Translate

Friday 28 December 2012

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்: அஸாத் ஸாலி எச்சரிக்கை!



'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பிய முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது. 

'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது. சிறிய பிரச்சினை எனக் கூறி அரசு இவற்றைத் தட்டிக்கழித்தால் அதன் எதிர்விளைவுகள் ஆபத்தானதாக அமையும் என்று முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

முஸ்லிம்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்துவருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்பிலிப்பிட்டியவில் சிங்களக் குழுவினரால் முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய சந்தையில் இரண்டு முஸ்லிம் கடைகள் இருக்கின்றன. இந்த இரு கடைகளிலுள்ள வர்த்தகர்கள் சிங்களக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். ஏன் சிங்களக் குழுவினரால் அவர்கள் தாக்கப்பட்டனர்? எதற்காகத் தாக்கப்பட்டனர்?

'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பும், ஏனைய சிங்கள இனவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்பிலிப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா எனத் தெரியவில்லை.

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்னின்று செயற்பட்ட பிக்குகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும், எம்.பிமார்களும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் சென்று முறையிடுகின்றனர். அவரிடம் முறையிட்டு என்ன பயன்?

முஸ்லிம் பள்ளிவாசல் உடைப்பு, முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் ஹலால் உணவுகள் தடைசெய்யப்படவேண்டும் என சிங்கள இனவாதிகள் மேற்கொள்ளும் அராஜக செயல்கள் அனைத்தும் சிறிய செயல்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார். எமது சமயத்துடனும், மக்களது வாழ்வுடனும் விளையாடுவது சிறிய செயலா? இதுபோன்ற சிறிய செயல்களின் எதிர்விளைவுகள் நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும். எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாட்டில் இனிமேலும் தொடரக்கூடாது.

அதற்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அடக்குமுறைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படவேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதனூடாக முஸ்லிம்களும் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டுமென்றா அது எதிர்பார்க்கிறது? வேண்டாம். எம்மை ஒருபோதும் அந்த நிலைக்குத் தள்ளிவிடவேண்டாம் என்றார் அஸாத் ஸாலி.

No comments:

Post a Comment