Translate

Friday, 18 May 2012

உளவு துறை விசாரணையால் நித்யானந்தா சீடர்கள் பீதி


ஓசூர்:தமிழகம் முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்களில், உளவுத் துறை போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், பிடதி ஆசிரமத்தை தலைமையிடமாகக் கொண்டு, நித்யானந்தாவுக்கு, நாடு முழுவதும் மட்டுமில்லாது, உலக நாடுகளிலும் ஏராளமான தியான பீடங்கள், ஆசிரமங்கள் உள்ளன. நடிகை ரஞ்சிதாவுடன் இணைத்து கூறப்பட்ட விவகாரத்தில், அனைத்து தியான பீடங்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால், தியான பீடங்களுக்கு சீடர்கள் வருகை குறைந்தது.பல தியான பீடங்கள், தாக்குதல் பீதியால் பூட்டப்பட்டன. ரஞ்சிதா விவகாரம் அடங்கிய பின், தியான பீடங்கள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தற்போது, நித்யானந்தா, மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதால், மீண்டும் அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் ஏற்படத் துவங்கியுள்ளன.


இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்களில், தமிழக உளவுத் துறை போலீசார் மூலம் ரகசிய விசாரணை மேற்கொண்டு, முக்கிய புள்ளி விவரங்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, உளவுத் துறை போலீசார், தமிழகம் முழுவதும் உள்ள தியான பீடங்களில், ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, தியான பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்திய உளவுத் துறை போலீசார், பீடத்துக்கு வரும் நித்யானந்தா சீடர்களின் எண்ணிக்கை, அவர்கள் எந்தந்த இடங்களில் இருந்து வருகின்றனர், தியான பீடம் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன, தியான பீட நிர்வாகிகள் குடும்பப் பின்னணி ஆகிய புள்ளி விவரங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்ததோடு, விசாரணை எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

இது குறித்து, ஓசூர் தியான பீட அமைப்பாளர் சரவணபாபு கூறியதாவது:தியான பீடத்துக்கு, உளவுப் பிரிவு போலீசார், விசாரணைக்கு வந்தனர். அவர்கள், தியான பீட நடவடிக்கைகள் குறித்து, ஒரு சில தகவல்களைக் கேட்டனர். நாங்களும் அவற்றை தெரிவித்தோம். அவர்கள் எதற்காக வந்தனர் எனத் தெரிவிக்கவில்லை; நாங்களும் எதற்காக வந்தீர்கள் எனக் கேட்கவில்லை.இவ்வாறு சரவணபாபு கூறினார்.

மதுரை ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்ற பின், மற்ற ஆதீனங்கள், அவருக்கு எதிராக அணி திரண்டுள்ளதால், நித்யானந்தா தன்னுடை தியான பீடங்கள், ஆசிரம நடவடிக்கைகள் குறித்து, நெருக்கமான சீடர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்.வெளியுலக தொடர்புகள், நடவடிக்கைகளை, சமீப காலமாக நிறுத்தி வைத்துள்ளார். மேலும், ஆசிரமங்கள், தியான பீடங்களுக்கு வெளியாட்கள் வருவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், நித்யானந்தாவின் தியான பீட நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக, உளவுத் துறை போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment