3 நவம்பர் 2011
லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் படுகொலை! வைகோ வேதனை !
லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் படுகொலை: மதிமுக செயலாளர் வைகோ இரங்கல் !
புலம் பெயர்ந்து, தாய் மண்ணை விட்டு வெளியேறி, துயரங்களைச் சுமந்து, புவியெங்கும் வாழும் என் தமிழ் ஈழ உறவுகளே, லண்டன் மாநகரில், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதியன்று, கந்தசாமி அகிலக்குமார் எனும், ஈழத்தமிழ் இளைஞர், காரணம் ஏதும் இன்றி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை, இன்று நான் அறிந்தபோது, உள்ளம் பதறியது.
29 வயதுள்ள தம்பி அகிலன், ஒரு கருப்பின ஆப்பிரிக்க நாட்டவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு உள்ளார். முன்பகை ஏதும் இல்லை. அகிலனின் இளம் மனைவி, கணவனை இழந்து, வாழ்வின் நம்பிக்கைகள் அனைத்தும் நாசமாகி, துயர வெள்ளத்தில் தவிக்கின்றார். கைக்குழந்தையும் உள்ளது.
இந்தக் கொலை, லண்டன் வாழ் தமிழர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை, நியாயமான ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதி காக்கின்றனர். ஏனெனில், சில வாரங்களுக்கு முன்பு, ஒரு கருப்பு இன இளைஞர், பிரித்தானியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரவி, பெரும் கலவரம் மூண்டபோது, நான் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றித்தான் மிகுந்த கவலை அடைந்தேன். ஆனால், இங்கிலாந்து நாட்டின் சட்டம், ஒழுங்குக்கு, ஈழத்தமிழர்கள் கட்டுப்பட்டு
வாழ்கின்றார்கள் என்பதும், பிரித்தானிய வெள்ளையர்கள், ஈழத்தமிழர்கள் மீது, அனுதாபமும் அக்கறையும் கொண்டு உள்ளார்கள் என்பதும், ஆறுதல் அளிக்கின்ற ஒன்றாகும்.
இந்த நிலையில், துன்பத்துக்கும், துயரத்துக்கும் ஆளாகி உள்ள ஈழத்தமிழர்கள், தொடர்ந்து எந்தச் சூழ்நிலையிலும் ஆத்திரத்துக்கு இடம் கொடுத்து விடாமல் அமைதி காப்பதே, மிகவும் அவசியமாகும். அகிலனை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது துணைவியாருக்கும், லண்டன் வாழ் ஈழத்தமிழர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
03.11.2011 மறுமலர்ச்சி தி.மு.க
No comments:
Post a Comment