Translate

Thursday, 5 January 2012

மக்கள் தவிக்கிறார்கள் - மத்திய அரசு வாய் திறக்காதது அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்


மக்கள் தவிக்கிறார்கள் - மத்திய அரசு வாய் திறக்காதது அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

கடலூரில் புயல் சேதங்களை பார்வையிட்ட விடுதலைச் சிறத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அங்கே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’கடந்த 3 நாட்களாக கடலூர் மாவட்டம் முழுவதும் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன். புயலில் உயிரிழந்த 8 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினேன்.


புயல் அடித்து 4 நாள்கள் ஆகியும் நிவாரண உதவிகள் போய் சேராமல் முற்றிலும் முடங்கி கிடக்கிறது. மாவட்ட நிர்வாகம் மந்தமாக செயல்படுகிறது.

குடிநீர் மின்சாரம் மாற்று உடைகள் இன்றி மக்கள் தவிக்கிறார்கள். ஆனால் நிவாரண உதவிகள் குறித்து மத்திய அரசு வாய் திறக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. பல மாநிலங்களில் இயற்கைச் சீற்றம் நிகழ்ந்தபோது மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்கி இருக்கிறது மத்திய அரசு.

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் சேதம் ரூ.10 ஆயிரம் கோடி இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். முந்திரி மரங்கள் உள்ளிட்ட பணப் பயிர்கள் சேதம் வரலாறு காணாதது. முந்திரி மரங்களை பயிரிட்டு வளர்க்க 13 ஆண்டுகள் ஆகும்.

எனவே மரங்கள் சாகுபடிக்கு சிறப்புத் திட்டம் அறிவிக்க வேண்டும்.

கூரை வீடுகள் அனைத்தையும் மாற்ற கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். பாதிப்பு அதிகமாக இருப்பதால் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இருளில் மூழ்கிக்கிடக்கும் கடலூர் மாவட்டத்தில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்களுக்கான நிவாரணத் தொகையை 5 மடங்காக உயர்த்த வேண்டும். புயலில் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி முதல் கட்டமாக வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment