Translate

Thursday, 12 July 2012

செனட் சபையே 13+ 2013 செப்டெம்பரில் வடமாகாண சபைத் தேர்தல் ஜனாதிபதி "இந்து'வுக்கு தெரிவிப்பு

செனட் சபையே 13+ 2013 செப்டெம்பரில் வடமாகாண சபைத் தேர்தல் ஜனாதிபதி "இந்து'வுக்கு தெரிவிப்பு 


வட மாகாண சபைக்கான தேர்தலை 2013 செப்டெம்பரில் நடத்துவதற்கு விரும்புவதாகத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை படிமுறையாக மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, அரசியல் தீர்வாக 13 + ஸை வழங்கப்போவதாக அவர் முன்னர் குறிப்பிட்டிருந்த உத்தேச செனட் சபையே அந்த 13 + என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். 


அலரி மாளிகையில் இந்துப் பத்திரிகையின் நிருபருடன் கலந்துரையாடியுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷ, தேர்தலை நடத்துவதற்கு முன்பாக வடக்கில் பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதில் முக்கியமானதாக இருப்பது தேர்தல் இடாப்பாகும். யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தற்போதும் திரும்பிச் சென்றுகொண்டிருப்பதுடன் தமது காணிகள் சொத்துக்களுக்க உரிமை கோருகின்றனர். அவர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.


 இறுதியாகத் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் முப்பது வருடங்களுக்கு மேற்பட்டதாகவும் இப்போது மாகாணத்திலுள்ள வாக்களிக்கும் தகைமை பெற்றவர்களுடன் அந்தப் பழைய இடாப்பு தெடார்பற்றதாகக் காணப்படுகிறது. 
அதேவேளை புனர்வாழ்வு, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இரண்டாவது முக்கிய விடயமாகக் காணப்படுகின்றன. சர்வதேச ஆதரவுடன் இடம்பெற்றுவரும் இந்த நடவடிக்கைகள் விரைவில் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வாழ்வாதார விடயங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. 

தேர்தலை நடத்துவதானது தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கான விடயத்தில் முன்னோக்கி நகர்வதற்கான முக்கியமான விவகாரமாக உள்ளது. உண்மையில் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னரே இது சாத்தியப்பாடான விடயமாக இருந்தது. (உடன்படிக்கையின் பிரகாரம் அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது) அதிகாரப் பகிர்விற்கான சரத்தையும் இது கொண்டிருக்கிறது. இந்தத் திருத்தங்கள் ஏனைய  பிராந்தியங்களுக்கு அனுகூலத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் அதாவது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு பயனளித்திருக்கின்ற போதிலும் வடக்கைத் தவிர சகல மாகாணங்களிலும் மாகாண சபைகள் செய்யப்படுகின்றன. 
இதேவேளை அன்றாட வாழ்வின் சகல படிநிலைகளிலும் இராணுவத்தின் பிரசன்னம் காணப்படுவது குறித்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தேவைப்படும் போது மட்டுமே இராணுவம் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென இராணுவத்திற்கு தான் அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகக் கூறியுள்ளார். 

இது இவ்வாறிருக்க 2009 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளைக் கொழும்பு அமுல்படுத்தியிருக்காததாலேயே பேரவையில் இந்தியா இலங்கைக்கெதிராக வாக்களித்தது என்பதை ஏற்றுக்கொள்வதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். தனது அரசாங்கம் சகல வாக்குறுதிகள் தொடர்பாகவும் செயற்பட்டிருப்பதாகவும் அவற்றை மேற்கொண்டிருப்பதாகவும் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்கள் யாவற்றையும் நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதற்குக் கூட தான் விரும்புவதாகக் கூறியிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
13+ தொடர்பாக முதற்தடவையாக ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். செனட் சபையை உருவாக்குவதே 13+ என அவர் குறிப்பிட்டுள்ளார். “13 ஆவது திருத்தத்திலும் கூடியது என்று நான் கூறியிருந்தேன். பின்னர் சங்கர் (இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்) செனட் அமைப்பதையா நான் அர்த்தப்படுத்துகிறேன் என்று அவர் கேட்டார். ஆம் என்று நான் கூறினேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
ஜெனீவா விவகாரங்களுக்குப் பின்னர் ஜூன் 29 இல் ராஜபக்ஷவை மேனன் சந்தித்திருந்தார். நவம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உலக காலக்கிரம மீளாய்வதற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. அதேசமயம், செனட் சபை உருவாக்கமும் தீர்வும் பாராளுமன்றத்தில் இருந்தே வெளிவர வேண்டிய தேவை இருப்பதாக ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு முக்கியமானதாக இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment