ஜனநாயகத்தை மதித்து குற்றவியல் பிரேரணைக்கு ராஜபக்ஷ அரசு தீர்வு காண வேண்டும்! – ‘த இந்து’ வலியுறுத்து
மஹிந்த ராஜபக்ஷ அரசானது நிறுவனங்கள் அல்லது ஜனநாயக அரசியல் நடைமுறைகள் ஆகியவற்றைப் பலவீனப்படுத்தாத வகையில் பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவந்த குற்றவியல் பிரேரணை மீதான மோதலுக்குத் தீர்வு காணவேண்டுமென சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ‘த இந்து’ நேற்றைய தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
http://www.thinakkathir.com/?p=46110
தெற்காசியாவின் பலம் பொருந்திய மனிதர்களுக்கும் உச்சமட்ட நீதிவான்களுக்குமிடையே மூள்வது என்ன? ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப், பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்திரியைப் பதவியிலிருந்து கவிழ்க்க பகீரதப் பிரயத்தனம் செய்தார். இறுதியில் இது விடயத்தில் தமக்குரிய சக்திக்கு அப்பாற்பட்ட நிலையில் பிரதம நீதியரசரைத் தாம் சீண்டிப்பார்த்துவிட்டார் என்பதை மட்டுமே உணர்ந்தார்.
தற்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இலங்கைப் பிரதம நீதியரசரை வெளியேற்ற வேண்டுமென்பதிலேயே உறுதியாகவுள்ளார். எனினும், பாகிஸ்தான் பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்திரியைப் போல ஷிராணி பண்டாரநாயக்கவும் தமக்கு எதிரான திட்டத்தை முறியடிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்.
இவர் வெற்றி இலக்கை எட்டுவதற்கான வாய்ப்புகள் காத்திரமாக அமையவில்லை. எனினும், இந்த மோதல் இந்நாட்டின் நிறுவனங்களில் நிச்சயம் ஒரு சுழற்சியை ஏற்படுத்திவிடும். அதேவேளை, என்றுமில்லாதவாறு, இலங்கை அரசமைப்பையும் சோதனைக்குள் சிக்கவைத்துவிடும்.
குற்றவியல் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையோடு நிறைவேற்றமுடியும். இதையடுத்து, ஒரு நீதிவானை நீக்குவதற்கான சட்ட அதிகாரம் ஜனாதிபதிக்கு அளிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டது. இந்த எண்ணிக்கை ஒரு பிரச்சினையாகாது.
குற்றவியல் பிரேரணையில் பிரதம நீதியரசரின் தவறான நடவடிக்கைகள் தொடர்பாக 14 குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே கைச்சாத்திட்டுள்ளார்கள்.
இப்பிரேரணை ஜனவரியில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம். மூன்று குற்றச்சாட்டுகளில் பிரதம நீதியரசர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார் என ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், இதற்குப் பின்னர் கீழே இறங்குவதற்கு மாறாக, பிரதம நீதியரசரை விசாரணைக்கு உட்படுத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் சட்ட அதிகாரம் குறித்து ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவால் விட்டுள்ளார்.
ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக விசாரணை இருக்கின்றது என்பது கண்கூடு. ஒரே பார்வையில் இது புலனாகிவிடும். இந்நிலையில், நீதிமன்றம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. அதேவேளை, இப்பிரச்சினை தீர்க்கப்படும்வரை குற்றவியல் பிரேரணை மீதான முன்னெடுப்புகளைத் தொடரவேண்டாமென்றும், நாடாளுமன்றத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அதன் அதிகாரம் தொடர்பாக சவாலை எதிர்நோக்குகின்றது. இதற்கும் மேலாக முறையாக விசாரணை முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் இக்குழு இலக்காகியுள்ளது. தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராகத் தாமாகவே வாதாட ஷராணி பண்டாரநாயக்கவுக்கு கால அவகாசம் அளிக்காமல் இயற்கை நீதி நடைமுறைகளைத் தெரிவுக்குழு மீறியுள்ளது. தெரிவுக்குழு உறுப்பினர்களின் நடவடிக்கை நாடாளுமன்ற நடவடிக்கையே தவிர வேறொன்றுமில்லை.
அவர்கள் நாட்டின் முதன்மை நீதியரசரை ‘பைத்தியக்காரி’ எனப் பரிகசித்துள்ளார்கள். தரங்கெட்ட வார்த்தைப் பிரயோகங்களைக் கையாண்டுள்ளார்கள். மாறுபட்ட அபிப்பிராயத்தை ராஜபக்ஷ ஆட்சி கண்டுகொள்வதில்லை என்ற விமர்சனத்துக்கு வலுவூட்டுவதாகவே இது அமைந்துள்ளது.
இந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அநேக தீர்ப்புகள் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிரானவை. மாகாணசபைக்கான அதிகாரக்குறைப்பு சட்டமூலத்துக்கு எதிரான தீர்ப்பு அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில் பொதிந்துள்ள உண்மை நிலைப்பாடு இதுவே ஆகும்.
மாகாணசபை சம்பந்தப்பட்ட சட்டமூலத்துக்கு மற்றவர்களைப்போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஆட்சேபனை கிளப்பியுள்ளார்கள். தமிழ்ப் பிராந்தியங்களுக்கு கூடுதலாக சுயாதிபத்திய அதிகாரம் வழங்கப்படுமென்ற அரசின் வாக்குறுதிக்கும் மாறான சட்டமூலம் இதுவாகும்.
நிறுவனங்கள் அல்லது ஜனநாயக, அரசியல் நடைமுறைகள் ஆகியவற்றைப் பலவீனப்படுத்தாத வகையில் குற்றவியல் பிரேரணை மீதான மோதலுக்கு தீர்வு காணப்படவேண்டும். அடுத்தபடியாகத் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைகளுக்கான அவசர தீர்வே அவசியம் – என்று ‘த இந்து’ நேற்றைய தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment