Translate

Saturday, 7 July 2012

ஆகஸ்ட் 12ம் தேதி டெசோ மாநாடு: சென்னையில் நடத்த கருணாநிதி முடிவு


சென்னை: விழுப்புரத்தில் நடத்த திட்டமிட்டிருந்த, தமிழ் ஈழ ஆதரவு (டெசோ) மாநாட்டை சென்னையில் நடத்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி, இம்மாநாட்டை விழுப்புரத்தில் நடத்த முன்னதாக, தி.மு.க., திட்டமிட்டிருந்தது. இப்போது இம்மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலில், ஆகஸ்ட் 12ம் தேதி நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது. மாநாட்டில் இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்தும், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். எனவே, இம்மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாநாட்டின் வரவேற்புக் குழுவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, ஏ.வ.வேலு, ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பாலு ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, காஷ்மீரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மே.வங்க முதல்வர் மம்தா, மத்திய அமைச்சர் சரத்பவார், இலங்கை எம்.பி., சம்மந்தம் மற்றும் விடுதலைப் புலிகள், டெலோ போன்ற தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளின் முன்னணி பிரமுகர்கள் ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதியே நேரடியாக அழைப்பு அனுப்பியுள்ளார்.


இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குழப்பம்: ""இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள குழப்பங்களைப் போக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், தனியார் பள்ளிகளும், 25 சதவிகிதம் மாணவர்களுக்கு, இலவச கல்வி அளிக்க வேண்டும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இச்சட்டம், முதல் வகுப்புக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், இச்சட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. மேலும், இதுதொடர்பாக, பெற்றோர்கள் தொடர்ந்துள்ள வழக்கில், சென்னை ஐகோர்ட், பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இக்கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாமல், மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த குழப்பங்களைப் போக்கி, உரிய விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும். அப்போது தான், சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். நேர்மையாக செயல்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், சஸ்பென்ட் செய்யப்பட்டும், கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டும் உள்ளனர். லஞ்ச நடவடிக்கைகளை தடுக்க முயன்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, இந்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment