிருந்ததால், அவர்களை மீறி தேர்தலில் பங்குபற்றினால் அவர்கள் கூட்டமைப்பினருக்கு தண்டனை வழங்குவார்கள் என்ற அச்சம் இருந்தது.
அத்துடன் கூட்டமைப்புத் தலைமையின் முன்னோடிகள் முதலில் ஐம்பதுக்கு ஐம்பது, பின்னர் சமஸ்டி, பின்னர் தனிநாடு எனக் கோரியவர்கள் என்ற வகையில், மாகாணசபைத் தேர்தலில் - அதுவும் வடக்கும் கிழக்கும் பிரிந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா என்ற தயக்கம் அன்று கூட்டமைப்பினருக்கு இருந்தது.
ஆனால் இப்பொழுது புலிகளும் இல்லை. இலங்கையில் இனப்பிரச்சினைக்கு மாகாணசபை
அடிப்படையில்தான் தீர்வு என்ற நிலையும் உருவாகிவிட்டது. எனவே இனியும் தமிழ் கூட்டமைப்பு நடைமுறை அரசியலிலிருந்து விலகி நின்றால், மக்களின் தேவைகளை அவர்களால் ஈடுசெய்ய முடியாது போய், மக்கள் அவர்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். அதனால்தான் இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பும் களமிறங்கியுள்ளது.
அதன் தேர்தல் பிரவேசம் அரசாங்கம் கிழக்கில் பெறப்போகும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பாதிக்கவே செய்யும். அத்துடன் வடக்கு மாகாணசபைத் தேர்தல் 2013 செப்ரெம்பரில்தான் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள சூழலில், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கமும் தமிழ் கூட்டமைப்பும் பெறப்போகும் தமிழ் மக்களின் வாக்குகள், வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை நாடி பிடித்துப் பார்ப்பதாகவும் அமையக்கூடும்.
கிழக்கைப் பொறுத்தவரையில், அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே பெரும்பாலும் பெரும்பான்மை பலம் பெற்று மாகாணசபை நிர்வாகத்தைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தேர்தலில் போட்டியிடும் ஏனைய இரண்டு பிரதான கட்சிகளைப் பொறுத்தவரையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரும், முஸ்லீம் காங்கிரசுக்கு முஸ்லீம் மக்களில் ஒரு பகுதியினரும் மட்டுமே வாக்களிக்கக்கூடிய சூழலே உள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் என மூவின மக்களும் வாக்களிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அம்பாறை மற்றும் திரிகோணமலை மாவட்டங்களில் வாழும் சிங்கள மக்களில் பெரும்பாலோர் அரசாங்க கட்சிக்கே வாக்களிக்கும் சூழல் உள்ளது. அத்துடன் அரசில் அமைச்சர்களாக உள்ள அதாவுல்லா, றிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோருக்கு கிழக்கில் கணிசமான செல்வாக்கு உள்ளதால், அவர்களது ஆதரவாளர்களும் அரசாங்கக் கட்சிக்கே வாக்களிப்பர் என நம்பலாம். சந்திரகாந்தன் சிவநேசதுரை, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் தமிழ் ஆதரவாளர்களும் அரசாங்கக் கட்சிக்கே வாக்களிப்பர் என்ற போதிலும், அந்த வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்குகளாக அமையுமா என்பது கேள்விக்குறியே.
அதேவேளை இந்தத் தேர்தல் சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புத் தலைமையும், அதன் பிரதான கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சித் தலைமையும் பாரதூரமான தவறுகளை விட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான முஸ்லீம் காங்கிரசுக்கான வேட்பாளர் ஒதுக்கீட்டில், அரசாங்கத் தலைமை விட்டுக்கொடுக்காமல் இருந்து அதைத் தனிவழி போக வைத்தது மிகவும் புத்திசாலித்தனமற்ற ஒரு நடவடிக்கையாகும்.
அதேவேளை முஸ்லீம் காங்கிரஸ் தனிவழி போகத் தீர்மானித்த பின்னர், அதற்கு என அரசு ஒதுக்கிய 11 வேட்பாளர் தொகையை அரசின் ஏனைய பங்காளிக் கட்சிகளுக்காவது கொடுத்திருக்க வேண்டும். குறிப்பாக அரசில் அங்கம் வகிக்கும் சோசலிசக் கூட்டமைப்புக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பனவற்றுக்கு ஒரு வேட்பாளர் இடமாவது ஒதுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக அக கட்சிகளின் தலைவர்களும் அமைச்சர்களுமான டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கூட்டாக தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச செயலாளரான அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் அக்கட்சிகள் காலம் சென்ற விஜயகுமாரதுங்க ஸ்தாபித்த சிறீலங்கா மக்கள் கட்சியின் விளக்கு சின்னத்தில் இத்தேர்தலில் தனியாகப் போட்டியிடுகின்றன.
அதேபோல, அரசாங்கத்தின் இன்னொரு பங்காளிக் கட்சியான அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணிக்கும் வாய்ப்புக் கொடுக்காததால், அவரது கட்சி திரிகோணமலை மாவட்டத்தில் தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்த வகையான தவறு சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலிலும் நடந்துள்ளது. அங்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும், முன்பு அரசின் பங்காளிக் கட்சியாக இருந்த மலையக மக்கள் முன்னணியையும், ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் மக்களுக்கான தரகரான மனோ கணேசன் வளைத்துப் பிடிப்பதற்கு அரச தலைமை வாய்ப்புக் கொடுத்துள்ளது. அரச தலைமையின் இத்தகைய செயற்பாடுகள், எதிர்காலத்தில் அதன் ஸ்திரத்தன்மைக்கும் தேர்தல் வெற்றிகளுக்கும் பெரும் பாதிப்பாக அமையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதன் முன்னெச்சரிக்கையாக கிழக்கு மற்றும் சப்பிரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள் அமைந்தாலும் வியப்பதற்கில்லை.
No comments:
Post a Comment