
நேற்று கொழும்பில் முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
சிங்கள மக்கள் வடக்கு, கிழக்கில் சுயாதீனமாக வாழ்வதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அங்குள்ள தமிழ் மக்களின் சனத்தொகைப் பரம்பலை மாற்றி அமைக்கும் வகையில் அரசால் திட்டமிட்ட அடிப்படையில் சட்டவிரோதக் குடியேற்றங்கள் நிறுவப்படுவதையே நாம் எதிர்க்கின்றோம். கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் மூலம் மாணவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தாது 18 மாதங்களுக்குத் தடுத்துவைத்து அவர்களைக் குற்றவாளிகளாக்கித் தண்டனை வழங்கமுடியும். கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் தங்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு கூறினார்கள் என்று அரசு கூறுகிறது. இது வெறும் கேலிக்கூத்தாகும்.
தமிழ் இளைஞர்கள் வன்முறையில் இறங்கவேண்டும், அவர்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டவேண்டும் என்பதே அரசின் திட்டம். அதற்கான பாதையை அரசு திறந்துள்ளது. இந்தச் சதித்திட்டத்தை நன்கு விளங்கி தமிழ் இளைஞர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். அரசின் இந்த சதி வலையில் சிக்கிவிடக்கூடாது. வன்முறையில் இறங்கிவிடக்கூடாது.
தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் அறவழிப் போராட்டத்தில் இளைஞர்கள் இணையவேண்டும். தமிழ்ப் பெண்களை அரசு பலவந்தமாக இராணுவத்தில் சேர்த்துள்ளது. இவர்கள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் கேள்வி எழுப்புகிறோம். எந்தப் பதிலையும் அரசு வழங்கவில்லை.
இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்களில் சிலர் தப்பி ஓடியும் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டும் உள்ளனர். இவை அனைத்தையும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் செயலாகவே நாம் பார்க்கிறோம். இந்த மாதிரியான அடாவடித்தனங்களை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். தமிழர்களை அமைதியாக வாழ அனுமதிக்கவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment