Translate

Friday 18 May 2012

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – உலகத் தமிழர் பேரவை கூட்டறிக்கை


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – உலகத் தமிழர் பேரவை கூட்டறிக்கை

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில், சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நா.க.த. அரசும், உ.த.பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண.கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள்
ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சிலஉடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முழுவிபரம் :
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நடைபெற்று முடிந்து இன்றுடன் ஆண்டுகள் மூன்றாகின்றன. இத்தினத்தில்முள்ளிவாய்க்கால் படுகொலையின் போதும் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டக் காலத்திலும் கொன்றொழிக்கப்பட்ட நமதுமக்களை நாம் ஆழ்ந்த கவலையுடனும் வணக்கத்துடனும் பொறுப்புடனும் நினைவு கூருகின்றோம்.
அனைத்துலகச் சட்டங்கள் நியமங்களையெல்லாம் குழி தோண்டிப் புதைத்தவாறு பயங்கவாதத்துக்கெதிரான போர் என்றபோர்வையில் அநாகரீக முறையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்களை சிறிலங்கா அரசு கொடிய முறையில் கொன்றொழித்தது.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலான அனைத்துலக சமூகம் இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது.
நமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். இக் குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன்நிறுத்தப்பட்டுத் தண்டிக்;கப்பட வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இப் பெரும் கொடுமை உலகில் எந்த மக்களுக்கும் எதிர்காலத்தில் நிகழாது காக்கப்படவும் வேண்டும்.
இதனால் நீதி கோரும் நமது போராட்டம் ஈழத் தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல. உலகின்
எந்தவொரு அரசும் மக்கள் மீது இவ்வகை மிருகத் தனமான வன்முறையினைப் பயன்படுத்துவதற்கு எல்லைகள் விதிக்கப் பட்டாகவேண்டும் என்பதற்கான போராட்டமாகவும் இது அமைகிறது.
சிறிலங்கா அரசு புரிந்த இனப்படுகொலை தொடர்பான ஏராளமான ஆதாரங்கள் எமது கைகளிலும் அனைத்துலக சமூகத்தின் கைகளிலும் இருக்கின்றன. சிறிலங்கா அரசு தன் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஒரு பொழுதும்உள்நாட்டில் உரியமுறையில் செய்யப்போவதில்லை,
செய்யவும் முடியாது என்பதும் அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள முடியாத விடயம் அல்ல. அதே சமயத்தில், வெளியுலகம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எமது இனத்தையும் தேசத்தையும் அழிக்கும் நடவடிக்கைளை அரசு வேகப்படுத்தி வருகிறது.இதனால் காலம் கடத்தாது, அனைத்துலக சுயாதீன விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைவில் முன்னெடுக்கவேண்டும்.
இத்தனை இன்னல்களின் மத்தியிலும் சிக்கியிருக்கும் நமது மக்கள் அங்கே கௌரவத்துடன் வாழத் துடிக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமாகிறது.
ஈழத் தாயகமும் – புலமும் – தமிழகமும் புரிந்துணர்வுடன் கூடிய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் உலகத் தமிழ் மக்களினதும் உலகில் நீதிக்காய்க் குரல் தரக்கூடிய மக்கள் சமூகத்தின் ஆதரவுடனும் அவற்றினை நாம் முன்னெடுக்கும்; போது, அனைத்துலக சமூகம் நமது நீதிக்கான குரலை செவிமடுக்கும் சூழலை உருவாக்க முடியும்.
தற்போதய சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகார மமதையும் ஆணவப்போக்கும் அனைத்துலக சமூகத்தின் வெறுப்பினைச் சம்பாதித்து வருகின்றன. இது நமக்கு வாய்ப்பான சூழல் உருவாகும் நிலைமைகளைத் தோற்றுவித்தும் வருகிறது. அதே சமயத்தில்முள்ளிவாய்க்காலின் பின் சர்வதேச மன நிலையிலும் பார்வையிலும் அணுகு முறையிலும் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவைகளை எமது கவனத்திற்கொண்டு, நாம் விவேகத்துடனும் அரசியல் ஞானத்துடனும் எமக்கு ஆதாயமாக்கிச் செயற்படவேண்டும். நமக்கிடையிலேயான புரிந்துணர்வையும் கூட்டுச் செயற்பாடுகளையும் வலுப்படுத்தவும் வேண்டும்.
இந்நோக்குடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் இம் மாதம் 13, 14 ஆம்திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தொடர்பான பலவிடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் என்பதனை நமது மக்களுக்கு அறியத் தருகிறோம்.
முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் நாம் முன்னெடுக்கும் நமது மூன்றாம் கட்ட விடுதலைப்பயணத்தில் இம் முயற்சி ஒருமுக்கியமான ஒரு மைல்கல்லாகும். உலகத் தமிழர் பேரவை மேற்கொண்டு பல்வேறு புலம்பெயர் தமிழமைப்புக்களுடனும் இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகளுடனும் இவ்வகை பொதுவான புரிந்துணர்வு நோக்கி செயற்படவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழ் மக்களிடையே, அதுவும் குறிப்பாகத் தமிழக உறவுகளிடையேயும் மற்றும் சர்வதேச மக்கள் சமூகத்திடையேயும் தமது வலுவைத் திரட்டி வருகிறது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் இன்றைய தினத்திலே நமது மக்களின் விடுதலை நோக்கிய பயணம் ஓய்வின்றித் தொடரும் என்ற தெளிவான செய்தியினை நாம் கூட்டிணைந்து வெளிப்படுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர்வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள்
ஆகியோரது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment