Translate

Saturday, 4 August 2012

"ஆஸ்கரைவிட உயர்ந்த ரஜினியின் பாராட்டு" -நடிகர் சுதீப் பெருமிதம்


"ஆஸ்கரைவிட உயர்ந்த ரஜினியின் பாராட்டு" -நடிகர் சுதீப் பெருமிதம்
 நான் ஈ படத்துக்காக ரஜினியிடமிருந்து எனக்குக் கிடைத்த பாராட்டு ஆஸ்கரை விட உயர்ந்தது என்று கூறியுள்ளார் முன்னணி கன்னட நடிகர் சுதீப்.பதினைந்து ஆண்டுகளாக கன்னடத்தில் நடித்து வரும் சுதீப் நடித்துள்ள முதல் நேரடி தமிழ்ப் படம் நான் ஈ. தமிழை பிழையின்றி நன்றாகவே பேசுகிறார் சுதீப்.

 
சமீபத்தில் நான் ஈ படத்தின் வெற்றியைக் கொண்டாட நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்காக சென்னை வந்திருந்தார் சுதீப்.தன் அறிமுக தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து, நெகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும் அடைந்துள்ள சுதீப், அதற்காக தன் மனதில் ஆழத்திலிருந்து நன்றி சொல்வதாக் கூறினார்.
 
கன்னடத்தின் மிகப் பெரிய நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்திலிருக்கும்போது, நான் ஈ படத்தின் எதிர்மறை நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டது எப்படி? என்ற கேட்டதற்கு, "நான் இந்தப் படத்தின் கதையைப் பார்க்கவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு நான்கு வரியில் இந்தப் படத்தின் கதையைச் சொல்லிவிட்டார் இயக்குநர் ராஜமௌலி.
 
அந்தக் கதை என்னை ஈர்க்கவும் இல்லை. ஆனால், இவருடன் பணியாற்ற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை, இந்தப் படத்தை ஒப்புக் கொள்ளவைத்தது. இன்னொன்று, அவர் எந்தக் கதையை சொன்னாலும் அவர் அதை எடுக்கும் விதம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பினேன்," என்கிறார் சுதீப்.
 
அடுத்தடுத்து தமிழ்ப் படங்கள் பண்ணுவீர்களா...?
 
"இல்லை என்று சொன்னால் அது பொய்யாகிவிடும். ஆனால் இப்போதைக்கு நான் ஈ படத்தின் வெற்றியை அனுபவிக்கும் மனநிலையில்தான் இருக்கிறேன். காரணம், நான் ஈ, ஈகா இரு படங்களுக்கும் நான் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாகப் பட்ட கஷ்டம் அப்படி. அத்தனை காட்சிகளையும் தமிழ் - தெலுங்கு என மாற்றி மாற்றி எடுத்தபோது, மனதளவில் பெரிய பாதிப்பை உணர்ந்தேன். அதிலிருந்து வெளியில் வர கொஞ்சம் அவகாசம் வேண்டும்," என்றவர், தன் வாழ்க்கையின் ஆஸ்கர் விருதினைப் பெற்றுவிட்டதாக அறிவித்தார்.
 
"சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்னைப் பாராட்டிவிட்டார். அது ஆஸ்கர் விருதை விட மேலானதாக நான் கருதுகிறேன்.நான் ஈ வெற்றிக்குப் பிறகு, ஒரு நாள் நானும் கன்னட திரையுலகில் என் நண்பர் ரவிச்சந்திரனும் ஓய்வாக பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு போன்கால் வந்தது ரவிச்சந்திரனுக்கு. உடனே அவர், 'உன்னிடம் ஒருவர் பேச வேண்டும் என்கிறார்.. பேசு' என்றார்.
 
நான் உடனே யாராக இருக்கும் என்ற யோசனையுடன் போனை வாங்கி, காதில் வைத்தேன். எதிர்முனையில் அவர் குரல். கன்னடத்தில் மிக உற்சாகமாக, 'உன்னால என் தூக்கமே போச்சுப்பா..' என ஆரம்பித்தார். என்னால் நம்ப முடியவில்லை. அவராகத்தான் இருக்குமா? அல்லது யாராவது அவர் குரலில் பேசி நம்மை கலாட்டா செய்கிறார்களா...
 
நீங்க ரஜினி சாரா' என்று கேட்க முடியுமா என்ன? கொஞ்சம் தயக்கத்துடன்தான் பேசினேன். ரஜினி சார்தான் என்று உறுதிப் படுத்திக் கொண்டேன். 'இதுவரைக்கும் வில்லனா நடிக்கிறதுல நான்தான் நம்பர் ஒன்னுன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். நீங்க என்னை மிஞ்சிட்டீங்க... வெல்டன்," என்று அவர் பாராட்டினப்போ, நான் இந்த உலகத்திலேயே இல்லை. என்னைப் பொருத்தவரை, அவர் பாராட்டு எனக்குக் கிடைச்ச ஆஸ்கர் விருது. ஏன் அதைவிட மேலானது. அவருடைய டைரில என் போன் நம்பரும் ஏறிடுச்சி என்பதே எத்தனை பெருமையானது...," என்றார் உணர்ச்சி ததும்ப.

No comments:

Post a Comment