இலங்கை குறித்து இந்தியா அதிருப்தி- சிவசங்கர் மேனன் தெரிவிப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் நேற்று, ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பின் போதே சிவ்சங்கர் மேனன் அதிருப்தி வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக இந்திய அரசாங்கம் அதிக உள்நாட்டு அழுத்தங்களுக்குள்ளாகுவதாக சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அத்துடன் அரசியல் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைய வேண்டும் எனவும் சில மாதங்களுக்கு முன்னர், இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் வலியுறுத்தியிருந்தார்.
அரசியல் நல்லிணக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை அதிகார பீடங்கள் தனக்கு விளக்கியதாக, ஊடகவியலாளர்களுடன் பேசிய சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார்.
மேலும், இது இலங்கையர்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம். தேவையான போது மாத்திரம் இந்தியா உதவும். இனப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு இலங்கையிலேயே தீர்வு உருவாக வேண்டும்.
அனைத்து பிரஜைகளும் சமத்துவமாகவும் நீதியாகவும் கௌரவத்துடனும் சுய மரியாதையுடனும் வாழக்கூடிய ஐக்கியமான இலங்கையை இந்தியா எப்போதும் ஆதரித்து நிற்பதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment