அன்று நீங்கள் மூட்டிய தீ
எம் விழியோரம் நிரந்தரமாய்...
மறக்க சொல்கிறார்கள்
மரக்கச் சொல்கிறார்கள்...
மறந்திருப்போம்..நாமும்
நிச்சயமாய் மறந்திருப்போம்
நீங்கள் மனிதர்களாக
மறக்காமல் வாழ்ந்திருந்தால்!
அரக்கர்களாகி எம் இனத்தின்
குருதி குடிக்காது இருந்திருந்தால்...
பிள்ளைக் கரி உண்டு பசி போக்கிய
கயமைத் தனம் கொள்ளாது இருந்திருந்தால்..
வெடி குண்டுக்குள்
தீய்ந்த எம் காலைகள்
எப்படி பூபாளம் பாடி
மெல்ல விழி திறக்கும்?
எம் இனம் மரணச் சாகரத்தில்
நித்தம் நித்தம் குளிக்காதிருந்தால்
நீங்கள் அன்பெனும் நீரால்
எமக்குள் பற்றி எரியும்
பகை நெருப்பை நீரூற்றி
அணைக்க முயன்றிருந்தால்
ஒரு வேளை
காயங்களை மறந்த
மந்தைகளாகி இருப்போம்!
நாம் சகோதரத்துவம் பேசிய
கணங்களில் எல்லாம்
எம் இதயங்களை கூர் வாளால்
குத்திக் கிழித்தபின்...
சமாதானத்தை உச்சரிக்கச் சொல்லி
ஆயுத முனையில் எம்மை
வற்புறுத்துகின்றீர்கள்!
எப்படி முடியும்?
எங்கள் பூவிதயங்களில்
தீ மூட்டியோரே..
பூக்கள் எல்லாம் பூகம்பங்களாகி நாளாயிற்று!
எங்கள் விழிகளில் கொப்பளிக்கும்
அக்கினிக்கு இனி நீங்கள் பதில் சொல்லுங்கள்!
எம்மை பொசுக்கினாலும்
எம் சாம்பல்கள் கூட புரட்சியையே பாடும்!
ஏனெனில் விலை பேச முடியாத உயிர்களை
ஆயிரம் ஆயிரமாய் பறித்தவர்கள் நீங்கள்!
விலை கொடுத்தவர்கள் நாங்கள்!
எங்கள் விடுதலையை கனவு கண்டவர்கள்
விழிகளை புதைத்துவிட்டு
அவர்கள் கனவுகள்
அழிந்ததென் பகல் கனவு காண்பவர் நீங்கள்!
அந்த விழிகள் எம் விழிகளுக்குள்
தீ மூட்டி துயில் மறக்க செய்ததை
நீங்கள் அறிவீரா?
பதில் இல்லா வினாக்களுக்கு
காலம் பதில் சொல்லும்.
கண்ணீர் மறந்தோம்
தீயை சுமக்கும் எம் விழிகள்
நாளை வரலாறு சொல்லும்
நாம் புதைக்கப் பட்ட இனம் அல்ல
விதைக்கப் பட்ட இனம்...என்று..
சாம்பல்களில் இருந்தும் எழுந்து
புது விதி எழுதி விடுதலை பெற்ற
இனம் என்று சத்தியமாய்
சரித்திரங்கள் பாடும்!
இது எம்மை வாழ வைக்க தம்மை எரித்த
கருப்பு நெருப்புகள் மீது ஆணை!!!!!!
No comments:
Post a Comment