வடமராட்சி- எள்ளங்குளத்தில் ஆலயத்துக்குள் சப்பாத்துக் கால்களுடன் நுழைந்த சிறிலங்காப் படையினரைத் தடுத்த, ஆலயப் பூசகர் சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்ட சமபவம் தொடர்பாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, எள்ளங்குளம் ஆதிபராசக்தி அம்மன் கோவில் பூசகரே சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலய வீதியை சிறிலங்கா படையினர் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
வழிபாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது சப்பாத்துக் கால்களுடன் சிறிலங்காப் படையினர் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது பூசகர் அவர்களைத் தடுத்து எச்சரிக்கை செய்துள்ளார்.
இதையடுத்து சிலமணி நேரங்களில் அந்தப் பகுதி இராணுவ பொறுப்பதிகாரியுடன் சென்ற சிறிலங்கா படையினர், பூசகருக்கு அச்சுறுத்தியதுடன், அவரைத் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆலயப் பூசகர் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நிராகரித்துள்ளார்.
“சிறிலங்காப் படையினர் அந்த ஆலயச் சுற்றாடலில் துடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆலயத்துக்குள் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற போது படையினரை, பூசகர் ஏசியுள்ளார்.
தாம் சப்பாத்துக் கால்களுடன் உள்ளே செல்லவில்லை என்று சிறிலங்காப் படையினர் கூறிய போதிலும், அவர் விடாமல் ஏசியுள்ளார்.
இதனால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் பூசகர் மீது எந்த தாக்குதலும் இடம்பெறவில்லை“ என்று அவர் கூறியுள்ளார்.
எள்ளங்குளத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தை அழித்து விட்டு அங்கு சிறிலங்காப் படையினர் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.