Translate

Saturday 7 April 2012

கிழக்கு மாகாணசபையை கலைக்க அரசு தீர்மானம்!

கிழக்கு மாகாணசபையைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலொன்றுக்குச் செல்ல அரசு தீர்மானித்திருக்கிறது. அதேசமயம், வடக்குக்கான மாகாணத் தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில்லை என்றும் அரசு முடிவெடுத்திருக்கிறது.   கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் அடுத்தவருடம் மே மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மூத்த அமைச்சர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணசபையை உடனடியாகக் கலைத்துவிட்டு தேர்தலொன்றுக்குச் செல்வதற்கு முடிவெடுத்திருக்கிறார் என்று அரச உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் கிழக்கில் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் கிழக்கின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ முக்கிய பேச்சுகளை நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, வடக்கு மாகாணசபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில்லைஎன்று தீர்மானிக்கப்பட்டுள்ள அதேசமயம், கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் அதன் நிலைமைகளுக்கேற்ப வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.  நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அரசு இந்த முடிவுகளை எடுத்திருப்பதாகவும் அரச உயர்மட்ட வட்டாரங்கள் குறிப்பிட்டன.

No comments:

Post a Comment