ஜெயலலிதாவின் தீர்மானம் ராஜபக்சேயை மட்டுமல்ல, சோனியாவையும், பிரதமரையும் நடுங்க வைத்த
ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தால், புதிய சட்டசபையைப் பூட்டுவார். சமச்சீர்க் கல்வியை நிறுத்துவார். மெட்ரோ ரயிலுக்கு ரெட் சிக்னல் போடுவார். ஐந்து நாட்கள் முட்டை திட்டம் அம்போதான். கலர் டி.வி. காலி. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் காணாமல் போகும். வீடு கட்டும் திட்டம் வீணாய்ப் போகும்...
இவை அனைத்துமே எல்லோரும் கணித்தது. ஆனால், 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவருவார் என்று தமிழின உணர்வாளர்கள்கூட நினைக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக 'தமிழினத் தலைவர்’ என்ற பட்டம் தாங்கிய கருணாநிதி செய்யத் தவறியதை, 'பொடா ராணி’ ஜெயலலிதா செய்து காட்டிவிட்டார்.
'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான், தமிழ் நயத்துக்காகச் சொன்ன போதுகூடப் பலரும் அவர் மீது சீறிப் பாய்ந்தார்கள். ஆனால், ஜெயலலிதா இன்று கொண்டுவந்து இருக்கும் தீர்மானத் தைப் படித்தவர்களுக்கு, ஏதோ தனி ஈழமே கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.