Translate

Thursday 5 January 2012

நடன நிகழ்ச்சிக்குப் போகும் அன்பர்களே: வீட்டில் தாலிக்கொடியை வைக்கவேண்டாம்!


நடன நிகழ்ச்சிக்குப் போகும் அன்பர்களே: வீட்டில் தாலிக்கொடியை வைக்கவேண்டாம்!



சமீப காலமாக லண்டனில் புதுவகையான திருட்டு ஒன்று ஆரம்பமாகியுள்ளது. அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்குள் லண்டனில் வசிக்கும் பல தமிழர்கள் வீட்டில் நகைகள் அதுவும் குறிப்பாக தாலிக்கொடிகள் களவாடப்பட்டு வருகிறது.


நடன நிகழ்ச்சி நடக்கிறது இல்லையேல் இசை நிகழ்ச்சி நடக்கிறது அல்லாது போனால் தென்னிந்திய நடிகர்கள் வருகிறார்கள் என்று TV இல் விளம்பரம் போனால் அதனை நீங்கள் பார்க்கிறீர்களோ இல்லையோ மிக உண்ணிப்பாக கள்வர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக லண்டனில் உள்ள ஒரு பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தால் போதும்... அப் பகுதியில் உள்ள தமிழர் வீடுகளை உடைத்து உளே புகுந்து நகைகளைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் தயாரக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இது கடந்த சில மாதங்களாக நடைபெற்றும் வருகிறது. முதலில் குரொய்டன் பின்னர் ரூற்ரிங் அதன் பின்னர் ஈஸ்ட்ஹம் என்று நடந்து வந்த இத் திருட்டுகள் தற்போது மெல்ல மெல்ல நகர்ந்து ஹரோ பகுதிக்கும் வந்து விட்டது. கடந்த வாரம் கூட இப் பகுதியில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதுவும் தமிழர் வீட்டில் தான். "இது தமிழர்களால் தமிழர்களுக்கென்றே நடாத்தப்படும் ஒரு நிறுவனம்" என்று TV இல் விளம்பரம் போவது போல... இது தமிழர்களால் தமிழர்கள் வீட்டில் நடத்தப்படும் கொள்ளை என்றே சொல்லலாம். வீட்டை உடைத்து உள்ளே நுளையும் கள்வர்கள் முதலில் குறிவைப்பது தாலிக்கொடியாகத் தான் இருக்கிறது. பின்னரே அவர்கள் வேறுபொருட்களில் கைவைக்கிறார்கள். தங்கம் தற்போது விற்க்கப்படும் விலையில் தாலிக்கொடியின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு திருடப்படும் நகைகளை வாங்க நல்ல கறுப்புச் சந்தை இருப்பது ஒரு காரணமாக அமைந்துள்ளது எனலாம். இவ்வாறு திருடப்படும் நகைகளை எந்த நகைக் கடை உரிமையாளர் வாங்கி பின்னர் உருக்கி நகைகள் செய்து விற்கிறாரோ தெரியவில்லை. ஆனால் தமிழ் பெண்களின் தாலியோடு விளையாடும் இக் கும்பல் ஒரு நாள் பிரித்தானியப் பொலிசாரிடம் முறையாக மாட்டிக் கொள்ளும் என்பதில் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை. பாதிக்கப்பட்ட தமிழர்கள் தாராளமாக முன்வந்து பொலிசாருக்கு தம்மாலான எல்லாத் தகவல்களையும் தெரிவிப்பது குற்றவாளிகளைப் பிடிக்க ஏதுவாக அமையும். இதேவேளை தமது தாலி களவுபோனதால் தமது கணவனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ எனச் சில மனைவிமார் அஞ்சி பரிகாரம் செய்பவர்களிடம் சென்றுள்ளனர்.

அவர்களும் இதனை ஒரு சான்சாக வைத்து பரிகாரம் செய்யவேண்டும் சாந்தி செய்யவேண்டும் என்று சொல்லி தமது பங்கிற்கு கொள்ளையடித்துள்ளனர். ஏன் இந்த வம்பு... புதுத் தாலி ஒன்றைச் செய்து நல்ல நாள் ஒன்றில் கணவனைக் கட்டச் சொன்னால் போகிறது... என நல்ல யோசியக்காரர் ஒருவர் அறிவுரை கூறுகிறார். கேட்டுத்தான் பாருங்களேன்!

No comments:

Post a Comment