சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் வடக்கில் படையினரைக் குறைப்பது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் முக்கியமாக கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது வடக்கில் சமூக வாழ்வில் சிறிலங்காப் படையினரின் தலையீடுகளை குறைக்கப்பட வேண்டும் என்று சிவ்சங்கர் மேனன் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், வடக்கில் அத்தகைய இராணுவத் தலையீடுகள் ஏதும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச நிராகரித்திருந்தார்.
அத்துடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட படைக்குறைப்புத் தொடர்பான விபரங்களையும், அங்கு அபிவிருத்தி வேலைகளுக்கு சிறிலங்காப் படையினர் எவ்வாறு உதவுகின்றனர் என்பது குறித்தும் அவர் சிவ்சங்கர் மேனனுக்கு விளக்கிக் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாகவும் உறுதியாகவும்- இருவருக்கும் இடையில் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை படையினர் தலையீடுகளை மேற்கொள்வதில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ள போதிலும், அந்தக் கருத்துக்கு முரணான வகையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார் சிறிலங்காப் படைகளின் யாழ். படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க.
அரசசார்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் சிறிலங்காப் படையினர் பொதுமக்களின் விவகாரங்களில் எத்தகைய தலையீடுகளை மேற்கொள்கின்றனர் என்பது பற்றிய சில விபரங்களை வெளியிட்டுள்ளார்.
“யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் கிராமங்கள் தோறும் அபிவிருத்திக் குழுக்களை உருவாக்கியுள்ளோம். இது யாழ்.படைத் தலைமையகத்தின் திட்டம்.
கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள அபிவிருத்திக் குழுக்கள் மூலம் ஒவ்வொரு கிராமமும் சிறிலங்கா இராணுவத்தின் டிவிசன், பிரிகேட், பற்றாலியன்கள் என்ற அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமக் குழுவிலும் கிராம தலைவர், கிராம அதிகாரி, கிராமத்தில் மதிப்புமிக்கவர்கள், மதகுரு அல்லது குருக்கள், மூத்த குடிமக்கள், உயர்தர மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுக்கள் இரு வாரங்களுக்கு ஒருமுறை கூடி கிராமத்தில் உள்ள பிரச்சினைகள் – விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுகின்றன.
அந்த மட்டத்தில் பிரச்சினை தீர்க்கப்படாது சிக்கலானதாக இருந்தால், அவர்கள் அதனை யாழ். படைகளின் தலைமையகத்துக்கு கொண்டு வருவர். அவர்கள் அதற்கு உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண்பர்.
இதைவிட, யாழ்.படைகளின் தலைமையகம் குடியியல் இராணுவ இணைப்பு பணியகம் ஒன்றை மூத்த அதிகாரி ஒருவர் தலைமையில் அமைத்துள்ளது. பற்றாலியன் மட்டத்திலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவும் பொதுமக்களின் பிரச்சினைகளை கையாண்டு வருகிறது. இதற்காக 15 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.“ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment