நவநீதம்பிள்ளையின் கையில் சிக்கியிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் குடுமி…………..!
சிங்களத் தேசியவாத சக்திகளை திசைதிருப்பும் உத்தி பலிக்குமா?
- ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவை அரசாங்கம் இலங்கைக்குள் அனுமதிக்க இணங்கும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தில் இருந்து வரும் அதிகாரிகளை இலங்கை அரசாங்கம் எதிர்க்காது- அவர்களை வரவேற்கும் என்று, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கடந்தவாரம் கூறியிருந்தனர். அந்தச் செய்தி வெளியாகி பல நாட்களாகியும் அரசாங்கத்திடம் இருந்து அதற்கு எதிர்ப்போ நிராகரிப்போ வரவில்லை. எனவே, இந்த செய்தி பொய்யானது அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது. ஏனென்றால், உண்மையாக இல்லாதிருப்பின் இது அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதொரு செய்தி.இவ்வளவு காலமும் எந்தவொரு ஐ.நா குழுவையோ அதிகாரிகளையோ- விசாரணை நடத்தும் நோக்கில்- இலங்கையில் காலடி எடுத்து வைக்க அனுமதிக்க முடியாது என்றே அரசாங்கம் கூறிவந்தது. அரசாங்கம் இந்த நிலைப்பாட்டில் எந்தளவுக்கு உறுதியாக நின்றதோ- அதைவிட இன்னும் அதிகமான எதிர்ப்பை சிங்கள பௌத்த பேரினவாதிகள் காட்டி வந்தனர். தமது பிணங்களுக்கு மேலாகத் தான் ஐ.நா அதிகாரிகள் உள்ளே வரமுடியும் என்றெல்லாம் ஜாதிக ஹெல உறுமயவின் பிக்குகளும் அரசியல்வாதிகளும் எச்சரித்தனர். இப்படிப்பட்ட, மிகவும் உணர்வுபூர்வமான விவகாரமாக மாற்றப்பட்டுள்ள இந்த விடயத்தில் தமது நிலைப்பாடு, தவறாக வழிநடத்தப்பட அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் முடிவுகளை எடுக்கும் போது, எப்போதுமே அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று மேலோட்டமாக ஆழம் பார்க்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுண்டு.இப்படி நடந்தால் என்ன நடக்கும்?மக்கள் கிளர்ந்தெழுவார்களா?அரச எதிர்ப்புப் போராட்டம் வெடிக்குமா அல்லது அமைதியாகவே கழிந்து போகுமா?என்று நிலைமையை ஆழம் பார்ப்பது பொதுவாக கையாளப்படும் ஒரு தந்திரம் தான்.ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான இந்த செய்தி கூட அப்படி ஆழம் பார்க்க அரசுக்கு உதவியாக அமைந்திருக்கலாம். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இதுதொடர்பான அதிகாரபூர்வ பதிலை அரசாங்கம் அனுப்பியதாகத் தகவல் இல்லை. அதிகாரபூர்வ தகவலை அனுப்பினாலும் கூட, அதை அரசாங்கம் இப்போதைக்கு வெளியிடாது. ஊடகங்களில் செய்திகளை கசிய விட்டு- மக்களின் மனோநிலையை நாடிபிடித்துப் பார்த்த பின்னரே அந்தச் செய்தி வெளியே விடப்படும். அதற்கு முன்னர் அரசல் புரசலான செய்திகள் தான் கசிய விடப்படும்.ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கடிதத்துக்கு சாதகமான பதிலை அரசாங்கம் அனுப்பப் போவதாக, கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கடந்த சில வாரங்களாகவே பேச்சடிபட்டது. இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்துடன் முரண்டு பிடிப்பது அரசாங்கத்துக்கே ஆபத்தாக அமைந்து விடும் நிலை காணப்பட்டது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைய அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்தால், அந்த விவகாரத்தை நவநீதம்பிள்ளை மேலும் சிக்கலான கட்டத்துக்குள் கொண்டு சென்று விடக் கூடிய நிலை இருக்கிறது. எனவே இணங்கிப் போவதைவிட வேறு வழியேதும் அரசுக்கு இருக்கவில்லை.ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நிபுணர்குழுவை நியமித்த போது, அது சட்டரீதியானது அல்ல என்றும் அவர்களை உள்ளே விடமுடியாது என்றும் அடம்பிடித்த அரசாங்கம், இப்போது அதே இறுக்கத்தை நவநீதம்பிள்ளையிடம் காண்பிக்க முடியாத நிலையில் உள்ளது. ஐ.நா பொதுச்செயலருக்குக் கீழே தான் நவநீதம்பிள்ளை பணியாற்றுகிறார். ஆனால் பான் கீ மூனை எதிர்த்தளவுக்கு நவநீதம்பிள்ளையுடன் அரசாங்கம் இப்போது முரண்டு பிடிக்கவில்லை. காரணம், பான் கீ மூன் ஐ.நா நிபுணர் குழுவை நியமித்தபோது அதற்கு பாதுகாப்புச் சபையோ, பொதுச்சபையோ அங்கீகாரம் கொடுக்கவில்லை. ஆனால் நவநீதம்பிள்ளைக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஒரு பொறுப்பை கொடுத்துள்ளது. அதை அவர் நிறைவேற்றுவதற்கு இலங்கை முட்டுக்கட்டையாக இருந்தால், மீண்டும் இலங்கையின் கழுத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை பிடித்து நெரிக்கும் நிலை உருவாகி விடும். ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் பொறுப்பும் கடப்பாடும் சர்வதேச அங்கீகாரம் பெற்றது என்பதால், அரசாங்கம் மசிந்து கொடுத்தேயாக வேண்டிய நிலையில் இருக்கிறது. அதைவிட, நவநீதம்பிள்ளையின் கையில் தான் இலங்கை அரசாங்கத்தின் குடுமி வேறு சிக்கியிருக்கிறது.ஜெனிவா தீர்மானத்துக்கு அமைவாக அவர், அடுத்த மார்ச் மாதம் இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான், அரசாங்கம் இணக்கத்துக்கு வர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அண்மையில் ஐ.நா பாதுகாப்புச்சபையில் உரையாற்றிய போது கூட, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நவநீதம்பிள்ளையின் அலுவலகத்துடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும் இதையே வலியுறுத்தின. இதற்கு மேலும் முரண்டு பிடிப்பதோ பிடிவாதம் காட்டுவதோ சர்வதேச நெருக்கடிகளைத் தான் அதிகரிக்கச் செய்யுமே தவிர, குறைக்காது. இதனால் தான் வேறு வழியின்றி இறங்கிப் போக முனைகிறது. இதை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் இல்லை – அறிவிக்கவும் முடியாது.காரணம்,சிங்களத் தேசியவாதிகள் இதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அவர்களை அரசாங்கமே ஊக்குவித்து- ஐ.நாவை எதிர்த்து நிற்க வைத்திருந்தது. இதனால், அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்படும். எனவே, அவர்களின் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பி விட்டே, இந்த விவகாரத்தை வெளியே கசிய விட முடியும். சிலவேளைகளில் ஐ.நா அதிகாரிகள் குழுவின் வருகையை அரசாங்கம் இரகசியமாக வைக்கவும் முயற்சிக்கலாம். ஆனால் அப்படியான இரகசியப் பயணம் என்பது நடைமுறைச் சாத்தியமாக இருக்க வாய்ப்பில்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதிகாரிகள் குழுவின் முக்கியமானதொரு விசாரணை இலக்கு, சரணடைந்த பின்னர் காணாமற்போன போராளிகள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்சாட்சியமளித்தோரைச் சந்திப்பதாகும். இதனை அரசாங்கத்தினால் அவ்வளவுக்கு ஜீரணிக்க முடியாது போனாலும் வேறு வழியில்லாத நிலை உள்ளது. இவ்வாறு பகிரங்க விசாரணைகளை ஐ.நா அதிகாரிகள் நடத்த முற்படும் போது அது இரகசியமானதாக இருக்க முடியாது. இந்தநிலையில் சிங்களத் தேசியவாதிகளை திசை திருப்பி அவர்களின் கவனத்தைக் குலைக்கவே மூன்று மாகாணசபைகளை அரசாங்கம் கலைத்துள்ளதாக கருதப்படுகிறது.முன்னதாக, மாகாணசபைகளை ரம்ழான் நோன்புக்காலத்தில் – வரட்சியான சூழல் நிலவும் போது கலைக்க வேண்டாம் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அப்போது அதை ஏற்றுக் கொள்வதாகவே அரசாங்கம் காட்டிக் கொண்டது. திடீரென இப்போது மாகாணசபைகளைக் கலைத்து விட்டுத் தேர்தலுக்குத் தயாராகியுள்ளது அரசாங்கம். இது சர்வதேச அழுத்தங்களின் விளைவு. மாகாணசபைத் தேர்தல் பரபரப்புக்குள் ஐ.நா அதிகாரிகளை இலங்கைக்குள் அனுமதிக்கப் பார்க்கிறது அரசாங்கம். இந்த உத்தி அரசாங்கத்துக்கு கைகொடுக்குமா அல்லது காலை வாரிவிடுமா என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும் சாதாரண சூழலில் ஐ.நா அதிகாரிகளின் வருகைக்கு எதிர்ப்பை மட்டுமே தெரிவிக்க முடியும். இப்படியானதொரு சூழலில் ஐ.நா அதிகாரிகளின் வருகைக்கு அனுமதித்த அரசாங்கத்துக்கு, சிங்களத் தேசியவாதிகள் வாக்குகளின் மூலமும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் முடியும்.
No comments:
Post a Comment