Translate

Friday 18 May 2012

இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்!


இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்!
இலங்கை வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் பலர் காணாமல் போயுள்ளனர்.
சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தவில்லை.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
இதேபோன்று சரணைடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ், இராணுவத்தினரின் சித்திரவதையின் பின்னர் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இறுதிநாட்களில் சரணடைந்த பல போராளிகளை இதுவரை அரசாங்கம் உறவினர்களுக்கு காட்டாது இருப்பது, இவர்கள் இறுதி நாட்கள் பா.நடேசன், புலிதேவன், ரமேஸ் போன்று கொல்லப்பட்டுவிட்டார்களா? என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் இறுதி நாட்களில் முதுகுப்பகுதியில் பலத்த காயமடைந்திருந்தார். இவரை இவரது மனைவியும் உறவினர்களும் முல்லைத்தீவு பகுதியில் வைத்தே இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் அவரை இதுவரை அவரது உறவினர்களுக்கு காட்டவில்லை.
தளபதி லோறன்ஸ், கி.பாப்பா ஆகிய இருவரும் இணைந்து படையினரிடம் சரணடைந்திருந்தனர். லோறன்ஸ் இறுதியாக நீல நிற செக் சாரமும் பிறவுன் கலர் இரண்டு பக்கமும் பொக்கற் வைத்த சேட்டும் அணிந்திருந்திருக்கின்றார்.
அதேவேளை மெல்லிய நீலநிறத்திலான சேட்டும், நீல சாரமும் அணிந்திருந்த கி.பாப்பா கிலட்சஸ் ஒன்றின் உதவியோடு முல்லைத்தீவுப்பகுதிக்கு சென்றிருந்தார்.
இவர்களை இறுதியாக வன்னிச்செய்தியாளர் ஒருவர் படையினரால் காயமடைந்தவர்களை ஏற்றும் பகுதியான முல்லைத்தீவு பகுதியில் வைத்து, மிக அருகாமையில் கண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனவர்களில் ஒரு தொகுதியினர் குறித்த விபரங்கள் வருமாறு,
மணலாறு கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவரான செல்வராசா
மணலாறு கட்டளைப் பணியக தளபதிகளில் ஒருவரான பாஸ்கரன்
இம்ரான் பாண்டியன் சிறப்புத்தளபதி வேலவன்
தளபதி லோறன்ஸ்
தளபதி குமரன்
விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்
மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவரான பிரபா
தமிழீழ அரசியல் துறைதுணைப் பொறுப்பாளர் சோ.தங்கன்
வழங்கப்பகுதி பொறுப்பாளர் ரூபன்
நகைவாணிபங்களின் பொறுப்பாளர் பாபு
தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர் வீரத்தேவன்
தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கி.பாப்பா
தமிழீழ விளையாட்டுத்துறை துணைப் பொறுப்பாளர் ராஜா(செம்பியன்) அவரது மூன்று பிள்ளைகள்.
தமிழீழ அரசியல் துறையைச்சேர்ந்த கானகன்
தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர். வெ.இளங்குமரன்,மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள்
தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவரான அருணா
விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன், உதவியாளர் போராளி ஐங்கரன்
தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப் பணிப்பாளர் சொ.நரேன்
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர் பிரியன் மற்றும் குடும்பம்
தமிழீழ நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர் வீ.பூவண்ணன்
தமிழீழ நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கையா
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான மலரவன்
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான பகீரதன்
தமிழீழ போக்குவரத்துக்கழக பொறுப்பாளர் குட்டி
தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை
திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன்
யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி
அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் விஜிதரன்
தளபதிகளில் ஒருவரான வீமன்
வனவள பாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் சக்தி குடும்பம்
சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர் இ.ரவி
முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சஞ்சை
நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா
சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி
ராதா வான்காப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவர் குமாரவேல்
தமிழீழ மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் ரேகா
மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி சித்திராங்கன்
மாலதி படையணித் தளபதிகளில் ஒருவரான சுகி
கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான அருணன்
மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மனோஜ்
நிதித்துறையைச் சேர்ந்த லோறன்ஸ் உட்பட்டவர்களின் நிலை என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment