Translate

Thursday 22 March 2012

திருத்தத்துக்கு இடமேயில்லை; இந்தியா உட்பட முக்கிய நாடுகளின் கோரிக்கையை நிராகரித்தது அமெ.


திருத்தத்துக்கு இடமேயில்லை; இந்தியா உட்பட முக்கிய நாடுகளின் கோரிக்கையை நிராகரித்தது அமெ.
news
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் திருத்தங்கள் செய்யப்படவேண்டுமென இந்தியா உட்பட பல முக்கிய நாடுகள் இறுதி நேரத்தில் முன்வைத்த யோசனையை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று "உதயனி'டம் தெரிவித்தன.

 
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை இன்று விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள பரபரப்பான சூழ்நிலையில், அமெரிக்காவின் இந்த நிராகரிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
முன்னதாக இந்தப் பிரேரணையை ஆதரிக்கப் போவதாக இந்தியா அறிவித்திருந்தது. அதேசமயம், இலங்கையின் கோரிக்கைக்கமைய, அமெரிக்காவின் பிரேரணை மென்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென இந்தியா இராஜதந்திர ரீதியில் வலியுறுத்தியிருந்தது. 
 
இந்தப் பின்னணியின் கீழ் இந்தியா உட்பட்ட சில முக்கிய நாடுகள் ஒன்றிணைந்து மேற்படி பிரேரணை திருத்தங்களுடன் நிறைவேற்றப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தன. 
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அமுல்படுத்துவது தொடர்பில் கண்காணிப்பதற்காக குழுவொன்று அமைக்கப்படுமாயின் அது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில்  பிரேரணை திருத்தப்பட வேண்டுமென்ற யோசனையையே அமெரிக்கா நிராகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தியா உட்பட்ட நாடுகளின் இந்தத்திருத்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கு இராஜதந்திர ரீதியாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் அறியமுடிந்தது.

No comments:

Post a Comment