Translate

Wednesday 14 March 2012


மீண்டும் ஏமாற்றியது இந்தியா; இலங்கையின் உறவை கருத்திற் கொண்டு ஜெனிவா முடிவு அமையும் - எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பு உள்ளது. அதனைக் கருத்திற் கொண்டே ஜெனீவா தீர்மானம் குறித்து முடிவெடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவால் தீர்மானம் கொணடுவரப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தில் இநதிய அரசின் நிலைப்பாட்டை விளக்க வலியுறுத்தி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை ஒன்றை விடுத்ததனர்.

இதனையடுத்து இன்று மதியம் மாநிலங்களவையில் விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து, இந்தியா இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பு இருக்கிறது. அந்த நட்புறவில் விரிசல்களை ஏற்படுத்தாத வகையில் இந்தியா தனது முடிவை எடுக்கும். என அறிவித்தார்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, மதிப்பு, நீதி மற்றும் சுயமரியாதை வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவையில் வெளிப்படுத்திய இந்த உணர்வினை அரசு கவனத்தில் கொள்ளும் என்று உறுதியளிக்கிறேன். ஐ.நா. மனித உரிமை தீர்மானம் குறித்து இறுதி முடிவெடுக்கும்போது, அதுபற்றி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனவும் அவர் அதன்போது குறிப்பிட்டார்.

ஆனால் அவரது விளக்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கிருஷ்ணாவின் விளக்கம் இலங்கை அரசின் பிரதி எனவும் நேர்மையற்றது எனவும் அவர்கள் ஆர்ப்பரித்தனர்.

தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவா, கிருஷ்ணா வாசித்த அறிக்கையின் பிரதியை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து அந்த அறிக்கை குறித்து அவர் உரையாற்றுகையில்,

வெளியுறவுத்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ள அறிக்கை இலங்கை அரசு அளித்துள்ள விளக்கத்தின் பிரதி என்றுதான் சொல்ல வேண்டும். நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் காட்சிகளுக்கு இலங்கை அரசு என்ன விளக்கத்தை அளித்து வருகிறதோ, அவையேதான், தற்போது இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவில் விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் முடிவுகள் எடுக்கப்படும் என விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 40000 தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் இலங்கை கடற்படையினரால் இடையூறு செய்யப்படுகின்றனர். தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். ஆனால் இலங்கையுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பு கொண்டிருப்பதாக இந்தியா கூறுகிறது. என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உரையாற்றுகையில்,
வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த விளக்கம் நேர்மையற்றதாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் உள்ளது. இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைச்சரின் விளக்கம் அமையவில்லை. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பிடிக்க இந்தியா முயற்சிக்கிறது. இலங்கை விவகாரத்தில் இந்தியா தார்மீக அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment