Translate

Wednesday 25 January 2012

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சிறிலங்கா அரசு மீது சரமாரியான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு


கடந்த 26 ஆண்டுகாலம் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் பொறுப்பேற்பதற்கும் சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

உலகளாவிய ரீதியில் 90 நாடுகளின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து 676 பக்கங்களில் வேர்ல்ட் றிப்போர்ட் (World Report) 2012 என்ற பெயரில் பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள பின்னர் வடக்கு கிழக்கில் அடிப்படை சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையை சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தியது. அத்துடன் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொடுமைப்படுத்துதல்களுக்கும், ஊடகத்தையும் சிவில் சமூகக் குழுக்களையும் மிரட்டியதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பின்மை குறித்த புகார்களை பெருமளவில் நிராகரிப்பதற்கும், நில அபகரிப்பிற்கும் பொறுப்பு கூறும் நிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு மே 2009ல் முடிவுற்ற போரின் கடைசியில் சிறிலங்காப் படையினர் நடந்துகொண்ட முறைக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து படையினரை விடுவித்துள்ளதுடன், மேலதிக பொறுப்புக் கூறுதல் பற்றிய எந்த உறுதியான அடியையும் எடுத்து வைக்கவில்லை.
அத்துடன் ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் சிறிலங்கா அரச படைகளின் மீறல்கள் பற்றிக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் காட்டப்படவில்லை. மாறாக சுதந்திரமாக கருத்துகளை வெளியிடுவோர் மீதான தாக்குதல்கள் 2011லும் தொடர்ந்தன. எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2011ல் பொறுப்புக்கூறுதல் மிகமுக்கிய பிரச்சினையாக இருந்ததுடன் ஊடகங்கள் மீதான தணிக்கை அதிகரித்தது, நீண்டகாலமாக இருந்து வந்த குறைகள் எவற்றுக்கும் தீவிரமாகப் பதிலளிக்கப்படவில்லை.” எனவும் நீதியற்ற, பலவீனமாக சட்ட ஆட்சியை, நில அபகரிப்பை, ஊடகத் தணிக்கையை சிறிலங்கர்கள் தமது ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்கொண்டுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் அவ்வறிக்கையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
வன்குற்றம் புரிபவர்களை பொறுப்பு கூறத் தவறும் அரசின் செயலானது வருடம் முழுதும் ஓர் மிக முக்கிய விடயமாக நீடித்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது நிகழ்த்திய கொடுமைகளில் தொடர்புபட்ட எவருமே தண்டிக்கப்படவில்லை.
ஐ. நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் நிறுவிய வல்லுனர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அரச படைகள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய இருபகுதியினராலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் குறித்த கண்டறிதல்களையும் போர் விதிமீறல்களை விசாரிக்க நடுநிலையான சர்வதேச அமைப்பிற்கு அழைப்பு விடுத்ததையும் சிறிலங்கா அரசு நிராகரித்தது.
அதற்குப் பதிலாக போர்க்கால குற்றங்களை எடுத்துரைப்பதற்கு தம்மால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவே சிறந்த அமைப்பு என வலியுறுத்தியது. ஆனால் அவ் ஆணைக்குழு போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரசுப் படைகளை வெற்றிகரமாக விடுவித்துள்ளதாக அவ் அரமப்பு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் கண்டறிதல்கள் யாவும் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு உட்பட ஐ.நா. வல்லுனர் குழு நீதிமன்ற நேரடி வழக்குடன் தொடர்பில்லாமல் மரண தண்டனை நிறைவேற்றுதல் தொடர்பான ஐ.நா. சிறப்புத் தூதர் அரசுசாரா அமைப்புகள் போன்றோரின் கண்டறிதல்களுக்கு முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது.
அரசின் வெடிகுண்டுத் தாக்குதல்களின் விளைவாக படைத்துறை சாராதோர் இறந்துள்ளனர் எனும் குற்றச்சாட்டை அரசு விடாமல் மறுக்கின்ற வேளையில் அது உண்மையென அரசாங்கத்தின் ஆணைக்குழு கண்டறிந்துள்ள போதிலும் போர் விதிகளால் தடைசெய்யப்படுகின்ற கண்மூடித்தனமான தாக்குதல்கள் கூடுமான வரை பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் மருத்துவமனைகள் மீதும் தொடர்ந்து நிகழ்வதை அது சற்றும் கருத்தில் கொள்ளவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.
உதயன் செய்தி ஆசிரியர் 2011ஜூலை மாதம் அடையாளம் தெரியாத இளைஞர் குழுவால் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதையும், அதே மாதம் நெதர்லாந்து வானொலியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் காவற்றுறையினரால் துன்புறுத்தப்பட்டு பின்னர் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, மேல்மட்ட ஊழல் பற்றி சண்டே லீடர் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரைகளுக்கு பதிலடியாக 2009ல் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டதையும் அதனைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஜனாதிபதி ராஜபக்ஷ தொலைபேசியில் அழைத்து தாக்குவதாக தனிப்பட்ட முறையில் மிரட்டினார் எனவும் சர்வதேச மனித உரிமை நாளில் யாழில் வைத்து லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டதையும் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டிய ஐந்து இணையத் தளங்கள் அடுத்தடுத்து தடை செய்யப்பட்டமை கிறீஸ் பூதம் என்ற மர்ம மனிதனின் தாக்குதல்கள், உள்ளூராட்சி தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாக்கப்பட்டமை, தடுத்து வைக்கப்பட்டு தகவல்கள் ஏதுமில்லாத 1000க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்தும் அது பட்டியலிட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை எதிர்த்துப் போட்டியிட்டமைக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை, மகிந்தவின் சகோதரர்கள் அதிகாரப் பொறுப்புகளில் உள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment