Translate

Saturday 4 August 2012

வட.கிழக்கில் திட்டமிட்ட இன அழிப்பினை மேற்கொள்ளும் மஹிந்த அரசு

வட.கிழக்கில் திட்டமிட்ட இன அழிப்பினை மேற்கொள்ளும் மஹிந்த அரசு
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனவும் இம்மாகாணங்களின் இனப்பரம்பலை முற்றாக மாற்றியமைக்கும் விதத்தில் பெருமான்மையினத்தவரை குடியேற்றும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 
 
பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வார்ட்டன் தலைமையிலான பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று மாலை திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் உள்ள யங்கிள் பீச் ஹோட்டலில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்த சந்திப்பில் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி மற்றும் வேட்பாளர்களான டாக்டர் திருமதி இந்துராணி தர்மராஜா, ந.குமணன், கு.இரத்தினகுமார் ஆகியோரும் பங்குபற்றினர்.

இதன்போது தொடர்ந்தும் பிரித்தானிய எம்.பி.க்களுடன் கலந்துரையாடிய சம்பந்தன்,  சிறிலங்காத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை பற்றியும் பிரித்தானியாவிடமிருந்து சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளையும் விரிவாக எடுத்துரைத்தார். 

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் சிறுபான்மை இன மக்களின் நிலம் ஆகியவற்றை அபகரிக்கும் நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஊக்கமளிப்பதாகவும் இதன்போது சம்பந்தன் குறிப்பிட்டார். 

பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்ற பத்து உறுப்பினர்களில் ஒன்பது பேர் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வட அயர்லந்தைச் சேர்ந்த ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment