Translate

Thursday, 12 July 2012

கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வில்


பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை பெற உள்ள கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வில் சகல தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.


தமிழ் மக்களுக்கெதிரான சிங்கள இனவெறி அரசாங்கங்களின் இன அழிப்பின் இரத்தக்கறை படிந்த மற்றொரு அத்தியாயம் ' ஜூலை 23'. சிங்கள காடையர்களால் 3000 இற்கும் அதிகமான மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டும், பல கோடிகள் பெறுமதியான அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர். குட்டிமணி தங்கத்துரை உட்பட ஏராளமான தமிழ் சிறைக் கைதிகள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். இந்த அவலம் முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து இன்றும் அரங்கேற்றப் பட்டுவருகிறது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்னர் வவுனியா சிறைச்சாலையில் தமிழ் கைதியான நிமலரூபன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக் கூடங்களிலும் தடுப்பு முகாங்களிலும் சிறைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தினமும் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் போராளிகள் பலரை படுகொலை செய்து காணாமற் போனோர் பட்டியலில் சேர்த்து வருகின்றது சிறீலங்கா அரசு.


1983 ஜூலை நிகழ்வுகளை நினைவு கூரும் அதேவேளை தொடரும் இன அழிப்பின் அங்கமான தமிழினத்திற்கெதிராக சிறிலங்கா அரசால் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்ற படுகொலைகளையும், தமிழ் மக்களை அவர்களது பூர்வீக நிலங்களில் குடியேறவிடாது, அதை அபகரித்து, தமிழர் தாயக நிலங்களை துண்டாடி சிங்களமயமாக்கலினை நடத்தி வருவதையும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு சர்வதேசத்திடம் முறையிடுவோம்.


இலக்கம் 10 டௌனிங் வீதியில் உள்ள பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் முன்பாக எதிர்வரும் திங்கட் கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை கறுப்பு ஜூலை தினத்திற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் சகல தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
 

No comments:

Post a Comment