Translate

Monday, 16 July 2012

திருமலையில் தமிழ் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட 37 பேர் விண்ணப்பம் _


  எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும் வகையில் 37 பேர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் தீவிர பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையினை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு பிரமுகர்கள் மேற்கொண்டுள்ளனர்.


இவ்வாறு விண்ணப்பித்தோரில் கடந்த காலங்களில் கல்வித்துறையில் உயர்மட்ட அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்யப்படவுள்ள அதேவேளை நீண்ட காலம் கட்சிப் பணியாற்றியவர் இரண்டாவது வேட்பாளராக தெரிவு செய்யும் வகையிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூதூரைச் சேர்ந்தவரும் கூட்டறவுத் துறையில் பணியாற்றி வரும் மற்றொருவரும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதுடன் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சமூகப் பணியாளர் ஒருவரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் நேற்று முழுவதும் சுங்க வீதியில் உள்ள கட்சிப் பணிமனையில் ஏனைய உயர்மட்ட கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் வேட்பாளர் தொடர்பான இறுதி முடிவினை மேற்கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் சுமுகமான நிலையில் இந்தத் தெரிவினை மேற்கொள்ளவேண்டும் என்பதில் கூட்டமைப்பினர் ஒன்றுபட்ட நிலையில் இறுதிக்கட்ட தேர்வினை மேற்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment