தமிழர்கள் கைவிட்டு விட்ட, முஸ்லிம்கள் நினைத்து பார்த்திராத பிரிவினை பாதையை இவர்கள் இன்று தூண்டிவிடுகிறார்களா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டின் தலைநகரம், அந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவானது. நாட்டின் தலைநகரில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வதை இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்கின்றவர்கள் சொல்ல வருவதுதான் என்ன? தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு என்று சொந்த தலைநகரங்களை வடக்கிலும், கிழக்கிலும் உருவாக்கி கொள்ள வேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்களா?
தமிழர்கள் கைவிட்டு விட்ட, முஸ்லிம்கள் நினைத்து பார்த்திராத பிரிவினை பாதையை இவர்கள் இன்று தூண்டிவிடுகிறார்களா? அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இலங்கை ஒரே நாடு. இது இரண்டாகவோ, மூன்றாகவோ பிரிபடவில்லை.
நாட்டின் அரசியல் தலைநகரம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஆக சொல்லப்பட்டாலும், இன்னமும், கொழும்புதான் நடைமுறையில் தலைநகரமாக இருக்கின்றது. இந்தியாவுக்கு புது டெல்லி எப்படியோ, பிரிட்டனுக்கு லண்டன் எப்படியோ, அமெரிக்காவுக்கு வாஷிங்டன் எப்படியோ, அவ்வாறே இலங்கைக்கு கொழும்பு ஆகும். இனி நெடுங்காலத்துக்கும் அப்படியே இருக்கப்போகின்றது. இந்நிலையில் தேசிய தலைநகரில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் ஜனத்தொகையை சுட்டி காட்டி அரசு சார்பு சிங்கள அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள்.
பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவும் கருத்து கூறியுள்ளார். இவர்களது கருத்துகளில், சிங்கள தேசத்தில், அதாவது கொழும்பில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் பெருந்தொகையில் வாழ்வதற்கு அனுமதியளித்துள்ளோம் என்றும், அது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு பாரிய சலுகை என்பதான ஒரு அர்த்தம் தொக்கி நிற்கிறது. முதலில் ஒன்றை கோதாபய ராஜபக்ச புரிந்துகொள்ள வேண்டும். கொழும்பில் தமிழர் வாழத்தொடங்கியது, இன்று, நேற்று அல்ல. சுதந்திரத்துக்கு முன்னிருந்தே, தமிழர்கள் கொழும்பில் வாழ்ந்துள்ளார்கள். ஒரு துறைமுக வர்த்தக நகரமாக கொழும்பின் உருவாக்கத்தில் தமிழர்கள் பாரிய பங்களித்துள்ளார்கள்.
கொழும்பு துறைமுகத்தை நிர்மாணித்தது தமிழர்களின் உழைப்பு. ஏற்றுமதி துறைமுக நகரமாக திகழும் கொழும்பை, மலையகத்தில் இருந்து வந்து அடையும் பெருந்தெருக்களை நிர்மாணித்தது தமிழர் உழைப்பு. எனவே கொழும்பில் இன்றைய தமிழர்களது வாழ்வு என்பது இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு அளித்துள்ள விசேட சலுகை அல்ல. இந்த எண்ணத்தை இனவாதிகள் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த கருத்துகளை நான் இன்று இங்கே மூன்று மொழிகளையும் சொல்கிறேன்.
அதேபோல், கொழும்பு மற்றும் மேல்மாகாணத்துடன் தமிழ் மக்களுக்கு இருந்த பாரம்பரிய அரசியல், சமூக ரீதியாக தொடர்புகளைபற்றி தெரியாதவர்கள், காலிமுக திடலுக்கு எதிராக இருக்கின்ற அன்றைய பாராளுமன்ற, இன்றைய ஜனாதிபதி செயலக கட்டிட வளாகத்துக்கு செல்ல வேண்டும். அங்கே அமைந்துள்ள சேர் பொன் ராமநாதன் சிலையை பற்றி அறிய வேண்டும். தமிழருக்கும், கொழும்புக்கும் இருந்த தொடர்புகளை அடையாளப்படுத்தும் வரலாறு படைத்தவர்கள், இராமநாதன்-அருணாசலம் சகோதரர்கள். இவர்கள் யார் என தெரியாமலேயே சிலர் வருடா வருடம் சிலைகளுக்கு மாலை போடுகிறார்கள் என நான் நினைக்கிறேன்.
உண்மையில் மேல்மாகாண தமிழர் பிரதிநிதித்துவ கொள்கை சுதந்திரத்துக்கு முன்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. பின்னாளில் அது மறுக்கப்பட்டது. இதுதான் தமிழர்களுக்கு அளிக்கப்பட வாக்குறுதியை முதல் முதலில் இனவாதிகள் மீறிய முதல் சந்தர்ப்பம் ஆகும். அதன் காரணமாகத்தான் மனம் வெறுத்துப்போன பொன். அருணாசலத்தால், தனித்துவ தமிழ் தேசிய அரசியல் சிந்தனை நாட்டில் உருவாக்கப்பட்டது.
இன்றைய யுத்தத்திற்கு பின்னரான சூழலில் நாம், அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்தும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கிறோம். ஆனால், இவர்கள் அன்று பொன். அருணாசலத்தை நோகடித்ததைப்போல், இன்று மீண்டும் கொழும்பில் வாழும் தமிழர்களையும், முஸ்லிம்களையும் மீண்டும் நோகடிக்கிறார்கள். நாட்டில் நாம் ஏற்படுத்த விளையும் நல்லிணக்க சூழலை கெடுத்து மீண்டும் பழைய வரலாற்றை திருப்பி எழுத இவர்கள் முயல்கிறார்கள். வட, கிழக்கில் தமிழ், முஸ்லிம் பெருவாரியாக வாழும் மாவட்டங்களில் சிங்கள மக்கள் வாழ முடியாதுள்ளது போலவும், ஆனால் தமிழ், முஸ்லிம் மக்கள் தெற்கில் வாழ்வது போலவும் இவர்கள் கருத்து தெரிவிக்க முயல்கிறார்கள். உண்மையில் வட, கிழக்கில் சிங்கள மக்கள் வாழாமல் இல்லை உண்மையில் கிழக்கில் சிங்கள குடியேற்றம் பாரியளவு நடந்துள்ளது.
சுதந்திரம் அடைந்த காலத்தில் மூன்று விகிதமாக இருந்த சிங்கள ஜனத்தொகை இன்று முப்பது விகிதத்தை நெருங்கியுள்ளது. வடக்கு கிழக்கு மாவட்டங்கள் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் என்பது பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் இரண்டிலும் சொல்லப்பட்டுள்ளது. இவை பற்றி விளக்கம் இல்லாதவர்கள் இந்த ஒப்பந்த நகல்களை எடுத்து படித்து தம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது ஒரே நாடு. எனவே, சிங்கள மக்கள் தன்னிச்சையாக வடக்குக்கு சென்று குடியேறலாம் என்பதுதான் நமது கட்சியின் கொள்கை. இதுவே இங்கு சமூகமளித்துள்ள ஏனைய கட்சிகளினதும் கொள்கை.
சாதாரண சிங்கள மக்களை வட கிழக்கில் குடியேற வேண்டாம் என எவராவது சொல்வார்களானால், அதை நாம் முன்னின்று எதிர்ப்போம். எனக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி சாதாரண சிங்கள மக்கள் வடக்குக்கு சுற்றுலா போய் வருகிறார்கள். ஆனால், பெருவாரியாக வடக்கில் குடியேற இன்று சாதாரண சிங்கள மக்கள் பெரும் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் இந்த அரசாங்கம், இன்று வடக்கில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் குடும்பங்களை, அவர்களுக்கு வீடு, காணி, கடன் வசதிகள் வழங்கி குடியேற்ற திட்டமிட்டு செயல்படுகிறது. இது திட்டமிட்ட குடியேற்றம். இது வட கிழக்கில் தமிழ், முஸ்லிம் குடிபரம்பலை திட்டமிட்டு குறைத்து, அவர்களை அவர்களது சொந்த பூமியிலேயே சிறுபான்மை ஆக்கும் கபட திட்டம். இதை நாம் திட்டவட்டமாக எதிர்க்கிறோம்.
தமிழ் முஸ்லிம் மக்கள் கொழும்பில் வாழ்வது சுயாதீன வாழ்கை ஆகும். இது திட்டமிட்ட குடியேற்றம் இல்லை. இந்த நமது நாட்டின் தலைநகரம். இங்கு வாழ தமிழ், முஸ்லிம் மக்களுக்கு என்றது அனுமதியும் தேவை இல்லை. தயவு செய்து திட்டமிட்ட குடியேற்றத்தையும், சுயாதீன குடி பரம்பலையும் ஒன்றாக நினைந்து குழப்ப வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் உட்பட அரசாங்க கட்சி அரசியல்வாதிகளை கேட்டுகொள்கிறேன்.
No comments:
Post a Comment