இலங்கையில் சனிக்கிழமை அதிகாலை காணாமல்போன மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணம் மற்றும் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் திமுது ஆட்டிகல ஆகிய இருவரும் பத்திரமாகத் திரும்பி வந்துள்ளனர்.
ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற பிரேம்குமார் குணரட்ணத்தை விடுவிக்க வேண்டும் என்று அந்நாடு ராஜாங்க ரீதியாக இலங்கை மீது அழுத்தம் கொடுத்து வந்தது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது மனைவியான டாக்டர் சம்பா சோமாரட்ண, ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தனது கணவரை கண்டுபிடித்துத் தருமாறு ஐநாவிடமும் ஆஸ்திரேலிய அரசிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள குணரட்ணம் கொழும்பில் இருந்து விமானத்தில் ஏற்றப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பபட்டுவிட்டார். இவர்களைக் கடத்தியது யார் என்பது தெரியவில்லை.
வெள்ளை வேன்
விடுதலையான பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுது ஆட்டிகல, கடந்த 6 ஆம் தேதி வீட்டுக்கு செல்லும் வழியில் வெள்ளை வேனில் தான் கடத்தப்பட்டதாகக் கூறினார். கடத்தியவர்கள் தன்னிடம் பல கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஜேவிபியிலிருந்து பிரிந்து உருவான மக்கள் போராட்ட இயக்கத்தினர் பல்வேறு மனித உரிமை செயற்பாட்டு போராட்டங்களை முன்னெடுத்துவந்தனர்.
இந்த அமைப்பினர் அண்மையில் உருவாக்கிய 'முன்னிலை சோசலிஸக் கட்சியினர்' ஏப்ரல் 9ம் தேதி (திங்கட்கிழமை) கட்சியின் முதலாவது மாநாட்டை நடத்த ஒழுங்கு செய்திருந்த நிலையிலேயே பிரேம்குமார் குணரட்ணமும், திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment