Translate

Saturday, 5 November 2011

அமெரிக்கா நுழைய சீமானுக்குத்தடை: காரணம் அவர் புலியாம்

அமெரிக்கா நுழைய சீமானுக்குத்தடை: காரணம் அவர் புலியாம்

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள
சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.


இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள்
அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு
அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு
அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர்.



இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு
சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீமான் நியூயார்க் சென்று
சேர்ந்தபோது, அவரை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி விமான
நிலையத்திலேயே தடுத்து வைத்துள்ளனர்.

இதற்கான காரணம் கேட்டதற்கு, சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு
நெருக்கமானவர் என்றும், அவரை அனுமதித்தால் அது அமெரிக்க நாட்டின்
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகலாம் என்ற அச்சம் காரணமாக அனுமதி
மறுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

சீமானுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோது இந்த உண்மைகள் அவர்களுக்கு
தெரியாமல் போனது ஏன்? இதிலிருந்து தமிழினத்தின் நலனுக்கு எதிரான சக்திகள்
அளித்த தகவல்கள் பேரிலேயே சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது
தெரிகிறது.

இது அமெரிக்காவில் நடை முறையில் உள்ள மனித உரிமை, கருத்துச் சுதந்திர
சட்ட உரிமைகளுக்கு முரணான நடவடிக்கையாகும். இந்நடவடிக்கையை நாம் தமிழர்
கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக உண்மையாகப்
போராடிவரும் அனைத்து தமிழர் தலைவர்களும் இப்படிப்பட்ட சட்ட
அராஜகங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக உள்ள அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரை
இதேபோல்தான் சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியேற்ற துறை விமானத்தில்
வைத்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. அதுதான் இன்றைக்கு
சீமானுக்கும் நடந்துள்ளது.

தமிழீன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள பவுத்த
இனவாத ஆட்சியின் அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று, தமிழினப்
படுகொலைக்கு உதவிய அரசுகள், இன்று தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை
அரசியல் தளத்திலும் முடக்க இப்படிப்பட்ட வன்செயல்களில் ஈடுபடுகின்றன.

இன்றைக்கு சீமானுக்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட
அநீதியாகும். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தமிழினத்தின் அரசியல்
போராட்டம் ஒருபோதும் முடங்கிவிடாது. தமிழீழ விடுதலைக்காகப் போராடி தங்கள்
இன்னுயிரைத் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் ஆத்ம பலத்தை
சிந்தையில் ஏந்தி விடுதலைப் போராட்டம் வென்றே தீரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment