ஐ.நா. தீர்மானம் வெற்றி பெறுமா?: இலங்கைக்கு ஆதரவு 25, எதிர்ப்பு 22
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது ராணுவம் போர் விதிமுறைகளை மீறி விடுதலைப்புலிகளையும், அப்பாவி தமிழர்களையும் கொன்று குவித்தது. எனவே இலங்கை போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், நார்வே, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா, ரஷியா உள்ளிட்ட நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன.
ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வருகிற 22-ந்தேதி (இந்திய நேரப்படி 23-ந்தேதி அதிகாலை) ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.
தற்போதைய நிலவரப்படி இலங்கைக்கு 25 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கு 22 நாடுகள் மட்டுமே ஆதரவு உள்ளது.
எனவே இலங்கை மீதான போர்க்குற்றம் தீர்மானம் வெற்றி பெறுமா? என கேள்விக்குறி எழுந்துள்ளது. சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி இறுதி கட்ட போரின் போது இலங்கை சிங்கள வெறி ராணுவத்தின் அட்டூழியங்களை வீடியோவாக வெளியிட்டது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனவே அமெரிக்காவுக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தீர்மானத்தை வெற்றிபெற செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக 100 சிறப்பு பிரதிநிதிகளை ஜெனீவா அனுப்பியுள்ளது.
அதே நேரத்தில் இலங்கையும் இந்த தீர்மானத்தை தோற்கடித்த பகீரத பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது. தனது பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அனுப்பி ஆதரவு திரட்டி வருகிறது.
No comments:
Post a Comment