Translate

Wednesday 14 March 2012

இலங்கையில் யுத்த வெறி பிடித்த பேய்கள்!

இலங்கையில் யுத்த வெறி பிடித்த பேய்கள்!

யுத்த வெறி பிடித்த பேய்கள் இலங்கையை தொடர்ந்தும் வேட்டையாடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று செய்தி பிரசுரித்து உள்ளது பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிகை.

இச்செய்தியுடன் சேர்ந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புகைப்படமும் பிரசுரிக்கப்பட்டு உள்ளது.


-போர் ஒரு அசிங்கம் பிடித்த வேலை. சிவில் யுத்தம் மிக மிக அசிங்கம் பிடித்தது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த சிவில் யுத்தத்தை தவிர இதற்கு வேறு ஒரு சான்றும் தேவை இல்லை. மூன்று தசாப்த கால மோதலை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள்.

புள்ளிவிபரங்களின்படி யுத்தத்தின் கடைசி மாதங்களில் 40,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் அநேகர் பரஸ்பர துப்பாக்கிச் சூடுகளுக்கு இடையில் சிக்கிய சிவிலியன்கள்.

யுத்த வெறி பிடித்த பேய்கள் எம்மை தொடர்ந்தும் வேட்டையாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையால் எதிர்வரும் புதன்கிழமை ஒளிபரப்பப்பட உள்ளது இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற வீடியோ.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் அரச படையினரால் பிடிக்கப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார் என்று இவ்வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இக்குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட செய்திகள் மிகுந்த பரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அமெரிக்காவால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு இருக்கின்ற சூழலில் இவ்வீடியோ வந்திருக்கின்றது. இப்பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டு அடுத்த வாரம் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. போர்க் குற்றச்சாட்டை இலங்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்பது பிரேரணையில் முன்வைக்கப்பட்டு இருக்கின்ற கோரிக்கை.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்தான். உலக நாடுகளால் தடை செய்யப்பட்டவர்கள். ஆனால் இலங்கை இராணுவம் போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறியே ஆக வேண்டும் என்று உலகம் வேண்டி நிற்கின்றது.

ஆனால் போர்க் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு நிராகரித்து இருப்பது அதிசயம் அல்ல. போரில் சம்பந்தப்பட்டு இருந்திராத பல்லாயிரக் கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றமைக்கு அரச படையினர், புலிகள் ஆகிய இரு தரப்பினரும் பொறுப்பு என்று  ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை  கூறுகின்றது. இவ்வறிக்கையில் அரச படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு இருக்கின்ற குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரித்து உள்ளது.

போரில் புலிகளால் மிகவும் மிலேச்சத்தனமான பயங்கர தாக்குதல்கள் நடத்தப்பட்டதை உலகம் நன்கு அறியும். நூற்றுக் கணக்கான சிவிலியன்களும், ஆர். பிறேமதாஸ போன்ற உயர் மட்ட அரசியல்வாதிகளும் புலிகளால் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை தொடர்ந்து அரச படையினர் வழக்கமான யுத்த தர்மத்தை கை விட்டு விட்டார்கள். விமான தாக்குதல்கள், ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்கள் பாரதூரமாக கண்டபடி மேற்கொள்ளப்பட்டு பயங்கர அழிவுகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

புலிகளை அழித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெரிதும் பாரட்டப்படுகின்றார். இவர் தேசிய நல்லிணக்க ஆணைக் குழு என்று ஒன்றை அமைத்தார். ஆனால் இந்த ஆணைக் குழு அரச படையினரால் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படவே இல்லை என்று அறிக்கை இட்டு உள்ளது. இது ஒன்றும் அதிசயத்துக்கு உரிய விடயம் அல்ல. ஆனால் இவ்வாணைக் குழு புலிகளின் கொடூரச் செயல்களை அறிக்கை இட்டு உள்ளது. அத்துடன் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழிந்து உள்ளது.

இலங்கை தொடர்பான விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையில் மிகவும் சூடு பிடித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா ஆகியன இலங்கை விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கு நுழைக்கின்றன என்று குற்றம் சாட்டி கொழும்பு உட்பட பல இடங்களிலும் எதிர்ப்பு பன்னர்கள், சுலோக அட்டைகள் நாட்டப்பட்டு உள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசின் சர்வதிகார போக்கு ஐக்கிய நாடுகள் சபையால் கண்டிக்கப்படலாம். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வர கூடும். இது இலங்கையின் ஏற்றுமதி வியாபாரம், சுற்றுலாத் துறை ஆகியவற்றை பெரிதும் பாதிக்கும்.

இலங்கைக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு  வருகின்றது. இலங்கை பூராவும் ஏராளமான சீன நாட்டு சுற்றுலா பயணிகளை காண முடிகின்றது. ஆனால் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட இருக்கின்ற நடவடிக்கையின் பாதிப்பை சீனாவால் ஈடு செய்ய முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் 1987 – 1990 காலப் பகுதியில் இந்திய அமைதிப் படையினர்  1000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார். எனவே இந்தியாவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது காழ்ப்பு. ஆனால் இறுதி கட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமையையும், காயப்படுத்தப்பட்டமையும் இந்தியாவால் ஓரம் தள்ளி விட முடியாது. குறிப்பாக ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களுக்கு தமிழர்கள் உள்ளாகி இருக்கின்றனர். படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் ஆல் தி. மு. க தலைவர் கருணாநிதிக்கு கடந்த திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரவலத்தை துடைக்க முறையானவையும், உண்மையானவையுமான நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும் என்று உள்ளது. இதை வெறும் வார்த்தை ஜாலமாக கொள்ள முடியாது.

இந்திய நாடாளுமன்றத்தை நேற்று தி. மு. க செயல் இழக்க வைத்து விட்டது. இலங்கைக்கு எதிராக தீர்மானம் எடுப்பதில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றுடன் இந்தியா இணைய வேண்டும் என்று தி. மு. க எம்.பிகள் வலியுறுத்தினர். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவுக்கு சார்பான நிலை உள்ளது என சொல்ல முடியாது.


1990 களில் இந்தியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கண்டன வாக்கெடுப்புக்கள் அடிக்கடி நடத்தப்பட்டன. அதாவது ஷ்மீர் தொடர்பாக இந்தியா கொண்டிருக்கின்ற கொள்கையை எதிர்க்கின்ற நாடுகள் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் எடுக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தன.

எனவே அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டு இருக்கின்ற பிரேரணையை ஆதரிக்கின்ற பட்சத்தில் இலங்கைக்கு இன்று ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடிக்கு நிலைக்கு எதிர்காலத்தில் இந்தியா உள்ளாக நேரலாம் என்று இந்திய ஆட்சியாளர்கள் நியாயம் சொல்லக் கூடும்.-

No comments:

Post a Comment