Translate

Sunday 6 November 2011

12 வருடங்களாக ஐரோம் சர்மிளா உண்ணாவிரதம் ( செய்தி - படங்கள் )


சமூக சேவகர் ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதம் 11 ஆண்டுகளைத்தாண்டி 12வது ஆண்டை எட்டியது.

ஆயுதப்படை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐரோம் சர்மிளா தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.   வெறும் தண்ணீரை மட்டும் உணவாக உட்கொண்டு அவர் 11 ஆண்டுகளாக 
உண்ணாவிரதம் இருந்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் உலக நாடுகள் உயரிய விருதுகளை வழங்கியுள்ளன.



சர்மிளாவின் போராட்டம் நியாயமானதே என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றளவும் மணிப்பூரில் ஆயுதப்படை வீரர்களுக்கும் மாணவர் அமைப்பினருக்கும் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஐரோம் சர்மிளாவின் தொடர் உண்ணாவிரதத்தை அடுத்து கடந்த 2004 ம் ஆண்டுன் இம்பாலில் 7 சட்டமன்ற
தொகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் திரும்ப பெறப்பட்டது.  

ஆனால்,  அப்போது பிரிவிணைவாதிகள் 
நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து அந்த இடங்களில் சிறப்பு சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது.    நாகா பிரிவிணைவாதிகள் மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அவசியமானது என்பது மணிப்பூர் முதல்வரின் கருத்தாகும்.

ஆனால் அதனை திரும்ப பெற வலியுறுத்தி,  தடுப்புக்காவலில் இருந்த படி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து 
வருகிறார் ஐரோம் சர்மிளா.    

 















ந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. 1972ம் ஆண்டு வரை யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர், பின், தனிமாநிலமானது.
கடந்த பல ஆண்டுகளாக, சுயாட்சி உரிமை கோரி, நக்சலைட்களும், பயங்கரவாதிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த 1980ம் ஆண்டு முதல், பயங்கரவாதிகளையும், நக்சலைட்களையும் ஒடுக்குவதற்காக ராணுவத்திற்கு “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ வழங்கப்பட்டது.
இந்த சிறப்புச் சட்டத்தின்படி, பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே அது பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட, தங்கள் மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி, எங்கு, எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்த முடியும். ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வேண்டியதில்லை.

இந்த சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து, அங்கு மனிதஉரிமை மீறல்கள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

ராணுவத்தினரால், அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது, பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக் கப்படுவது என மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதனால், ராணுவத்தினரின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். மணிப்பூர் தலைநகரம் இம்பாலுக்கு அருகே மாலோம் என்ற இடத்தில், கடந்த 2000ம் ஆண்டு, நவம்பர் 3ம் தேதி பஸ்சுக்காக, காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் 10 பேரை, ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது.
மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, சமூக ஆர்வலரான ஐரோம் ஷர்மிளா என்ற இளம்பெண், மணிப்பூர் மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.
ஐரோம் ஷர்மிளாவின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது.
 அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத்  தனது வீட்டிற்குச் செல்லவில்லை. 
மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் – அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் – அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார்.  உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும்.
அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை. 

அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது தாயாரின் மடியில் தலை சாப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.

No comments:

Post a Comment