Translate

Tuesday, 21 August 2012

ஆனையிறவிலும் ஆக்கிரமிப்பு 10 ஏக்கரில் கடற்படை முகாம் மீளக்குடியமரக் காத்திருந்த மக்களின் காணிகள் அம்பேல்

ஆனையிறவிலும் ஆக்கிரமிப்பு 10 ஏக்கரில் கடற்படை முகாம்
மீளக்குடியமரக் காத்திருந்த மக்களின் காணிகள் அம்பேல்
news
 ஆனையிறவில் பொது மக்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியைத் திடீரென ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினர் இரவோடு இரவாக அந்தப் பகுதி தமக்குச் சொந்தமானது என அறிவித்திருக்கின்றனர். அத்துடன் அங்கு கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதிலும் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர் ஆனையிறவு உப்பளத்துக்கு முன்பான பகுதியில் உள்ள மக்களின் காணிகளே கடற்படையினரால் நேற்றுமுன்தினம் திடீரென ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மீள்குடியமர்வுக்காகப் பதிவுசெய்து விட்டுக் காத்திருந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

 
இந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவ தற்கான ஏற்பாடுகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வந்த நிலையில், இந்த நிலம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
 
1990ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் 90 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன என்று பிரதேச செயலகப் பதிவுகள் கூறுகின்றன. தற்போது அந்தக் குடும்பங்கள் உமையாள்புரம், பரந்தன், முரசுமோட்டை, ஊரியான் ஆகிய இடங்களில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றன. அந்தக் குடும்பங்களின் சொந்தக் காணிகள் மட்டுமே அங்குள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. 
அதற்குள் அரச காணிகள் ஏதுமில்லை. 
 
இந்தப் பகுதியில் இருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கடந்த மார்ச் மாதம் நிலப் பகுதி பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து மீள்குடியமர்வுக்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலகம் அறிவிப்பு விடுத்திருந்தது. அதனை நம்பி மக்களும் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு மீள்குடியமர்வுக்காகக் காத்திருந்தனர்.
 
குடிதண்ணீரைப் பெறுவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பிரச்சினை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை காரணமாகவே அங்கு மீள்குடியமர்வு தாமதமாகி வந்தது.
இந்தக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்துக்கு ஆனையிறவு உப்பு நிறுவனத்தையே நம்பி இருந்தன. அந்த நிறுவனம் இன்னும் தொழிற்படாத நிலையில் அதன் பணி ஆரம்பத்துக்காக அவர்கள் காத்திருந்தனர்.
 
 அதேவேளை குடிதண்ணீர்த் தேவையை நிறைவு செவதற்கான நடவடிக்கைகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வந்தது. 
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்தப் பகுதியைத் திடீரென "புள்டோசர்'கள் சகிதம் துப்புரவு செய்த கடற்படையினர், "இது கடற்படைக்குச் சொந்தமான நிலம்'' என்ற அறிவித்தல் பலகையை நட்டுள்ளனர்.
 
நேற்றைய தினம் அந்த நிலப் பகுதியைச் சுற்றி முட்கம்பி வேலியிடும் பணியில் நூற்றுக்கணக்கான படையினர் ஈடுபட்டிருந்தனர் என்று எமது செய்தியாளர் நேரில் பார்த்து அறிவித்துள்ளார். கடற்படை முகாமுக்கான தற்காலிக வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதுவரை காலமும் தமது காணிகளுக்குச் சென்று அவற்றை அறிக்கை செய்து வேலியிடும் பணிகளில் ஈடுபட்டுவந்த காணிகளுக்குச் சொந்தக்காரர்களான மக்கள் கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் அதிர்ந்துபோயுள்ளனர். 
 
தமது காணிகளை எப்படியாவது மீட்டுத் தரும்படி கேட்டு அவர்கள் அரச அதிகாரிகளை நாடத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே யாழ். குடாநாட்டிலும் வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் படையினர் மக்களின் காணிகளை அபகரித்துள்ளனர். இதனைக் கண்டித்தும் எதிர்த்தும் அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தன. இந்த நிலையில் தற்போது புதிய ஆக்கிரமிப்பாக ஆனையிறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment