Translate

Monday 19 March 2012

முல்லைத்தீவில் இன்று மாலை மக்கள்மீது கடல் படையினர் கண்மூடிதனமான முறையில் தாக்குதல்


முல்லைத்தீவில் இன்று மாலை மக்கள்மீது கடல் படையினர் கண்மூடிதனமான முறையில் தாக்குதல்
முல்லைத்தீவு மாவட்டம் கருநாட்டுக் கேணிக்கும் கொக்கிளாய்க்கும் இடையில் அமைந்துள்ள சிறுவில் வெட்டை என்னும் இடத்தில் இன்று மாலை 5.30மணியளவில் மாடுமேய்த்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது கடற்படையினர் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

முல்லைத்தீவு மாவட்டம் சிறுவில்வெட்டை கிராமத்தில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த பெதுமக்கள்மீது கடற்படையினர் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ஒரு சிறுவன் சத்தியெடுத்து கீழே விழுந்த பின்னரும் அவன்மீது கடற்படையைச் சேர்ந்த ஒருவர் சப்பாத்துக்காலால் உதைத்துள்ளார்.
இதனைப்போன்றே முதியவர் ஒருவர் அடிதாங்க முடியாமல் கீழே விழுந்ததுடன், கடற்படை சிப்பாயின் காலைப்பிடித்து அடிக்க வேண்டாம் என்று மன்றாடியபோதும் அவர்மீது வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதலில் நான்கு கடற்படையினர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பின்னர் மேலும் மூன்று கடற்படையினரும் ஆக ஏழு கடற்படையினர் ஒன்பது பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அடிதாங்க முடியாமல் பொதுமக்கள் தமது மாடுகளை மீண்டும் பட்டிக்குள் அடைத்தபின்னரும் படையினர் பட்டிக்குள்ளும் வந்து அவர்களைக் கட்டிப்போட்டு மீண்டும் தாக்கியுள்ளனர். இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எனக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கடற்றொழில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பவற்றையே தமது ஜீவனோபாயத் தொழிலாக நடத்திவருகின்றனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கொக்கிளாய்பகுதியில் மீன்பிடிப்பதற்கு கொக்கிளாயைச் சேர்ந்த மீள்குடியேறிய மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். இந்நிலையில், இன்று மாடுமேய்த்துக்கொண்டிருந்தவர்கள்மீது எதுவிதக் காரணமுமின்றித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகின்றது. இச்செயலைச் செய்தவர்கள்மீது சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
இதற்கு முன்பும் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஒருபுறம் நல்லிணக்கம் பேசிக்கொண்டு மறுபுறத்தில் தமிழ் மக்களின்மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன் இனிமேலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியும் உத்தரவாதமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
இத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களால் இந்நாட்டில் ஒருபோதும் நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்படாது என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் மீள்குடியேறிய மக்கள் மிகவும் அச்சவுணர்வுடன் காணப்படுகின்றனர்.
தொடர்ந்து தமது காணிகளில் இருப்பதற்கே அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே அப்பாவித்தமிழ் மக்களின்மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும் என்பதே முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு மக்களின் இந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment