தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நெருக்கடிகள் மத்தியிலும் குரல் கொடுத்துவருகின்ற தமிழ்த் தேசிய இணையத்தளங்கள் இலங்கையில் தமி்ழ் மக்களால் பார்வையிடுவதற்கு முடியாத வகையில் தடை செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாய் திறக்காமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தினைத் தோற்றுவித்திருக்கிறது.
உண்மைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கின்றமையால், தமிழ் மக்களின் உரிமைகளைப் போன்றே தமிழ்த் தேசிய இணையத்தளங்களின் செயற்பாடுகளும் இலங்கையில் முடக்கப்பட்டிருக்கின்றன. இணையத்தளங்கள் முடக்கப்பட்டு நான்கு நாட்களைக் கடந்திருக்கின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் எந்தக் கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக சொல்லிக்கொள்கின்ற கூட்டமைப்பினர் புலத்திற்கும் நிலத்திற்குமான இணைப்புப் பாலங்களாக செயற்பட்டுவருகின்ற இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை.