Translate

Saturday 7 July 2012

அடாவடித்தனத்தை காட்டி தனக்கு தானே கரிபூசிய யாழ். அநீதிபதி கணேசராசா


அடாவடித்தனத்தை காட்டி தனக்கு தானே கரிபூசிய யாழ். அநீதிபதி கணேசராசா

யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளை படையினர் அபகரிப்பதற்கு துணைபோகும் வகையில் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு தடை செய்து சிங்கள பேரினவாத அரசின் கைக்கூலியாக செயற்படும் யாழ். அநீதிபதி கணேசராசா தனக்கு தானே கரிபூசிக்கொண்டார்.

ஜனநாயக குரலாக செயற்படும் பத்திரிகை ஆசிரியரை நீதிமன்ற பொது அமர்வில் வைத்து மன்னிப்பு கேட்குமாறு அவமானப்படுத்திய கணேசராசாவின் அடாவடித்தனத்திற்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
வாழைச்சேனை நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி வந்த முஸ்லீம்களிடம் பெருந்தொகையான பணத்தை பெற்று அவர்களை விடுதலை செய்ததுடன் குற்றவாளிகளிடம் பெருந்தொகை பணங்களை பெற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்த மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அநீதிபதி கணேசராசா யாழ். நீதிபதியாக நியமிக்கப்பட்ட உடன் சிங்கள பேரினவாத அரசுக்கு வாலாட்ட தொடங்கியுள்ளார்.
தமிழ் மக்கள் தங்கள் காணிகளை படையினர் அபகரித்திருப்பதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்ட போது அதற்கு தடை விதித்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் வாக்குகளை பெறுவதற்காக மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், மீண்டும் ஒரு இருண்ட உலகிற்கு அவர்களை அழைத்து செல்வதாகவும் சிங்கள பேரினவாத அரசியல்வாதியைப்போல் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அவ்வாறானால் தமிழ் மக்கள் தங்கள் காணிகளை சிங்கள பேரினவாத படைகளிடம் கொடுத்து விட்டு வீடு வாசல்கள் இன்றி வீதி ஒரங்களில் இருக்க வேண்டும் என அநீதிபதி கணேசராசா எதிர்பார்க்கிறாரா?
அநீதிபதி கணேசராசாவின் அடாவடித்தனத்தின் உச்சக்கட்டமாக உதயன் பத்திரிகை ஆசிரியரை கைது செய்வதற்கும் அவர் மீது புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்துவதற்கும் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து உதயன் செய்தி ஆசிரியர் பிரேமானந் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் செய்த மனுவை அடுத்து அநீதிபதி கணேசராசாவின் அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உதயன் பத்திரிகை ஆசிரியர் ஊடக ஜனநாயகத்திற்காக எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளுக்காக அவருக்கு எமது பாராட்டுக்கள்.
இது தொடர்பாக உதயன் பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியை அப்படியே இங்கு தருகிறோம்
உதயன் நாளிதழில் கடந்த மாதம் 28ஆம் திகதி வெளியான செய்தி ஒன்று தொடர்பில் ‘உதயன்’ ஆசிரியர் ரி.பிரேமானந்துக்கு எதிராக யாழ். நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கும், பிறேமானந்தைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு எதனையும் பிறப்பிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பத்திரிகை ஆசிரியர் பிரேமானந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தடை உத்தரவு கோரும் ரிட் மனுவை இன்று காலை பரிசீலனைக்கு எடுத்த நீதியரசர்கள் எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா, திபாலி விஜேசுந்தர ஆகியோரைக் கொண்ட ஆயம் மேற்படி இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றது.
எதிர்வரும் 20ஆம் திகதி இந்த ரிட் மனு மீண்டும் நீதிமன்றில் பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் கணேசராஜாவுக்கு அழைப்பாணை அனுப்பவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘நாடாளுமன்றில் கூறப்படும் விடயங்களை விமர்சிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை – சுமந்திரன் எம்.பி நேற்று சுட்டிக்காட்டு’ – என்ற தலைப்பில் கடந்த 28ஆம் திகதி ‘உதயன்’ நாளிதழில் வெளியான செய்தி ஒன்று தொடர்பில் விளக்கமளிக்குமாறு தம்மை நீதிமன்றுக்கு அழைத்த யாழ்.நீதிவான் சட்டமுறையற்ற வகையில் தம்மை பகிரங்க நீதிமன்றத்தில் நீதிவானிடம் மன்னிப்புக் கோருமாறு பலவந்தப்படுத்தினார் என்ற சாரப்பட ‘ரிட்’ மனு ஒன்றை ‘உதயன்’ ஆசிரியர் பிரேமானந்த் கடந்த புதனன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
யாழ்.நீதிவானின் சட்டமுறையற்ற நடவடிக்கைகளில் இருந்து தமக்குப் பாதுகாப்பு தருமாறும் கோரி ‘உதயன்’ ஆசிரியர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை இன்று காலை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம், மனுதாரரின் கோரிக்கையின் படி யாழ்.நீதிவானுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு விதித்ததுடன் மனுவை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனகஈஸ்வரன், மற்றும் சட்டத்தரணிகள் வி.புவிதரன், இரான் கொரியா, நிரான் அங்கிட்டல் ஆகியோர் மன்றில்ஆஜராகி வாதிட்டனர்.
கடந்த புதனன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்திருந்த மனுவில் ‘உதயன்’ ஆசிரியர் பிறேமானந்த் தெரிவித்திருந்தவற்றின் சாரம் வருமாறு:
ஆயுதப் படையினரால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் நிலப்பறிப்புக்கு எதிராக யாழ்.வாசிகள் சிலரால் முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பான விடயம் கடந்த ஜூன் 27ஆம் திகதி யாழ். நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இது சம்பந்தமாகச் சில வட்டாரங்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன்.
அச்சமயம் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இந்த விவகாரம் கடந்த தடவை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது தாம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒன்று தொடர்பில் நீதிவான் கணேசராஜா அச்சமயம் நீதிமன்றில் விமர்சனக் கருத்துக்களை முன்வைத்துள்ளார் எனக் குறிப்பிட்டு அதைச் சுமந்திரன் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார் என எனக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
‘உதயன்’ அல்லாத வேறு ஒரு பத்திரிகையில் வந்த ஒரு செய்தியில் மேற்படி எதிர்ப்பு இயக்கத்தை மாவட்ட நீதிமன்றமே தடை செய்யலாம் நீதிவான் நீதிமன்றம் அல்ல எனச் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறப்பட்டிருந்ததை எதிர்மனுதாரரான நீதிவான் கணேசராஜா அங்கு எடுத்துக் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் மாவட்ட நீதிமன்றம் குறித்து தாம் எதுவுமே நாடாளுமன்றத்தில் குறிப்பிடவேயில்லை என நீதிமன்றத்தில் ஆஜராகித் தெரிவித்த சட்டத்தரணி சுமந்திரன், எப்படியாயினும் தாம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் அதனை பகிரங்க நீதிமன்றத்தில் விமர்சிக்கும் அதிகாரம் எதுவும் நீதிவானுக்குக் கிடையாது என்றும், அதற்கான நாடாளுமன்ற சிறப்புரிமை தமக்கு உண்டு என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இதுபோன்ற ஒரு விடயத்துக்காக உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் நாடாளுமன்றத்தின் முன்பாக அழைக்கப்பட்டமை பற்றியும் சுமந்திரன் எதிர்மனுதாரரான நீதிவான் கணேசராஜாவிற்கு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார் எனவும் எனக்கு அறியவந்தது.
சுமந்திரனின் வாதத்தைச் செவிமடுத்த நீதிவான் கணேசராஜா பகிரங்க நீதிமன்றத்தில் வைத்துச் சுமந்திரனிடம் மன்னிப்புக் கோரினார் என்றும் எனக்குத் தெரியவந்தது. (இவ்விவகாரம் தொடர்பில் விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்தரணி கே.குருபரனின் சத்தியக் கடதாசி மனுவுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது.)
இந்தத் தகவல்களை அறிந்து கொண்ட நான் அன்றைய தினமே இதுபற்றி எதிர்மனுதாரரான நீதிவானுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த முயன்றேன். ஆனால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அதன் பின் சட்டத்தரணி சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.
எதிர்மனுதாரரான நீதிவான் கணேசராஜாவின் மன்னிப்புக் கோரலை அது அவரது தாராள மனப்பான்மை நடவடிக்கையாகக் கருதித் தாம் ஏற்றுக்கொண்டுள்ளார் என சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் தெரிவித்த தகவல்கள், எனக்கு ஏற்கனவே கிடைத்த தகவல்களுடன் முழு அளவில் ஒத்திருந்த பின்னணியில் ‘நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட விடயங்களை விமர்சிக்கும் அதிகாரம் நீதிமன்றுக்குக் கிடையாது என சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்” என்ற தலைப்போடு அடுத்த நாள் ஜூன் 28ஆம் திகதி ‘உதயன்’ 3ஆம் பக்கத்தில் அதனை நாம் செய்தியாகப் பிரசுரித்தோம்.
(இவ்விடயங்கள் சம்பந்தமான தகவல்களை உறுதிப்படுத்தும் விதத்தில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் சத்தியக் கடதாசி மனுவுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது.)
அன்று மாலையில் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தின் கடிதத் தலைப்பில் எனக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. மேற்படி செய்தி தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அடுத்த நாள் ஜூன் 28ஆம் திகதி காலை 9 மணிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவானின் பணிப்பின்பேரில் எனக்கு அக்கடிதத்தில் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் அனுசரணையுடன் நான் நீதிமன்றில் ஆஜரானேன்.
மேற்படி செய்திக்காக என்னைக் கண்டித்த நீதிவான் தான் வாழ்க்கையில் இதுவரை யாரிடமும் மன்னிப்புக் கோரவில்லை என்றும் இனிமேலும் கூட அப்படிக் கோரமாட்டார் என்றும் குறிப்பிட்டார். இந்தச் செய்திக்காக என் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என என்னிடம் விளக்கம் கோரப்படவேண்டும் எனச் சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டபோது, எனக்கு நீதிமன்றினால் அனுப்பப்பட்டது நீதிமன்ற அழைப்பாணை அல்ல என்றும் அப்படி இருக்கையில் என்னிடம் காரணம் காட்டுமாறு கோரமுடியாது என்றும் எனது சட்டத்தரணி அபிமன்னசிங்கம் சுட்டிக்காட்டினார்.
சுமந்திரனிடம் நீதிவான் மன்னிப்புக் கோரினார் என வெளியிடப்பட்ட செய்திக்காக நீதிமன்றத்தில் நான் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அதனைப் பத்திரிகையில் முன்பக்கத்தில் பிரசுரிக்கவேண்டும் என்றும் என்னிடம் நேரடியாக உத்தரவு பிறப்பித்தார் நீதிவான்.
அதுதான் நீதிமன்ற உத்தரவாக இருக்குமானால் நீதிமன்ற உத்தரவுக்காக அதனைச் செய்கிறேன் என்று நான் குறிப்பிட்டேன். எனினும் எத்தகைய வடிவத்தில் அந்த மன்னிப்புக் கோரல் இருக்கவேண்டும் என்றும், அந்த மன்னிப்புக் கோரல் நானாக, சுயமாகக் கோரும் வகையில் அமையவேண்டும் என்ற விதத்திலும் எனக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.
எனக்குச் செய்தி தந்த மூலத்தை நான் நீதிமன்றத்துக்கு அம்பலப்படுத்தவேண்டும் என நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனினும் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் செய்தி மூலங்களை வெளியிட மறுக்கும் உரிமை எனக்கு உண்டு என நான் தெரிவித்தேன்.
அதன் பின்னர் எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதிக்கு விடயத்தை ஒத்திவைத்த நீதிவான், அந்தத் தினத்தில் நான் ஆஜராகி செய்தி தந்த மூலத்தை வெளிப்படுத்தவேண்டும் என்றும் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக ஏன் என் மீது நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பதற்கு அன்று நான் காரணம் காட்டவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேற்படி நீதிவானின் நடவடிக்கை அவரது சட்டவரம்புக்கும் நியாயாதிக்கத்துக்கும் அப்பாற்பட்டது என நான் கருதுகிறேன். அத்துடன் அது சட்டமுறையற்றதும் கூட. நீதிவானின் கடும்தொனி உத்தரவுக்கு அமைய 29ஜூன் 2012 இல் நான் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கோராதவிடத்து நீதிவானினால் எனது தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் கௌரவத்துக்கும் பங்கம் ஏற்படலாம் என்ற நியாயமான அச்சம் காரணமாகவே நான் அவ்வாறு நீதிமன்றத்தில் அன்று செயற்படவேண்டியவனானேன்.
இவ்வாறு பிறேமானந்த் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனது அதிகாரத்துக்கும் நியாயாதிக்கத்துக்கும் அப்பாற்பட்ட விதத்தில் இவ்விவகாரத்தை நீதிவான் விசாரிப்பதற்கு எதிராக இடைக்காலத் தடையும் பின்னர் நிரந்தரத் தடையும் விதிக்கும்படியும் , மேற்படி செய்திக்காகப் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக கைது உத்தரவு எதனையும் யாழ். நீதிவான் பிறப்பிக்காமல் இருப்பதற்கான தடை உத்தரவை வழங்கும்படியும் மனுவில் கோரியிருந்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் சத்தியக்கடதாசியும் இந்த மனுவுக்கு வலுவுட்டும் விதத்தில் மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment