தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி., உள்பட பலரும் தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும், தெரிவித் துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டின் கொந்தளிப்பை புரிந்து கொண்ட மத்திய அரசு அவசர அவசரமாக இலங்கை இராணுவத்தினரை தாம்பரம் விமான பயிற்சித் தளத்திலிருந்து பெங்களூருக்கு மாற்றியுள்ளது.
இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் எதிர்ப்பின் அடிப்படை நோக்கம். சென்னையில் கொடுப்பதைத் தான் எதிர்க் கிறோம். வேறு இடத்தில் கொடுப்பதை எதிர்க்க வில்லை என்று யாரும் சொல்லவில்லை.
சென்னையில் பயிற்சி கொடுத்தாலும் சரி, பெங்களூருவில் கொடுத்தாலும் சரி, அல்லது காஷ்மீரில் கொடுத்தாலும் சரி, பொருள் ஒன்றுதான் - நோக்கமும் ஒன்றுதான்.
இந்தியாவில் உள்ள தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர்களான ஈழத் தமிழர்களை சிங்கள இனவெறிப் பாசிச அரசு பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்துப் பசியாறிய பிறகும், மேலும் தாகம் கொண்ட சிங்கள ஓநாயாக வெறிபிடித்துச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
இந்தப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சனை என்கிற அளவுக்கு அலட்சியப்படுத்திய பல்வேறு நாடுகளும்கூட, நடைபெற்ற நிகழ்வுகளின் மூர்க்கத்தனத்தை, மிருகவெறியை அறிந்த நிலையில் மனிதநேய உணர்வோடு சிலிர்த்து எழுந்துள்ளன.
அதன் விளைவுதான் அய்.நா.வின் ஜெனிவா தீர்மானம்; பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டி வந்த இந்தியாவும்கூட, தமிழ்நாடு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கடைசி நேரத்தில் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவுக் கரத்தை நீட்டியது.
சிங்கள அதிபர் ராஜபக்சே போர்க் குற்றம் செய்துள்ளார் என்ற கருத்து நாளும் உறுதிப்பட்டு வருகிறது. அதற்குமுன் செய்யப் பட வேண்டிய விசாரணைகளும் ஓரளவு நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றன.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா, இராணுவப் பயிற்சி அளிப்பது எந்த வகையில் சரியானது? உகந்தது? இது ஒருவகையான இரட்டை வேடம் அல்லவா!
சென்னையில் கொடுக்கப்பட்ட பயிற்சியை பெங்களூரில் கொடுப்பதால் தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கிறதா? தமிழர்களைச் சிறு பிள்ளைகள் - என்று நினைத்து கிளுகிளுப் பையைக் காட்டி ஏமாற்றி விடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறதா?
1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தோல்விக்கு பொன் விழா கொண்டாடப் போகும் நிலையில்கூட, தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற உணர்வுக்குத் திரும்பவில்லையென்றால் அதன் முடிவுரையை அதுவே எழுதி முடிப்பதாக உறுதியாக முடிவு செய்துகொண்டு விட்டது என்று பொருள்.
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இலங்கை இராணுவத்தினருக்கு எந்த வகையான பயிற்சியையும் அளிக்கக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாடு.
தமிழ்நாட்டுக் காங்கிரஸ் இதனை உரிய வகையில் மத்திய அரசுக்குத் தெரிவிப்பது நல்லது.http://viduthalai.in/page-2/
No comments:
Post a Comment