தம்புள்ளை பள்ளிவாசலின் மீது தாக்குதலை நடத்திய குழுவினர் அங்கிருக்கின்ற காளி கோயிலின் மீது தாக்குதல் நடாத்தாமைக்கான கருத்தை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் தமிழ் ஊடகவியலாளர்களை நேற்று புதன்கிழமை சந்தித்தபோதே அவர் தம்புள்ளை காளியம்மன் கோவிலின் கதையை கூறினார்.
நாட்டில் உருவாக்கியுள்ள பிரச்சினை விரைவாக தீர்க்கப்படல் வேண்டும். இங்கு பல்வேறு இன, மத, மொழிகளை சேர்ந்தோரும் வாழ்கின்றனர். அரசியலமைப்பின் பிரகாரம் இந்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை இருக்கிறது.
தம்புள்ளை சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினால் விடுக்கப்பட்ட அறிக்கைகளை ஊடகங்கள் புறக்கணித்துவிட்டன.தனியார் ஊடகங்களில் எங்களுடைய செய்திகள் வெளிவராத வகையில் தடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம், மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களும் மறைக்கப்பட்டுவிட்டன. அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.
தம்புள்ளை புனித பூமிக்குள் பள்ளிவாசல் அமைந்திருக்குமாயின் அவைதொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கலாம். மத வழிபாட்டு ஸ்தலங்கள் மீது தாக்குதல்களை நடத்த முடியாது.
பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்திய குழுவினர் அதற்கு அண்மையில் இருக்கின்ற காளி கோயிலின் மீது தாக்குதலை நடத்தாமல் சென்றுவிட்டனர். காளி அம்மன் மீதிருக்கின்ற அச்சத்தின் காரணமாகவே இந்த குழுவினர் காளி கோவிலின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றார்.
தம்புள்ளை பள்ளிவால், காளிகோயில் ஆகியவற்றுக்கு விஜயகலா எம்.பி. விஜயம்
தம்புள்ளையில் தாக்குதலுக்குள்ளாகி சேதமாக்கப்பட்ட ஹைரியா பள்ளிவாசலுக்கும் அங்குள்ள காளிகோயிலுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நேற்று நேரடியாக விஜயம் செய்து நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
நேற்றுக் காலை ஹைரியா பள்ளிவாசலுக்கு சென்ற விஜயகலா எம்.பி. குறித்த பள்ளிவாசலின் தலைவருடன் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினார். பள்ளிவாசலை குறித்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு ஆறுமாத காலம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டிய நிலை காணப்படுகின்றது என்றும் பள்ளிவாசலின் தலைவர் எம்.பி. யிடம் விளக்கிக் கூறியுள்ளார்.
இதனையடுத்து தம்புள்ளையில் அமைந்துள்ள காளிகோவிலுக்கும் அவர் விஜயம் செய்தார். இந்த காளிகோவிலும் அங்கிருந்து அகற்றப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து ஆலயத்தின் நிர்வாகிகளுடன் விஜயகலா எம்.பி. கலந்துரையாடினார்.
கடந்த 60 வருடங்களுக்கு @மலாக இந்தக் கோவிலில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டு வருவதாக இந்த ஆலய நிர்வாகத்தினர் எம்.பி.யிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனாலும், இந்து கலாசார திணைக்களத்தில் ஆலயம் பதிவு செய்யப்படவில்லையென்றும் எனவே ஆலயத்தை பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. உறுதியளித்துள்ளார்.
இதேவேளை ஆலய கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பில் அச்சுறுத்தல் நிலை காணப்படுகின்றது. ஆலயத்தை அங்கிருந்து அகற்றுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பாராளு மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்று திருமதி விஜயகலா மகேஸ்வரன் எம். பி. உறுதியளித்ததுடன் ஒரு தொகை நிதியையும் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment