Translate

Thursday, 5 July 2012

தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்ற நோக்கில் நிமலரூபனின் உடல் பெற்றோரிடம் கையளிக்க மறுப்பு.


தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்ற நோக்கில் நிமலரூபனின் உடல் பெற்றோரிடம் கையளிக்க மறுப்பு. 
தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் கொழும்பை அண்மித்த றாகம வைத்தியசாலையில் கொல்லப்பட்டான். உடல் முழுவதும் அடிகாயங்களின் தழும்புகள். அவனது தலையில் காயம். இரண்டு கால்களும் பனம் கிழங்காய் கிழிக்கப்பட்டன. இடுப்பு பகுதியில் பாரிய சிதைவு. தான் மரணிக்கப் போவதாக பலமுறை அவன் அழுதிருக்கிறான்.
அவனது கண்ணீர் வற்றியதாக அவனருகில் இருந்தவர்கள் சொல்கிறார்கள். அவன் கொல்லப்பட்ட அதிகாலைக்கு முந்தய இரவு அவனது உடலில் நீர் வடிந்திருக்கிறது. காயங்களினால் உடல் துடித்திருக்கிறது. அவனது அலரலையும், வேதனையையும் அங்கிருந்த கொடுங்கோலரின் படைகளிடம் சக கைதிகள் எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் அந்தக் கொடியவர்கள் தமக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி நித்திரைக்குப் போய்விட்டார் காலையில்தான் வருவார்,
அதனால் காலையே வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியும் எனக் சொல்லியிருக்கிறார்கள். இரவு முழுவதும் உடல் வேதனையால் துவண்ட அவனின் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாகவே றாகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள் அரக்கர்கள். ஆனால் காலை 5.30 மணியளவில் அவனது உயிர் காயங்களால் வதைக்கப்பட்ட உடலைவிட்டு போய்விட்டது.
புத்தரின் போதனைகளால் பௌத்த தர்மத்தால் ஆகர்சிக்கப்பட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள் நிமலரூபன் மாரடைப்பு ஏற்பட்டதனால் மரணமானான் என கூறுகிறார்கள். அவன் அடித்துக் கொல்லப்பட்டதாக எவரும் கருதினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்கிறார்கள்.
அவனது கொலையின் பின் வவுனியா விரைந்த புலனாய்வுப் பிரிவினர் 70 வயது நிரம்பிய தந்தையையும் 65 வயது நிரம்பிய தாயையும் பலாத்காரமாக றாகமவிற்கு தம்முடன் ஏற்றிச் சென்றார்கள். உறவினர்களோ நண்பர்களோ அவர்களின் சட்டத்தரணிகளோ சந்திக்க முடியாதவாறு தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
அவர்கள் எங்கிருந்தார்கள் என்பதனை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரைத் தவிர எவரும் அறியவில்லை. அறிந்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் எனச் சொல்கிறார்கள்.
றாகம வைத்தியசாலை வளாகம் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டது. நிமலரூபனின் கொலைபற்றியும் நடந்தவைபற்றியும் அறியச் சென்ற உந்துள் பிரேமரட்ண குழுவை இலங்கைப் பாதுகாப்பு தரப்பு உட்செல்ல அனுமதிக்கவில்லை. உட்சென்று நடந்த உண்மைகளை தெரிந்து கொண்டால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் எனக் கூறுகிறார்கள்.
தமது மகனின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வருந்திக் கேட்டார்கள். அழுதார்கள். புலம்பினார்கள். மன்றாடிக் கேட்டார்கள். அவர்களிடம் கண்ணீர் இல்லை என்றாகிப் போனது. இரங்கினார்களா இல்லையே. கொடுங்கோலரின் நீதியைத் தொலைத்த மன்றத்திடம் தம்மால் அடித்துக் கொல்லப்பட்ட நிமலரூபனின் உயிரில்லா உடலை வவுனியா கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம் என உத்தரவை வாங்கியது காவற்படை.
ஆதலால் நீர்கொழும்பு அல்லது அதனை அண்மித்த கொழும்பில்தான் அவனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறந்தது. நிமலரூபனின் உடல் வேறு இடம் நகர்ந்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் எனவும் உத்தரவு கூறியது.
இரத்தக் கண்டல்களாலும், காயங்களாலாலும் சிதைந்த நிமலரூபனின் உயிரில்லா உடலை 65 வயது தாயும், 70 வயது தந்தையும் வவுனியாவுக்கு கொண்டு சென்றால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்றும் நீதியை எழுதியது நீதிமன்றம். சிறைக்குள் இருந்து பிரிவினைவாதத்தை துண்டும் நடவடிக்கையில் நிமலரூபன் ஈடுபட்டதாக பொலிசார் சொன்னதையும் தீர்ப்பாகினார் நீதிபதி.
வவுனியாவின் ஒரு ஓரத்தில் காட்போட் மட்டைகளிலான வீட்டில்தான் அடுத்த நேர உணவுக்கே அல்லாடும் அந்த வயோதிபப் பெற்றோர் வாழ்ந்தார்கள். வன்னியிலே இருந்த போது தாம் பெற்றெடுத்த அந்த ஒரே மகன் நிமலரூபன் தான் தமக்கு கஞ்சி ஊற்றினான் என்றார்கள் அவர்கள். இறுதி யுத்தத்தில் மக்களோடு மக்களாக அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த நிமல ரூபன் சந்தேகத்தின் பேரில் கைதானான் என்கிறார் வயோதிபத் தாய். ஒரே பிள்ளையாகிய அவனது உழைப்பிலேயே தமது வயோதிபத்தை கழித்தார்கள்.
கைது செய்யப்பட்ட காலம் முதல் நிமல ரூபன் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொண்டு இருக்கிறான். அதனால் மூச்செடுக்க முடியாத வருத்தங்களுக்கு ஆட்பட்டு இருக்கிறான். பலதடவைகள் சிறைச்சாலையூடாக சிகிச்சைகளையும் பெற்றிருக்கிறான். சிறைச்சாலை உணவு அவனது உடலை தேற்றாது என்பதனால் தாம் சமைத்துக் கொண்டுபோய் உணவைக் கொடுத்திருக்கிறார்கள் அந்தப் பெற்றோர்கள்.
அவ்வாறு செல்லும் போதெல்லாம் 'அம்மா நான் இங்கிருந்தால் செத்துப் போய்விடுவேன் என்னை வெளியில் எடுங்கள்' என பலமுறை அழுதிருக்கிறான் நிமலரூபன். அடுத்த நேரச் சாப்பாட்டுக்கே அல்லலுறும் அந்த வயோதிபப் பெற்றோர் இலங்கையின் நீதியில்லா மன்றங்களிடம் நீதிக்காக போராட பணத்திற்கு எங்கு போவார்கள்.
ஆனாலும் இரக்கப்பட்ட வள்ளல்கள் சிலரிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு தொகை பணத்துடன் உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்ய சட்ட வல்லுணர்களை ஏற்பாடு செய்திருந்தர்கள். வறுமை வயோதிபம், பிள்ளைப் பாசம் என்பவற்றால் துடித்த அந்தப் பெற்றோர் விரைவாகவே தமது ஒரே மகனை வெளியில் எடுத்து விடலாம். அவனுடன் தமது வயோதிபத்தை கழிக்கலாம் என ஏங்கியிருந்தார்கள்.
ஆனால் யூன் 29 வெள்ளிக் கிழமை காலை 23 அரக்கர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, உள்ளிருந்தவர்களை மயக்கியபின் மண்வெட்டிப் பிடிகளுடன் உட்புகுந்து ஊழித் தாண்டவம் ஆடி தமது மகனையும் அவனுடன் இருந்தவர்களையும் அடித்து நொருக்குவார்கள் என்பதனை அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை.
காயப்பட்ட மகனின் நிலையறியாது தவித்த பெற்றோர் கொடுங்கோலரின் புலனாய்வுப் பிரிவினருடன் சென்றதன் பின்புதான் தமது ஒரே ஒரு பிள்ளையும் தம்மை விட்டு நிரந்தரமாகவே போய்விட்டதை உணர்ந்தார்கள்.
சொல்லொனாத் துயரங்களைச் சுமந்து தாம்பெற்ற ஒரே மகனை கொடுஞ் சிறையில் இருந்து உயிருடன் மீட்கலாம். நீதியில்லா மன்றங்களிடம் நீதியை தேடிக் கண்டு பிடிக்கலம் எனத் ஏங்கிய வயோதிபப் பெற்றோர் இப்போ காயங்களால் உருக்குலைந்த உயிரில்லா உடலையும் மீட்க முடியாமல் கொடுங்கோலரின் நீதியை தொலைத்த மன்றங்களால் தடுக்கப்பட்டுள்ளனர்.
நிமலரூபனின் உயிரும் இன்றில்லை உடலும் இனியில்லை. வறுமையால் வாடும் வயோதிபத்தை பார்த்து பௌத்தம் மீண்டும் ஒருமுறை வெட்கித் தலைகுனிந்தது.

No comments:

Post a Comment