Translate

Saturday, 8 December 2012

முள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் !


நாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக் கொண்டே வந்தார் கர்ணன்.
கிளிநொச்சியை நோக்கி வரும் வழியில் கண்ட இரணமடு குளத்தில் இப்போது இராணுவம் ஏதோ விமான நிலையம் கட்டுகிறார்களாமே என்று கேட்டேன்.

ஆமாம். அதைக் காரணம் காட்டி குளத்தின் நீர்த்தேக்க உயரத்தைக் குறைத்து விட்டனர். அதனால் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என்றார்.
இப்படியான பிரச்னைகளில் இராணுவத்திடம் முறையிட்டோ, எதிர்ப்பு தெரிவித்தோ எதுவும் ஆவதில்லை.
முந்தைய நாள், மன்னாரில் இருந்து தலைமன்னார் செல்லும் வழியில் உள்ள பேசாலை வெற்றிமாதா கோயிலைச் சுற்றிப் பார்த்தபோது, தாக்குதலுக்கு அஞ்சி மக்கள் அந்த ஆலயத்துக்குள் ஒடுங்கியிருந்த போது கடற்படை வெளியில் இருந்து சுட்டது.
எறிகுண்டு ஒன்றை யன்னல் வழியாக உள்ளே மக்கள் மத்தியில் வீசியது என்று காட்டினார் அந்தப் பகுதி கிறிஸ்துவ மீனவர்களின் வாழ்க்கையை களமாகக்கொண்டு நாவல்களைப் படைத்து வரும் எழுத்தாளர் உதயன்.
எங்கள் வண்டி உடையார்கட்டு மகா வித்தியாலயத்தைக் கடந்தபோது கர்ணன் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
போரின்போது, தாக்குதல் மேற்கொள்ளப்படாத பாதுகாப்பு வலயம் என உடையார்கட்டை இராணுவம் அறிவித்திருந்தது.
இந்த மகாவித்தியாலயம் மருத்துவமனையாக மாற்றப்பட்டு, போரில் காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்றுவந்தனர். ஆனால், இராணுவம் அதன் மீதே ஷெல் அடித்து ஏராளமான நோயாளிகளைக் கொன்றது.
சுதந்திரபுரத்தை வந்தடைந்தபோது நாங்கள் ஏ-35 பாதையில் இருந்து சற்றே விலகி, தேவிபுரம், இரணைபாலை, புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை வழியாக மீண்டும் பழைய சாலையைப் பிடித்து, கரையான் முள்ளிவாய்க்கால், வெள்ளான் முள்ளிவாய்க்கால் என மெள்ள நகர்ந்தோம்.
கடைசி நேரத்தில் உயிருக்கு அஞ்சி ஒடுங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான சிவிலியன்கள் ஷெல் அடித் தாக்குதல்களாலும், விமானக் குண்டு வீச்சுக்களாலும் கொல்லப்பட்ட இடங்கள் இவை.
ஆளரவமற்று நொறுங்கிச் சிதைந்து கிடக்கும் வீடுகள், எரிந்தும் வெட்டி வீழ்த்தப்பட்டும் கிடக்கும் பனை மரங்கள், இடிபாடுகளைச் சுமந்து நிற்கும் சந்தை மற்றும் பள்ளிக் கட்டடங்கள், எரிந்து குவியல் குவியலாகக் கிடக்கும் பல்வேறு வகைப்பட்ட வாகனங்கள், தகர்ந்தும் எரிந்தும் கிடக்கும் பங்கர்கள், அவ்வப்போது தென்படும் ஆயுதம் தாங்கிய இராணுவ வீரர்கள் என்பதாக அப்பகுதி முழுவதும் மரண சுவாசம்.
அவ்வப்போது எதேனும் ஒரு பயணிகள் பஸ் அல்லது சுற்றுலா பயணிகள் (டூரிஸ்ட்) பஸ் எங்களைக் கடந்து சென்றது. தேவிபுரத்துக்கு அருகில் சிறு குடியிருப்பில் கொஞ்சம் மக்கள் இருந்தனர். அதற்கு அப்பால் முல்லைத்தீவு வரை மக்கள் குடியிருப்பு ஏதும் கண்ணில்படவில்லை.
ஒரு சில பெரிய வீடுகள் மட்டும் புதுப்பிக்கப்பட்டு பூச்செடிகள் சூழ இருந்தன. அவற்றுக்கு அளிக்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு, அவை இராணுவ அலுவலகங்களாகவோ, அதிகாரிகளின் வீடுகளாகவோ இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது.
தேவிபுரத்தில் சாலை ஓரமாகப் பஸ்ஸுக்காகக் காத்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து, ‘நீச்சல் குளம் எங்கே இருக்கு?’ எனக் கேட்டார் தேவா. அந்தப் பெண் கொஞ்சம் யோசித்துவிட்டு ‘ஸ்விம்மிங் பூலா?’ எனக் கேட்டு, அந்தத் திசையைக் நோக்கிக் கை காட்டினார்.
அருகே சென்றபோது சுற்றுலா பயணிகள் (டூரிஸ்ட்) பஸ்கள் நான்கைந்து இருந்தன. இரணைப்பாலைக் காட்டுப் பகுதியில் சிறிது தூரம் வரை மரங்கள் வெட்டப்பட்டு நல்ல சாலை அமைக்கப்பட்டு இருந்தது.
பேருந்துகள் நிறுத்தும் இடத்துக்கு அருகில் இருந்த இராணுவ நிலையம் ஒன்றில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் நின்றிருந்தனர். எனினும் அவர்கள் யாரையும் கண்டுகொள்ளவில்லை. சாரிசாரியாகச் சென்று கொண்டிருந்த சிங்கள சுற்றுலா பயணிகளோடு நாங்களும் சேர்ந்து கொண்டோம்.
மிகப்பெரிய புலிகளின் முகாம் ஒன்றும், கடற்புலிகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆழமான நீச்சல் குளம் ஒன்றும் அமைந்திருந்த இடம் அது.
போர் விமானங்களைக் கண்காணிக்க புலிகள் அமைத்திருந்த ராடார் ஒன்று காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
புலிகளின் முகாம் இன்று இலங்கை இராணுவத்தின் 68-ம் படைப் பிரிவுத் தளமாக மாற்றப்பட்டுள்ளது,
அதிகாரிகளுக்கான மெஸ், படை வீரர்கள் பிரிவு என்றெல்லாம் அறிவிப்புப் பலகைகளுடன் மிக வசதியாக உள்ளது.
சுழன்றுகொண்டிருக்கும் அந்த ராடாரைப் பார்த்தவாறே மேலே சென்றோம்.
அதைத் தாண்டிக் குறுகலாகச் செல்லும் வழியில் இராணுவ வீரர்கள் மிகப் பெரிய ட்ரில்லர்களை வைத்து ஆழமாகப் பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தனர்.
இதற்குச் சற்றுத் தொலைவில் மரங்கள் வெட்டப்பட்டு குழந்தைகள் பூங்கா ஒன்றும், உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு விசாலமான கேன்டீன் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
கேன்டீனை ஒட்டி இருந்த கடற்புலிகளுக்கான பயிற்சிக்குளம், நீர் அகற்றப்பட்டு காட்சியளித்தது.
படிப்படியாக நான்கு தளங்களில் அமைக்கப்பட்ட அந்த நீச்சல் குளம் தண்ணீர் வரும் வழி, போகும் வழி, பயிற்சி முடித்தவர்கள் குளித்து, உடை மாற்றிச் செல்ல அறைகள் எனப் பக்காவாகக் கட்டப்பட்டு இருந்தது.
மேலே கம்பிகள் வேயப்பட்டு, அவற்றின் மீது கொடிகள் பரவி வானில் இருந்து பார்க்கும்போது கீழேயுள்ள நீச்சல் குளம் தெரியாத வண்ணம் அடர்ந்த காடு என்று தோற்றம் அளிக்கும் வகையில் அதைப் புலிகள் அமைத்திருந்தனர்.
இப்போது, கம்பிகளின் மீது பரவியிருந்த கொடிகள் அகற்றப்பட்டு இருந்தன. அருகில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும், ‘பயங்கரவாதிகளின் நீச்சல் குளம்’ என்று தலைப்பிட்டு விவரப்பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.
83 அடி நீளம், 22 அடி ஆழம், கடற்படைக்கு எதிரான தற்கொலைப் போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கென 2001-ல் கட்டப்பட்டது என்பது போன்ற விவரங்கள் இருந்தன.
உடை மாற்றுவதற்கு அறைகள் அருகில் அமைக்கப்பட்டு இருப்பதில் இருந்து, தலைமையில் இருந்தவரும் அவருக்கு நெருக்கமானவர்களும்கூட இதைப் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது என அந்த வாசகங்கள் முடிந்திருந்தன.
வட்டுவாகல் பாலம்
கேன்டீனில் வாங்கிய பண்டங்களைச் சுவைத்தவாறே குளத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டும் படங்கள் எடுத்துக்கொண்டும் மக்கள் கூட்டம். ஒரு பெருமூச்சுடன் வெளியேறிப் பயணத்தைத் தொடர்ந்த நாங்கள், மீண்டும் பேரழிவுகளின் ஊடாக புதுமாத்தளன், அம்பலவான் கொட்டணையைத் தாண்டி முள்ளிவாய்க்காலை வந்தடைந்தோம்.
ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மரண அமைதியுடன் காட்சியளித்தது. அந்த ஊரின் சந்தை சிதைந்துகிடந்தது.
கொடிய போர்க்குற்றங்களுக்கு ஆளாகி எந்த ஆதரவுமற்று நம் கண்முன் செத்து மடிந்த மக்களுக்கு மனசுக்குள் அஞ்சலி செலுத்திய வண்ணம் முள்ளிவாய்க்காலையும் முல்லைத் தீவையும் இணைக்கும் வெட்டுவாகல் பாலத்தை வந்தடைந்தோம்.
நந்திக் கடலையும் வங்கக் கடலையும் இணைக்கும் குறுகலான நீர்வழி மீது அமைந்த அந்தப் பாலத்தின் வழியாக வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களைத்தான் இரக்கமின்றிச் சுட்டுத் தீர்த்தது இலங்கை ராணுவம். மரண அழிவுகளைப் பற்றிய நினைவுகள் மட்டும் இல்லாதிருந்தால் மிக அழகான இடம்தான் அது.
முல்லைத்தீவின் நுழை வாயிலில் 59-வது படைப் பிரிவின் பெயர்ப்பலகை வரவேற்புக் கூறுகிறது. அருகில் உள்ள கோயிலில் ஏதோ வழிபாடு. முல்லைத் தீவு பேருந்து நிலையத்தைத் தாண்டிச் சென்று ஒரு முஸ்லிம் ஹோட்டலில் கிடைத்ததைச் சாப்பிட்டோம்.
1996-ல் இங்கே மிகப்பெரிய ராணுவ முகாம் ஒன்றைப் புலிகள் வெற்றிகொண்டதை நினைவுகூர்ந்தார் தேவா. சுமார் 1,600-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் அந்தத் தாக்குதலின்போது கொல்லப்பட்டனர்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் ஆகக் குறைந்த மக்கள் தொகையுள்ள மாவட்டம் என முல்லைத்தீவை அறிவித்துள்ளது இலங்கை அரசு.
இதன் பொருள் வளமிக்க இந்த மாவட்டத்தில் மிகச் சமீபத்தில் சிங்களக் குடியேற்றம் நிகழப் போகிறது என்பதுதான் என்று பேராசிரியர் ரவீந்திரன் சில நாட்கள் முன் சொன்னது நினைவுக்கு வந்தது.
மீண்டும் வட்டுவாகல் பாலத்தைக் கடந்த நாங்கள் வந்த பாதையில் செல்லாமல் இறுதி உச்சப்போர் நடந்த புதுக்குடியிருப்பை நோக்கிச் சென்றோம்.
இங்கிருந்த மிகப்பெரிய புலிகளின் முகாம் இப்போது இராணுவத் தளமாக மாற்றப்பட்டுள்ளது. மிகப்பெரிய அரச வெற்றிச் சின்னம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அதை ஒட்டி வழக்கம்போல கார் பார்க்கிங், கேன்டீன், பனை பொருள் விற்பனை நிலையம் ஆகியவற்றின் மத்தியில் புலிகளின் போர்த் தளவாடங்களை வைத்து அமைக்கப்பட்ட ‘போர் அருங்காட்சியகம்’ காட்சி அளிக்கிறது.
உள்ளே நிற்கும் இராணுவ வீரர்கள் அந்தக் கருவிகளின் செயல்பாட்டை சிங்களத்தில் விளக்கிச் சொல்கின்றனர்.
கண்களில் வியப்பு தொனிக்க அவற்றைப் பார்த்து அசந்துபோகிறார்கள் சுற்றுலா வந்திருக்கும் சிங்கள மக்கள்!
ஜூனியர் விகடன் கட்டுரை தொடர்ச்சி- 3
No comments:

Post a Comment