
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈழத்தமிழர்களின் ரத்தம் தோய்ந்த கரங்களுடன் இயங்கி வரும் சிங்கள விமானப் படையினரை தாம்பூலம் வைத்து வரவழைத்து உபசரித்து பயிற்சி கொடுக்கின்ற அக்கிரமத்தை இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி கொடுப்பதை அறிந்து தமிழகத்தில் கண்டனமும் எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சிங்கள விமானப்படையினருக்கு பெங்களூரில் எலகங்கா விமானப்படை தளத்தில் தற்போது பயிற்சி கொடுக்கப்படுகிறது.
அண்மையில் இந்திய-இலங்கைக் கடற்படைப் பயிற்சி திருகோணமலை கடற்கரைக்கு அருகில் நடத்தப்பட்டது. இலங்கை கடற்படைக்கு இரண்டு கப்பல்களையும் கட்டித் தருகின்ற வேலையிலும் இந்தியா ஈடுபட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு உண்மை வெட்டவெளிச்சமாகி விட்டது.
சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக்கு இந்திய அரசுதான் உடந்தை என்ற உண்மை அம்பலமாகி விட்டது. இந்தியாவின் மத்திய அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுமே இந்தப் பழிக்கு பொறுப்பாளிகள் என்பதை தமிழக மக்களும் இந்திய மக்களும் அறிந்து கொள்வார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் செய்து வருகின்ற தொடர் துரோகத்தை இந்திய அரசு இத்துடனாவது நிறுத்திக் கொண்டுஇ சிங்கள விமானப் படையினரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும். இலங்கை விமானப்படை கடற்படை மற்றும் ராணுவத்தோடு ரகசியமாகச் செய்து உள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment