உண்ணாவிரதத்தினைக் குழப்பும் நடவடிக்கையில் அரசு!
கூட்டமைப்பு – இராணுவம் முறுகல்
வவுனியா நகர சபை வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தினைக் குழப்ப முற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இலங்கை அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, சிங்கள மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைக் குழப்பும் நடவடிக்கையில் வளாகத்தின் அனைத்துப் பாதைகளிலும் பெருமளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதைகளை அடைத்து உள்ளே செல்பவர்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
பாதைகளை திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இராணுவத்தினரும் பொலிஸாரும் தமது நடவடிக்கையினைத் தொடர்ந்தும் முன்னெடுத்திருக்கின்றனர்.
இதனால் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இராணுவத்தரப்பிற்கும் முறுகல் நிலை ஏற்பட்ட போதிலும் பாதைகள் திறக்கப்படவில்லை. இதனை அடுத்து உண்ணாவிரதத்தில் இருந்த கூட்டமைப்பினர் அங்கிருந்து எழுந்து பாதையைத் திறக்குமாறு கோரியதுடன் ஏ-9 நெடுஞ்சாலையின் போக்குவரத்தினைத் தடுத்து நிறுத்திப் போராடுவோம் என்று தெரிவித்தினர். நிலைமை மோசமடைவதை உணர்ந்த இராணுவத்தரப்பு வளாகத்திற்கான ஒரு பாதையை மட்டும் திறந்திருக்கின்றது.
ஆனாலும் அந்தப் பகுதியிலும் ஏனைய வீதிகளிலும் இராணுவக் கெடுபிடிநிலை தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நூறுக்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்ததத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இது குறித்து பொலிஸ் அதிகாரிகளுடன் கூட்டமைப்பினர் தொடர்பு கொண்டு கேட்டபோது உங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவே பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு வரவளைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் அரசின் திட்டமிட்ட நடவடிக்கை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment