Translate

Monday, 17 October 2011

தமிழர்களை அடிமைகளாக்க அழைப்பு விடுக்கும் சிங்கள அரசு!

தமிழர்களை அடிமைகளாக்க அழைப்பு விடுக்கும் சிங்கள அரசு!
ஈழத் தமிழர்களின் சுதந்திரக் கோரிக்கை வீழ்த்தப்பட்டுவிட்டது. அவர்களது பலமும் முறியடிக்கப்பட்டுவிட்டது. ஈழத்தின் அனைத்துக் கடல் பரப்பும் சிங்கள ஆட்சியாளர்களின் ஆளுமைக்குள் வந்துவிட்டது. உரிமை என்ற குரல் முற்றிலுமாக நசுக்கப்பட்டுவிட்டது” என்று செய்திகள் பரப்பப்படுகின்றன. கடந்த 2500 ஆண்டு கால வரலாற்றில் சிங்கள இன ஆட்சியாளர்கள் ஈழத்தின் ஒட்டுமொத்த கடல் பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது இதுவே முதல் தடவையாகும் என்பது மட்டும் உண்மையாகும்.


   வன்னிமுகாம்களில் அடைக்கப்பட்ட எங்கள் மக்களாக இருந்தாலும் சரி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வரும் எங்கள் இன மக்களாக இருந்தாலும் சரி இரண்டு பகுதியினருமே ஓர் பாதுகாப்பற்ற கைதிகளாகத்தான் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

   சிங்கள அரசு எந்தத் தமிழரையும் கைது செய்யலாம், விசாரணை செய்யலாம், அல்லது, கடத்திச் செல்லலாம், சித்திரவதைச் செய்து கொலை செய்யலாம், இவை எவற்றுக்கும் நீதிவிசாரணை கிடையாது. கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை. கேள்வி கேட்பதற்கும் யாரும் கிடையாது.

   சிங்கள அரசுக்கு அடிமையான இயக்கங்கள்:

   சிங்கள அரசாங்கத்தை அண்டிப் பிழைக்கும் சில தமிழ் இயக்கங்கள் இன்றைய சூழலில் தங்களை ஓர் ஆட்சியாளர்களாகக் காண்பிக்கலாம். சில சலுகைகளைப் பெற்றுத் தருவது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தலாம். ஆனால் இவர்கள் அனைவரும் சிங்கள அரசின் அடிமைகள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். சிங்கள அரசின் பாதுகாப்பில், அவர்களது பணத்தில், அவர்களது அதிகாரத்தின் கீழ் வாழ்ந்தவர்கள் என்பதனையும் மறந்துவிடக்கூடாது.

   “ஈழத்தில் அமைதி திரும்பிவிட்டது, நல்வாழ்வு மலரப் போகிறது, திரும்பி வந்தால் பணமும், வாழ்வும் வழங்குகிறோம்” என்று தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகள் முகாம்களில் தமது முகவர்கள் மூலமாக செய்திகள் பரப்புகின்றனர். இதனை நம்பி பலரும் முன்பதிவு செய்து ஈழம் திரும்ப முற்படுகின்றனர் என்ற செய்தி எட்டுகிறது.

   ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளில் நேரடியாகத் தலையீடு செய்யக் கூடிய நாடு இந்தியா மட்டுமே. ஏனைய நாடுகள் வெறும் அனுதாபம் தெரிவிக்கலாம் அறிக்கைகள் விடுக்கலாம். அறிக்கைகள் சிறிலங்காவை பாதிக்கப்போவதில்லை. இந்தியாவின் தலையீடுதான் தமிழர்களுக்கு பக்கபலமானது என்பதை சிறிலங்கா நன்கறியும். இதனை முறியடிக்க இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

   விடுதலைப் புலிகளை அழிக்க சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா, செக் குடியரசு, பிரிட்டன், ரசியா போன்ற நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெருமளவில் பெற்று வெற்றிகண்டது சிங்கள அரசு. விடுதலைப் புலிகள் ஏனைய தமிழ் விடுதலை இயக்கங்களை அழித்தனர். சிறிலங்கா அரசு புலிகளை அழித்து ஒடுக்கினர். விவேகமற்ற போர் தமிழர்களை வீழ்த்தியது. இந்திய முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியைக் கொலை செய்ததன் மூலம் இந்தியா தமிழர்களுக்கான பாதுகாப்புக் கடமையிலிருந்து விலகிக் கொண்டது,

   மகிந்தனே உண்மையான பயங்கரவாதி!

   தமிழர்கள் மத்தியிலிருந்த ஒற்றுமையின்மை, பகையுணர்வு, சந்தர்ப்பவாதம், காட்டிக்கொடுப்புகள் இவற்றின் மூலமாகத்தான் சிங்கள ராணுவம் வெற்றிகண்டதே தவிர அவர்களது வீரத்தின் மூலமல்ல. சிங்கள அரசு அனைத்துத் தரப்பினரையும் தமிழ் இயக்கங்ளைக் கூட தமது பக்கம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொண்டது. பலநாடுகளில் அவர்கள் இவற்றுக்காகச் சூழ்ச்சிகள் செய்தனர். இதன் மூலம் வெளியுலகுக்கு அவர்கள் காண்பித்தது புலிகளின் பயங்கரவாத முகத்தைத்தான்.

   பயங்கரவாதத்தை வீழ்த்துகிறோம் உதவுங்கள் என்று உலக நாடுகளிடம் பிச்சை கேட்டது சிறிலங்கா. பயங்கரவாதம் என்ற கூற்றில் உண்மை இருந்ததை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் சிங்கள அரசின் நோக்கம் புலிகள் அல்ல. பதிலாக தமிழ் இனம் அழிக்கப்பட வேண்டும் அல்லது ஒடுக்கப்பட வேண்டும் அல்லது விரட்டப்பட வேண்டும் என்ற கொள்கையினைத்தான் இவர்களது துப்பாக்கிகளுக்கு கொழுப்புத் தடவும் சிப்பாய்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது. பௌத்தமும் அவர்களுக்கு அதனைத்தான் போதித்தது.

   சங்கமித்தையும், மகிந்தனும் இலங்கைக்கு வந்து பௌத்த மதத்தைப் பரப்பினர். தேவநம்பிய தீசன் என்னும் அரசனையும் இந்த இருவரும்தான் பௌத்த மதத்துக்கு மாற்றினர். அப்படி மதம் பரப்ப வந்த மகிந்தனின் பெயரைக் கொண்டவர்தான் இன்றைய மகிந்த ராஜபக்ச. எனவேதான் இன்றைய மகிந்தனும் தனது ஆட்சியில் தமிழர் பகுதிகளில் பௌத்தவிகாரைகளை அமைத்துவருகிறார். தமிழ் இனத்தை அழித்து, முழு இலங்கையையும் பௌத்தர்களின் நாடாக்குவதுதான் மகிந்தனின் இன்றைய கடமையாகவும் இருக்கிறது. இந்தத் திட்டத்துக்குப் பின்னால் பல படித்த சிங்கள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

   அனைத்தையும் இழந்து நிற்கும் எம்மினம்!

   இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த தடையாக இருக்கும் ஒரே நாடு இந்தியாதான். இந்தியாவை இது விடயத்திலிருந்து தவிர்க்க என்னென்ன வழிகளைப் பின்பற்ற முடியுமோ அவற்றையெல்லாம் செயற்படுத்தும்படி மகிந்தன் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

   இந்திய மண்ணில் ஈழத் தமிழர்கள் இருக்கும் வரையில்தான் இந்தியத் தலையீடு இலங்கையில் இருக்கும். ஈழ அகதிகளை இலங்கைக்கு இழுத்து வந்துவிட்டால் இந்தியா எந்த வகையிலும் தமிழ் இனப் பிரச்சினைகளில் தலையிடும் தகுதியை இழந்துவிடும் என்பது மகிந்தனின் இன்றைய சிந்தனை.

   இந்தச் செயற்திட்டத்துக்குத்தான் மகிந்தனை அண்டிப்பிழைக்கும் சந்தர்ப்பவாத தமிழ் இயக்கங்களை இப்போது அவர் பயன்படுத்துகிறார். பணம் தருகிறோம், வீடு தருகிறோம், நிரந்தரத் தொழில் தருகிறோம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி ஈழ மக்களை தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார் மகிந்தன். சிங்கள இனத்தவர் நேரடியாக முகாம்களுக்கு வந்து இந்தப்பணியினைச் செய்யமுடியாது. எனவேதான் சந்தர்ப்பவாத தமிழ் இயக்கங்களைப் பயன்படுத்துகிறது சிங்கள அரசு. இந்தச் செயற்திட்டத்துக்கு இலங்கையின் துணைத் தூதராலயம் சென்னையில் மிகவும் இரகசியமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

   எங்கள் ஈழ மக்கள் கடந்த கால் நூற்றாண்டாக தமிழக முகாம்களில் அனைத்தையும் இழந்து விடுதலை ஒன்றின் மூலமே விடிவு என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர். 1987, 2002 ஆகிய ஆண்டுகளில் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு ஈழம் திரும்பிய எங்கள் மக்கள் மீண்டும் இந்தியாவில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டதை நாம் மறந்துவிட முடியாது.

   இனி ஒருதடவை ஈழ மக்கள் நாடுதிரும்ப வேண்டுமென்றால் உரிமை உள்ள மக்களாகவும், பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் உள்ள ஓர் நிலையில் தான் தாயகம் திரும்ப வேண்டும். தமிழர்கள் வலுவாக இருந்த காலங்களிலேயே அகதிகளாக வெளியேறவேண்டிய நிலை மூன்று கட்டங்களில் ஏற்பட்டது. (1983,1990, 2002).

   மரணக் களத்தில் தேர்தல்:

   “இன்று தமிழர்கள் வலுவான நிலையில் இல்லை. அரசியல், பொருளாதாரம், சமூக அமைப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் எங்கள் எதிரிகள் எங்கள் இனத்தை அழைக்கின்றனர் வாருங்கள் வாழவைக்கிறோம்” என்று அதுவும் சந்தர்ப்பவாத, அண்டிப்பிழைக்கும் குழுக்களைக் கொண்டு.

   முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் இனம் அழிக்கப்பட்ட போது இந்தக் குழுக்களால் எதனையும் மகிந்தனிடமிருந்து யாசிக்க முடியவில்லை. படுகொலைகள் நடந்த ஒருமாதக் காலத்தில் மகிந்தன் வடக்கு மாகணத்தில் உள்ளுர் சபைகளுக்குத் தேர்தல் நடத்துகிறார். மூன்று லட்சம் தமிழர்கள் முள்ளுக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் போது தேர்தல் நடத்த ஏவப்பட்டவர்கள் இந்தச் சந்தர்ப்பவாதிகள். அந்தத் தேர்தலில் கலந்துகொண்ட அத்தனை இயக்கங்களும் தமிழ் இனத்தின் இரத்தத்;தில் பதவி அடைய முற்பட்டவர்களே அல்லாமல் இவர்கள் தமிழர்களாக இருக்கத் தகுதியற்றவர்கள். இவர்களது கூற்றுகளை நம்பி எஞ்சிய தமிழர்களும் ஏமாந்துவிடக்கூடாது. நிரந்தரமான ஓர் தீர்வு எட்டும்வரை தமிழர்கள் இந்த நரிகளின் கதைகளைக் கேட்டு சிங்கள ஆட்சியாளரிடம் சிக்கிக்கொள்ளக்கூடாது.

   நாம் கேட்டது எமது சொந்த நாட்டை. அது மறுக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சமாக நாம் பாதுகாப்புடன் வாழ்வதற்கு என்றாலும் உரிய வழிகளை வகுக்க வேண்டும். அப்படி ஏற்படுத்தப்படும் வழிகளுக்கான தடத்தை நாமே அழித்துவிடக்கூடாது. மகிந்தன் தமிழ் இனத்துக்குச் செய்த கொடுமைகளை உலகம் வேடிக்கைப் பார்த்தது. காரணம் புலிகளின் பயங்கரவாதம் என்ற செயல்பாடு உலக அனுதாபத்தை மறைத்து நின்றது. இதனால் மகிந்தனுக்கு வெற்றிகிட்டியது. எனவே, மகிந்தன் அடுத்த நகர்வுக்கு புறப்பட்டுவிட்டார்.

   வேடிக்கை பார்க்கும் ஐ.நா.மன்றம்:

   தமிழ் இனத்துக்கு உரிமை மறுக்கப்படுவது கடந்த அரை நூற்றாண்டாக நடைபெற்று வருவதுதான். இதனை உலகத்தவர் நன்கறிவர். குறிப்பாக இந்தியா அனுபவத்துடன் தெரிந்துவைத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட காலத்தில் உலகின் பல இனங்களுக்கும் நாடுகளுக்கும் விடுதலை கிடைத்தன. ஆனால் ஈழத்தின் தமிழ் இனத்துக்குத்தான் மெல்ல மெல்ல உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு இறுதியில் அழிவையே சந்தித்தது.

   தமிழ் இனத்தினது நிலப்பரப்புக்கள், உரிமைகள் என்று அனைத்தையும் பறித்தது மட்டும் அல்லாமல் வன்முறை மூலம் எங்கள் இனத்தை அழிக்க முற்பட்டன சிங்கள அரசுகள். 1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய காலகட்டங்களில் கலவரம் என்ற போர்வையில் சிங்கள அரசும், அதன் படைகளும், பௌத்த தீவிரவாதிகளும் இணைந்து எங்கள் இனத்தைத் தாக்கி அழித்தனர். 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இந்தியா இலங்கை அரசைத் தட்டிக் கேட்க ஆரம்பித்தது. ஐ.நா.மன்றம் என்ற அமைப்பு எங்கள் இனம் படுகொலை செய்யப்படும் போது அதனைத் தடுத்து நிறுத்த முற்பட்டதே கிடையாது. தொடர்ந்தும் சிங்கள அரசுக்கு அந்த மன்றத்தில் அங்கத்துவம் வழங்கியே வந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.

   விடுதலை, சமாதானம், நல்வாழ்வு என்ற கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மன்றம் (ஐ.நா.) தமிழ் இனம் அழிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டு மொத்த உலகத்தையும் ஏமாற்றியது. பேரழிவு முடிந்ததும் உலங்கு ஊர்தியில் (ஹெலிகாப்டர்) பார்வையிட்டு சென்றார் ஐ.நா.மன்றத் தலைவர். அரசியல் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட இந்த அமைப்பு சில நாடுகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் மூலம் எங்கள் இனம் சுதந்திரம் அடைய வாய்ப்பே இல்லை. எந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தாலும் சீன நாடு அதனை முறியடிக்க தனக்கான “வீட்டோ”(தடுப்பு) அதிகாரத்தைப் பயன்படுத்தும். காரணம் சிங்கள அரசுக்கும் சீனாவுக்குமான தொடர்பு அத்தனை வலிமையானது. தெற்காசியாவில் சீனாவின் தளம் சிங்களப் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதே இதற்கான காரணம்.

   அத்துடன் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பௌத்தம் வேரூன்றியுள்ளது. பௌத்தனுக்கு பௌத்தன் ஆதரவு என்ற கொள்கையும் இவற்றுடன் இணைந்துள்ளதால் சீனா சிங்களவரின் பக்கம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

   உரிமைகள் உறுதி செய்யப்படும்வரை, தாயகம் திரும்ப வேண்டாம்!

   எங்கள் இனத்துக்கு இன்றைய காலகட்டத்தில் துணைநிற்கக் கூடிய நாடு இந்தியா மட்டுமே. ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா ஒதுங்கி நின்றதற்கான காரணம் உலகம் அறிந்ததே. அதனை விளக்கவேண்டிய தேவை இப்போது இல்லை. எனவே, ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் விடிவு கிடைக்கும். தவிர சிங்கள அரசுடன் அண்டிவாழும் இயக்கங்களின் பொய் உரையினை நம்பி சிறிலங்கா சென்றடைந்தால் நாமே வலியச் சென்று சிங்கள ஆட்சியாளர் வெட்டி வைத்துள்ள குழியில் வீழ்வதற்கு சமமாகும்.

   எனவே, ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு, விடுதலை, நிருவாகப் பகிர்வு, சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றுதல் போன்றவற்றுக்கு இந்தியா உறுதியளித்துச் செயற்படுத்தும் வரை யாரும் இலங்கை திரும்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். விடியல் தோன்றும் பொறுத்திருங்கள் என்றும் வேண்டிக்கொள்கிறோம்.

   நன்றியுடன்

   ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

   (ஈ.என்.டி.எல்.எப்.)

http://endlf.com/ENDLF/Tamil/announcementsfull.php?announcementsid=15

No comments:

Post a Comment