2007ம் ஆண்டு முசலிப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் காரணமாக அப்பகுதியில் இருந்து பொது மக்கள் வெளியேறியிருந்தனர்.
நாட்டின் வட பகுதியான வன்னிப்பிரதேசத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையினைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவடைந்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதனை அடுத்து மீள் குடியேற்ற நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆயினும் முசலிப் பிரதேசத்தின் முள்ளிக்குளம் கிராமத்தை தவிர்ந்த ஏனைய கிராமங்களில் தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியிருக்கின்றன.
இந்நிலையில் நீண்டபல காலங்களுக்குப்பின் முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக கிராமமான முள்ளிக்குளத்திற்க அருகாமையில் உள்ள மளங்காடு எனப்படம் பெரிய குளம் பகுதியிலேயே குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.
ஆயினும் அங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை, இந்நிலையில் அவர்களது அன்றாட வாழ்வியல் காடுகளுக்குள்ளேயே இடம்பெற்று வருகின்றது.
அரசாங்க தரப்பால் இப்போதுதான் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிக்குளம் மக்கள் இடம்பெயர்விற்கு உள்ளாகும் போது எவ்வாறு அங்கிருந்து வெளியேறினார்களோ அதேபோன்றுதான் தற்போதைய மீள் குடியேற்றத்தையும் பார்க்க வேண்டியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராலிங்கம் தெரிவிக்கின்றார்.
குடியேறியிருப்பவர்களில் பெண்களும் உள்ளடங்கியிருப்பதால் அவர்களில் வயோதிபர்கள், கர்ப்பிணிகள் கைக்குழந்தை தாய்மார் போன்றவர்களின் தேவைகள் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
இந்நிலையில் பெண்களைப் பொருத்தமட்டில் அசௌகரியம் நிறைந்த ஓர் மீள் குடியேற்றமாகவே பார்க்கப்படுகின்றது.
சுகாதார மற்றும் வைத்திய வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் முகம் கொடுத்திருக்கும் இக்குடியேற்றம் பலத்த சவாலாகவே அம்மக்களுக்கு இருக்கின்றது.
எனவே அரசாங்கமும் அரசு சாரா அமைப்புக்களும் குடியேறியிருக்கும் இம்மக்களது நலனில் கரிசனை கொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க முன்வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment