கொழும்பு: கடந்த வியாழக்கிழமை (12/07/2012) கொழும்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிலையத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான ஒன்றுகூடல் நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அரசின் அடக்குமுறைப் போக்கை மிக வன்மையாகக் கண்டித்து, "இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட முயற்சிக்கும் இந்த அரசு மனநோயாளிபோல் செயற்படுகின்றது" என இலங்கை அரசாங்கத்தை மிகக் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து உரை நிகழ்த்துகையில், "தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டிவிட்டு யுத்தத்தின்போது ஏற்பட்ட போர்க்குற்றங்களை மறைத்துவருகிறது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் என இவ் அரசாங்கம் பல்வேறு நபர்களுக்கு எதிராகப் பல கொலைகளையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வந்தது. ஆனால், தற்போது அத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய நபர்களை கொண்டு ஊடக அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது" என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
"இன்று ஊடகங்களின் வழியே அரசாங்கம் குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது, அவை அரசாங்கத்துக்கு எதிரானவை என்றால், ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. யுத்த வெற்றி மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தபோது, அவ்விடயம் குறித்து நானும் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தேன். அதற்கு 'என்னைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்' என அரசாங்க அங்கத்தவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்" என திரு. விக்கிரமபாகு கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.
மேலும் தனது உரையில், "இன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள்; கடத்தப்படுகிறார்கள்; ஊடக நிறுவனங்கள் எரிக்கப்படுகின்றன. இவ்வாறான ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது" என அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, "நான் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றேன். இக்காலப்பகுதியில் வெவ்வேறு அரசாங்கங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால், இப்போது உள்ளது போன்ற ஒரு கீழ்த்தரமான ஊடக அடக்குமுறையை மேற்கொள்வது இந்த அரசாங்கம் மட்டுமே. அரசாங்கத்துக்கு எதிராகச் செய்தி வெளியிடுபவர்கள் தொலைபேசி மூலமாகவோ நேரடியாகவோ அச்சுறுத்தப்படுகின்றனர். இல்லையென்றால் கொல்லப்படுகின்றனர்" என்று குற்றஞ்சாட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, "தமக்கெதிரான செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு, அவற்றின் அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் என அரசாங்கத்தால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. அண்மையில் ஸ்ரீலங்கா மிரர் மற்றும் லங்கா எக்ஸ்நியூஸ் ஆகிய ஊடக நிறுவனங்கள் புலனாய்வுத் துறையினரால் மூடப்பட்டன. அவ் இணையதளச் செய்தி நிறுவனங்கள் மீது, 'பொய்யான தகவல்கள் வெளியிட்டமை, பொதுமக்களை அச்சுறுத்தியமை' எனப் பல பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இறுதியில், 'இச்செய்தி நிறுவனங்கள் தனிநபர் கௌரவத்தைக் கெடுக்கின்றன' என நீதிமன்றத்தில் வழக்கும் பதியப்பட்டது" என்று சுட்டிக்காட்டினார்.
"இந்த அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்தும் தடுக்க முனைந்து வருகிறது. அண்மையில் தங்காலையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரைநிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே, 'சமூகத்தில் உள்ள குற்றச் செயல்களைப் பார்க்கும் போது எனது உள்ளம் குமுறுகின்றது' எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்நிலைக்கு அவரின் அரசாங்கம் தான் காரணமென்பதை அவர் மறந்து விட்டார். இந்நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் பாலியல் வல்லுறவு அனைத்தும் அரசாங்கத்தின் கைக்கூலிகளாலேயே நடத்தப்படுகின்றன. அரசாங்கமே இதற்குக் காரணமாகும். இதனை நாம் மக்களுக்குத் தெரிவிக்க முடியாதுள்ளது. காரணம், தற்போது நாட்டில் நிலவுவது அரசியல் யாப்புக்கு அமைவான சட்டமல்ல, “ஜுலம் பிட்டிய அமரேயின்’ சட்டம் ஆகும்" என திரு. திஸ்ஸ அத்தநாயக்க மிகக் கடுமையாகச் சாடினார்.
இந்நிகழ்வில் மும்மொழி ஊடகவியலாளர்களுள் ஏராளமானோரும் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment