Translate

Saturday, 8 December 2012

போர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்


“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர மறுத்ததால் எனது எட்டு வயது நிரம்பிய மகளுக்கு எனது சொந்த வீட்டில் கூட பிறந்த நாளைச் செய்யமுடியாது”
இவ்வாறு அமெரிக்காவினை தளமாகக்கொண்ட The Washington Post ஊடகத்தில் Simon Denyer எழுதியுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்செய்தி அறிக்கையின் முழுவிபரமாவது:

சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில், பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் அகப்பட்டுக் கொண்டனர்.
“சிறுவர்கள் பசியால் அழுதனர். அந்தநேரத்தில் கஞ்சி வழங்கப்படுகின்றது என்பதை அறிந்து பதுங்குகுழிக்குள் எமது பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியில் வந்தோம். கஞ்சிகளை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தபோது எனது மகன் உட்பட பல சிறார்கள் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுக் கிடந்தனர்” என சிறிலங்காவின் வடக்குப் பகுதியிலுள்ள துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் மூன்று பத்தாண்டுகளாக தொடரப்பட்ட யுத்தத்தில், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்கள் பலவழிகளில் அடக்கப்பட்டு பல்வேறு கடினங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். ஆனால் தற்போது இந்த மக்களைப் பொறுத்தளவில் அவர்களுக்கு கிடைத்த சமாதானம் என்பது வலியுடன் கூடிய ஏமாற்றத்தையே வழங்கியுள்ளது.
தற்போது சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வாழும் தமிழ்ப் பெண்கள் தாம் எவ்வாறான இன்னல்களை எதிர்நோக்குகின்றனர் என்பதை வெளிப்படுத்துகின்றனர். மாதத்தில் இரு தடவைகள் சிறிலங்கா இராணுவத்தினர் தமது வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒவ்வொருவரையும் ஒளிப்படம் எடுப்பதாக இந்தப் பெண்கள் கூறுகின்றனர். சிறிய அளவில் மக்கள் கூடுதல் அல்லது தமக்கு அருகிலுள்ள காடுகளில் விறகுகளை சேகரிக்கச் செல்வதற்கும் கூட இந்த மக்கள் இராணுவத்தினரின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளனர்.
“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர மறுத்ததால் எனது எட்டு வயது நிரம்பிய மகளுக்கு எனது சொந்த வீட்டில் கூட பிறந்த நாளைச் செய்யமுடியாது” என கண்டாவளையைச் சேர்ந்த 46 வயதான ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக உலக நாடுகளால் மேற்கொள்ளப்படும் விமர்சனங்களை எதிர்த்து அரசாங்கத்துக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் வாழும் தமிழ்ப் பெண்கள் பலவந்தமாக அல்லது தந்திரமாக இணைக்கப்படுகின்றனர்.
தமது தேவாலயத்தில் ஒரு மெழுகுதிரியைக் கூட கொழுத்துவதற்கு தாம் அனுமதிக்கப்படுவதில்லையெனவும், மரணித்த தமிழ்ப் புலிகளுக்கு மரியாதை வழங்குவதற்காகவே இவ்வாறு மெழுகுதிரி ஏற்றப்படுவதாக சிறிலங்கா இராணுவம் சந்தேகம் கொள்வதாக பாதிக்கப்பட்ட கிராமத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனது சமையலறைக்குள் அத்துமீறி நுழையும் சிறிலங்கா இராணுவத்தினர் தன்னிடம் தேநீர் தருமாறு மிரட்டுவதாகவும், இதனால் தாம் மிகவும் அச்சமடைவதாகவும், இராணுவத்தினரின் இந்தச் செயலானது என்னை ஆத்திரங்கொள்ள வைப்பதாகவும், இந்த உணர்வை எவராலும் விபரிக்க முடியாதெனவும், ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்காகக் கொண்டு 1976ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்;டது. ஆனால் இரு பத்தாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் செயற்பட்ட புலிகள் அமைப்பின் ஆட்சியானது மிகப் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. இவ் அமைப்பானது சிறுவர்களை பலாத்காரமாக ஆட்சேர்ப்புச் செய்ததுடன், தமது பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.
சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதில் ஈடுபட்ட இருதரப்புக்களும் பல்வேறு மீறல்களில் ஈடுபட்டதாகவும், புலிகள் அமைப்பானது தனது கட்டுப்பாட்டிலிருந்த மக்களை மனிதகேடயங்களாகப் பயன்படுத்தியமை மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் எந்தவொரு தயவு தாட்சண்ணியமுமின்றி தமிழ்ப் பொதுமக்கள் மீது செறிவான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டமை மற்றும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை நிறுத்தியமை போன்ற பல குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் சபையானது முன்வைத்ததுடன் இது தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது. சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் 40,000 வரையான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சிறிலங்காவில் யுத்தமானது நிறைவுக்கு வந்துள்ள போதிலும்கூட, இந்து ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகம் காணப்படுகின்றது. சிறிலங்காவின் வடக்கின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அதாவது விவசாயம் செய்தல், மரக்கறிகளை விற்றல், விடுதிகளை நடாத்துதல், உணவகங்களை வைத்திருத்தல் மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையங்களைக் கூட சிறிலங்கா இராணுவத்தினர் நடாத்திவருகின்றனர்.
இராணுவ அடக்குமுறையின் கீழ் தாம் வாழ்வதாக தமிழர்கள் உணர்வதாக, சிறிலங்காவின் வடக்கில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாட்டுக்கான நிலையத்தை நடாத்திவரும் எஸ்.எம். பிரவீன் அடிகளார் தெரிவித்துள்ளார். “இது திறந்த சிறைச்சாலை போன்று காணப்படுகின்றது. இங்கு இராணுவமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது” என பிரவீன் அடிகளார் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் ஆதரவுடன் சிறிலங்காவுக்கு எதிராக, அதன் மீளிணக்கப்பாட்டு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டதிலிருந்து, தமிழர்களின் நாளாந்த செயற்பாடுகளில் சிறிலங்கா இராணுவத்தினர் தலையீடு செய்வதானது அதிகரித்துவருவதாகவும் பிரவீன் அடிகளார் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், நில அபகரிப்பு தொடர்பாகவும் அறிக்கையிட்ட இவரது நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் நால்வருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன், இவர்கள் மீது காடையர்கள் ஒயில் ஊற்றி தமது காடைத்தனத்தை அரங்கேற்றியதாகவும் பிரவீன் அடிகளார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நான்கு பணியாளர்களும் ஒளிந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கில் வீதிகளை அமைத்தல், விடுதிகள், பாடசாலைகள் போன்றவற்றை நிர்மாணித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு சிறிலங்கா அரசாங்கமானது பெருமளவு நிதியை வாரியிறைத்துள்ளது. காலமும், பணமும் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்ட யுத்த வடுக்களைக் குணப்படுத்தும் என சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது.
“நாங்கள் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை தட்டிக்கழிக்கவில்லை. இந்த அடிப்படையில், வடக்குக்கான அபிவிருத்திக்காக பெருமளவான நிதி ஒதுக்கப்படுவதாக சிறிலங்காவின் தென்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்” என தகவற்துறை அமைச்சர் கெகலிய றம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கிய பல்வேறு தீர்மானம் எடுத்தலில் தமிழ் மக்கள் உள்ளடக்கப்படுவதில்லை எனவும், அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பெறப்படும் நல்வாய்ப்புக்களை தாம் பெற்றுக் கொள்ள முடிவதில்லை என்பதிலும் தமிழ் மக்கள் விசனம் கொள்கின்றனர். வீதிகளை செப்பனிடுதல் மூலம் இராணுவத்தினர் மிகவேகமாக தமது பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும், நாட்டின் மீளிணக்கப்பாட்டை வீதி அமைத்தல், விடுதிகளை நிர்மாணித்தல் போன்றவற்றின் மூலம் மட்டும் பெற்றுக் கொள்ள முடியாதெனவும், இத்தீவில் வாழும் அனைத்து சமூகத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு நீதி மற்றும் பொறுப்புக் கூறல் என்பன அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், அப்போதே நாட்டில் மீளிணக்கப்பாடு உருவாக வழியேற்படும் எனவும் தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இராணுவ முகாங்களை அமைத்தல், இலாப நோக்கங் கருதி விவசாயத்தில் ஈடுபடுதல் போன்றவற்றுக்காக சிறிலங்காவின் வடக்கில் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதால், தமிழ் மக்கள் தமது நிலங்களை இழக்கின்றனர். இதனால் வடக்கில் தமிழ் மக்களின் வாழ்வியல் பாதிக்கப்படுகின்றது. பௌத்தர்கள் வாழாத இடங்களில் கூட புத்த விகாரைகள் அமைக்கப்படுவது தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவின் வடக்கு தவிர ஏனைய மாகாணங்கள் முழுவதிலும் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக கடந்த மாதம் சிறிலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. அதாவது சிறிலங்காவின் வடக்கானது யுத்தத்தின் பாதிப்புக்களை தாங்கி வாழ்வதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் யுத்தம் முடிவுற்ற கையோடு கூட இங்கு அதிபர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் போன்ற பல தேர்தல்கள் நடாத்தப்பட்டன.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அவர்களிடம் அரசியல் உரிமைகளைக் கையளிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் விருப்பங் கொள்ளவில்லை என வடக்கில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
“மீளிணக்கப்பாடு என்ற வகையில், யுத்தம் மட்டுமே முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் முரண்பாடு தற்போதும் தொடரப்படுகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நித்தியபாரதி.

No comments:

Post a Comment