Translate

Thursday 22 March 2012

ஐ.நா. முடிவு; நேற்று முழுநாளும் விவாதம் சூடு பறந்தது; இன்று பகல் வாக்கெடுப்பு


ஐ.நா. முடிவு; நேற்று முழுநாளும் விவாதம் சூடு பறந்தது; இன்று பகல் வாக்கெடுப்பு
news
 ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை மீதான விவாதம் சுவிஸ் நேரப்படி நேற்றுக் காலை 9.30 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப. 2.30 மணி) ஆரம்பமானது. எனினும் நேற்று மாலை வரை இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவை அமெரிக்கா மனித உரிமைகள் சபையிடம் வாக்களிப்புக்காகக் கையளிக்கவில்லை.


 
தீர்மானத்தின் இறுதி வரைவு இலங்கை நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கே சபையில் சமர்ப்பிக்கப்படுவதாக இருந்தது. இறுதித் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டால் அநேகமாக இன்று அதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என ஜெனிவா இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
 
அதற்கிடையில் நேற்று ஜெனிவாவில் 47 நாடுகள் கலந்துகொண்ட இலங்கை மீதான தீர்மானத்தின் பிரதான விவாதத்துக்கு வெளியே உப நிகழ்வாக மனித உரிமை அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் பரப்புரை நிகழ்வும் நடைபெற்றது. இதிலும் வெளிநாடுகளில் இருந்து பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
அதேபோன்று நேற்று முன்தினமும் அங்கு இலங்கை தொடர்பில் இரண்டு உப நிகழ்வுகள் நடைபெற்றன. முதல் நிகழ்வு பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
 
இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அவர்கள் விளக்கிக் கூறினர். கடத்தல்களும் காணாமற்போதல்களும் இலங்கையில் இன்றும் தொடர்வதாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களை இலங்கை அரசு தேசத்துரோகியென முத்திரை குத்தி ஆபத்தை விளைவிப்பதாகவும் அவர்கள் விளக்கினார்கள்.
 
இலங்கையில் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள் நிலவுகின்றன எனவும் ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு கிழக்கு தமிழர்களை பலவந்தப்படுத்தி அழைத்துக் கொண்டு வருவதாகவும், இதன் மூலம் அவர்களின் சுயவிருப்புக்கு எதிராக, மனித உரிமை மீறல்களில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் அங்கு சுட்டிக்காட்டினர்.
 
ஜெனிவா வளாகத்தில் உள்ள 21ஆவது அறையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அங்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், இலங்கையில் இருந்து வந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தாம் நாடு திரும்பும்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அச்சுறுத்தல்கள் குறித்து விளக்கினர். அதேபோன்று சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட அரசினால் ஏற்படுத்தப்படும் தடைகள் குறித்தும் எடுத்துக்கூறினர்.
 
இதனை அடுத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தடைகளைக்களையும் வகையில் அரசை எச்சரிக்கக்கூடியதான அறிக்கை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் சபை வெளியிடும் என்று நவநீதம்பிள்ளை நம்பிக்கை வெளியிட்டார்.
 
இரண்டாவது உப நிகழ்வில் இலங்கையில் காணாமற் போனோர் விவகாரம் குறித்து பேசப்பட்டது. இதில் இலங்கையில் காணாமற்போன பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி கலந்து கொண்டு தனது கணவருக்கு ஏற்பட்ட நிலை குறித்து விளக்கினார். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை எனவும் அவர் அங்கு கூறினார். 
 
இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட இலங்கை அரசின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இராஜ தந்திர சபையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை அவர்கள் அங்கு பயன்படுத்தினர் என்று ஜெனிவா இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment