Translate

Monday 19 March 2012

இலங்கையில் இனக் கலவரம் ஏற்படுமானால் இலங்கை அரசே பொறுப்பேற்கவேண்டும் : அரியநேத்திரன்


இலங்கையில் மீண்டுமொரு இனக்கலவரம் ஏற்படுமாகவிருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களும் அவர் அங்கம்வகிக்கும் அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெறும் 19வது மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கெதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பவுள்ள பிரேரனை நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் அண்மையில் கூறியுள்ள கருத்து தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்
ஜெனிவாவில் நடைபெறும் 19வது மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கெதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பவுள்ள பிரேரனை நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் கூறியுள்ள கருத்து இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காலம் காலமாக இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது இனக்கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் ஆட்சிசெய்த அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர்கள்தான் என்பது அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களுடைய கருத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறுதான் கடந்த 1956, 1983ம் ஆண்டுகளில்; தமிழர்கள் மீதான இனக்கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் அப்போதைய அரசாங்கத்தில் அங்கம்வகித்த அமைச்சர்களும் அரசாங்கமும்தான். ஒரு போதும் சிங்கள மக்களோ அல்லது வேறு இன மக்களோ தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமாக இருந்திருக்கவில்லை எனவே இன்று மீண்டும் தமிழர்கள் மீது சிங்களவர்களை தூண்டிவிட்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பெறுப்புவாய்ந்த அமைச்சர் அவர்களினால் கூறப்பட்டுள்ள இந்த கருத்தை தமிழ் மக்களாகிய நாம் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது இவருடைய இந்தக் கருத்து குறித்து அரசாங்கம் உடன்படுகின்றதா? என்பதை ஜனாதிபதியவர்கள் தெளிவுபடுத்தவேண்டும். ஏனெனில் சமாதானம் ஏற்பட்டுள்ளது என்று கூறி வடபகுதிமக்கள் தென்பகுதிக்கு செல்லலாம் தென்பகுதி மக்கள் வடபகுதிக்கு செல்லலாம் என்று கூறும் அரசாங்கம் தற்பொது ஜெனிவா விடயத்தை காரணம் காட்டி தமிழர்களை வற்புறுத்தி ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பதும், ஆலயங்களில் பூசை செய்யுமாறு வற்புறுத்துவதும் என தமிழர்கள் மீதாக கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. இன்நிலையில் அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்திலேயே தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக ஆதரித்துள்ள நிலையில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுவதாகவுள்ளதோடு தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அச்சசூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே எதிர்வரும் நாட்களில் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை காரணமாகக் கொண்டு இலங்கையில் ஒரு இனக்கலவரத்தை தூண்டிவிட்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ அதற்கான முழுப்பொறுப்பையும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அவரது அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் என நாங்கள் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment