Translate

Saturday, 7 July 2012

மிக மோசமான அதி உச்சக்கட்ட அடிப்படை மனித உரிமை மீறல் கைதியின் உடலை வழங்க மறுத்தமை குறித்து நாடாளுமன்றத்தில் சம்பந்தன் நேற்று காட்டம்


news
 ”தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து கொலை செய்யாது அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதோடு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.''
 
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றியபோது மிகவும் காட்டமாகத் தெரிவித்தார். 
 
அவர் மேலும் கூறியவை வருமாறு:
ஜூன் மாதம் 29ஆம் திகதி கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது பலர் காயமடைந்தனர். சிலர் கோமா நிலையை அடைந்தனர். ஒருவர் மரணமடைந்தார். 
 
ஜூலை மாதம் 4ஆம் திகதி மரணமடைந்த நிமலரூபனின் உடல் அவரின் உறவி னர்களிடம் கையளிக்கப்படவில்லை. இது அதி உச்ச அடிப்படை உரிமைமீறலாகும்.
அரசு இந்த விடயத்தில் உடன் தலையிட்டு அவரின் உடலை உறவினர்களிடம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 
 
உறவினர்கள் இறுதிக்கிரியை நடத்து வதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும். 
இந்தக் கொலை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். கைதிகளை விடுதலை செய்யுமாறு மே மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அவ்வாறு வேண்டுகோள் விடுத்து ஒரு மாதத்திற்குள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
அரசு, இந்தக் கைதிகளை இவ்வாறு கொலை செய்யாது மன்னிப்புக் கொடுத்து அவர்களை விடுதலை செய்யவேண்டும். ஏராளமானோர் விடுதலை செய்யப்படுவதை நாம் பார்க்கிறோம். அதுபோல் இந்தக் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும். 
இறந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் மீண்டும் ஒரு தடவை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment